மன்னர் சித்திரசேனன் மிகுந்த கோபத்தில் இருந்தார். வழக்கமாக மிகச் சரியான நேரத்திற்கு வரும் மந்திரி சுபாங்கன் இன்னும் வரவில்லை. அதுதான் அரசரின் கோபத்திற்குக் காரணம். அப்போது பதற்றமாகவும், உடைகளில் சேறு, சகதியோடும் உள்ளே நுழைந்தார் சுபாங்கன்.
“என்ன மந்திரியாரே, தலைமைப் பொறுப்பில் இருக்கும் நீரே அரசவைக்கு இப்படித் தாமதமாக வரலாமா? அது இருக்கட்டும், என்ன உமது உடைகள் சேறும் சகதியுமாய் உள்ளன?”
“அது வந்து மன்னா… வழக்கம்போல நான் சரியான நேரத்திற்குத்தான் அரசவைக்குக் கிளம்பினேன். வாசலைத் தாண்டும்போது, எனது மனைவியின் பெற்றோர் வெளியூரிலிருந்து வந்தனர். அவர்களிடம் இரண்டொரு வார்த்தைகள் பேசிவிட்டு உடனே கிளம்பிவிட்டேன். ஆனால் தாமதமாகி விடுமோ என்ற பதற்றத்தில் வரும் வழியில் ஒரு வண்டியால் இடிக்கப்பட்டு சேற்றில் விழுந்துவிட்டேன்”.
“பதட்டத்தால் கண்மண் தெரியாமல் இப்படி கூடவா விழுவார்கள்?”
“அவசரத்தில் அண்டாவிலும் கை நுழையாது என்று ஒரு பழமொழி கூட உள்ளதே, மன்னா”.
“அது சரி, உம்மைப் போல் அவசரக்காரர்களுக்குத் தான் இந்தப் பழமொழி பொருந்தும்”
“நீங்கள் சொல்வதை என்னால் ஒப்புக்கொள்ள இயலாது மன்னா, மிகவும் பொறுமையாக இருப்பவர்கள் கூட ஒரு சில நேரங்களில் இந்தப் பழமொழியின் கூற்றுப்படி அவதிப்படுவார்கள்”.
“ஒரு வாரத்திற்குள் இந்தக் கூற்றின் உண்மைத் தன்மையை நீங்கள் நிரூபிக்கமுடியுமா?”
“அப்படியே ஆகட்டும் அரசே!”
மறுநாள் அரசவைக்கு வந்த அமைச்சர், ”மன்னா, நம் அரசவையில் பணிபுரியும் காவலாளிகளில் மிகவும் பொறுமைசாலி முத்தன் தானே?”
“ஆம், அதில் என்ன சந்தேகம்?”
“மன்னா, அவர் இதுவரை எந்த சூழ்நிலையிலும் பதற்றமானதே இல்லை அல்லவா”
“ஆம், நீர் சொல்வது முற்றிலும் உண்மைதான்”.
“அவ்வாறெனில் நாளை காலை, அரசவைக்கு அவர் வருவதற்கு முன்பு எந்தவித முன் அறிவிப்பும் இன்றி மகாராணியுடன் நீங்களும் நானும் அவர் வீட்டிற்குச் செல்வோம்”.
“அவர்கள் வீட்டில் என்ன விசேஷம், மந்திரியாரே”
“அதெல்லாம் ஒன்றும் இல்லை மன்னா, எனக்காக வாருங்களேன்”.
“சரி, அப்படியே செய்வோம். நான் மகாராணியிடம் சொல்லித் தயாராய் இருக்கச் சொல்கிறேன்”.
மறுநாள் மந்திரி சொன்னது போலவே எந்தவித முன் அறிவிப்பும் இன்றி முத்தன் வீட்டிற்கு மூவரும் திடீரென்று சென்றனர். நாட்டின் மன்னர், மகாராணி, மந்திரி இந்த மூவரின் திடீர் வருகையால் திகைத்துப் போன முத்தனுக்கும், அவன் மனைவிக்கும் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை.
“மன்னா, மகாராணி, மந்திரி…. வாருங்கள்! வாருங்கள்!...” மன்னரா, நம் வீட்டிற்கு வந்திருக்கிறார், என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லையே, எங்கு அமரச் சொல்வது, எதைக் கொடுப்பது, எதுவுமே புரியவில்லையே, ‘அவசரம் என்றால் அண்டாவிலும் கை நுழையாது’ அப்படீன்னு இதைத் தான் சொல்றாங்க போல் இருக்குது, என்று கூறிக் கொண்டே விரைவாகச் சென்று அவர்களுக்கு இருக்கைகளை எடுத்து வந்து போட்டார்.
பிறகு அவர்கள் பருகுவதற்குப் பானம் எடுத்து வந்தார். அப்படி எடுத்து வரும்போது கை நடுங்கி பதற்றத்தில் குவளையை கீழே போட்டு விட்டார்.
“முத்தா, நீ ஏன் வீணாக பதட்டப்படுகிறாய்? அவசரம் ஒன்றும் இல்லை, சற்று உட்கார். முதலில் உன்னை ஆசுவாசப் படுத்திக்கொள். எதிர்பாராமல் எது நடந்தாலும் நாம் உடனடியாக பதற்றம் அடையாமல், மனதை சாந்தமாக்கிக் கொண்டு அதன் பிறகு செயல்படப் பழகிக் கொள். இதுவரை நீ மிகப் பொறுமையானவன், எந்த பிரச்சினை வந்தாலும் நிதானமாகச் செயல்படுவாய் என்று நினைத்திருந்தேன். பரவாயில்லை, இனியாவது எந்த சூழலிலும் நிதானமாக செயல்பட முயற்சி செய்” என்று அரசர் கூறினார்.
“மந்திரியாரே, எப்படியோ அந்த பழமொழியை நிரூபித்து விட்டீர்” என்று கூறி மன்னர் சிரித்தார்.
“என்னை மன்னிக்க வேண்டும் மன்னா, முத்தனுக்கு நீங்கள் சொன்னவை அனைத்தும் எனக்கும் சொல்லப்பட்டதாக நினைத்து நானும் இனி பதற்றத்தைக் குறைத்துக் கொள்கிறேன்” என்றார் மந்திரி.



No comments:
Post a Comment