Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, November 2, 2025

எது உண்மை தவம்


ஒரு துறவி காட்டின் அருகில் ஓடும் நதிக் கரையில் நீண்ட நேரம் தவ நிலையில் இருந்தார், சில மணி நேரம் கழித்து நிஷ்டையிலிருந்து எழுந்த கொங்கன முனிவர் அருகே உள்ள நதியில் நீராடினார். பின் அவருக்கு நல்ல பசி, குளித்த பிறகு பசி மேலும் அதிகமானது. உடையை அணிந்து கொண்டு அருகில் உள்ள கிராமத்திற்கு போய் உணவு தேடலாம் என்று நினைத்தார்.

அந்த நேரம்ஒரு கொக்கு ஒரு மீனை கொத்தி தன் அலகில் வைத்துக் கொண்டிருந்தது. அப்பொழுது அவருடைய தலைக்கு மேல் பறந்த கொக்கு இட்ட எச்சம் துறவியின் தோளில் விழுந்தது. கடுமையான கோபம் கொண்ட முனிவர் மேலே பறந்து கொண்டிருந்த கொக்கை தன் அகன்ற கண்களால் முறைத்துப் பார்த்தார்.

உடனே அந்த கொக்கு தீப்பிழம்பாக மாறி கருகி சாம்பலாகி ஓடும் நதியில் விழுந்தது.

முறைத்துப் பார்த்த மாத்திரத்தில் தன் கோபத்துக்கு உள்ளான கொக்கு எரிந்து சாம்பலாகிப் போனதைக் கண்ட முனிவருக்கு ஒரே ஆச்சரியம்.

என்னே என் தவ வலிமை என்று எண்ணிக்கொண்டு தனக்குள் பரவசப் பட்டார்.
கொக்கு இட்ட எச்சத்தை துடைத்துவிட்டு திரும்பவும் நதியில் நீராடினார். 

தன்னுடைய விடாமுயற்சி யாலும் தொடர்ந்து வாழ்ந்த தவ வாழ்க்கையாலும் வளர்ந்துவிட்ட தன் தவ வலிமையைப் பற்றி பெருமிதமான எண்ணத்துடன் நடந்தார்.

புராண காலத்து முனிவர்கள் வாய் விட்டு சாபம் கொடுத்தால்தான் கேடு நேரும் நான் கோபத்தில் முறைத்துப் பார்த்தாலே கேடு நேரும் என்று நினைத்த போது முனிவருக்கு உலகத்தையே வென்று விட்ட பெருமை.

இப்படி பலவகையான சிந்தனையுடன் ஊரை அடைந்த துறவி ஒரு வீட்டின் முன்னால் நின்று "அம்மா துறவி வந்து இருக்கிறேன், ஏதாவது உணவு இருந்தால் கொடுங்கள்”, என்று குரல் கொடுத்தார்.
பதில் இல்லை.

திரும்பவும் "அம்மா தாயே“, என்றார். பதில் இல்லை.

“அம்மா தாயே".

இப்பொழுதும் பதில் இல்லை.

சில நேரத்துக்கு பிறகு, கதவை திறந்து கொண்டு தலையைக் காட்டிய ஒரு பெண் “சற்று பொறுத்து இருங்கள் "என்று கூறிவிட்டு உள்ளே போனாள். உள்ளே சென்ற பெண் உணவு அருந்திக் கொண்டிருந்த நோய்வாய்ப் பட்ட தன் முதிய கணவனை கை பிடித்து அழைத்து வந்தாள். கை, கால்களை கழுவ அவருக்கு உதவி செய்துவிட்டு திரும்பவும் உள்ளே சென்றாள்.

ஒரு பாத்திரத்தில் உணவுடன் வாசல் பக்கம் வந்தாள் பசியுடன் இருக்கும் அந்த துறவிக்கு நல்ல கோபம். கால தாமதமாக வந்த அந்த பெண்ணைப் முறைத்துப் பார்த்தார். அதே கோபம் நிறைந்த பார்வை. கொக்கைப் பார்த்த அதே பார்வை.
தன்னை முறைத்துப் பார்த்த துறவியின் கோபத்தைப் புரிந்து கொண்ட அந்த பெண் கொக்கு என்று நினைத்தீரோ கொங்கனரே”, என்றாள்.

துறவிக்கு ஒரே அதிர்ச்சி. திகைத்துப் போய் ஒரு அடி பின்னால் நகர்ந்தார். அந்த பெண் கொண்டு வந்த உணவை வாங்கக் கூட தயங்கினார். அவருக்கு ஒரே குழப்பம்.

சற்று நேரத்துக்கு முன் காட்டில், நதிக் கரையில் நடந்த சம்பவம் வீட்டில் இருக்கும் இந்த பெண்ணுக்கு எப்படி தெரிய வந்தது? இவளுக்கு ஞான திருஷ்டியா? தயக்கத்துடன் உணவை வங்கிக் கொண்ட துறவிக்கு இப்பொழுது பசி போய் விட்டது.

உங்களுக்கு எப்படி தெரியும் என்று கேட்க வாயைத் திறந்தார். அதற்கு முன் அந்த பெண் கேட்டாள் எனக்கு எப்படி தெரியும் என்று கேட்கிறீர்களா என்றாள்.
நான் கேட்க நினைத்ததைக் கூட சரியாகத் தெரிந்து வைத்திருக்கிறாள். இந்த பெண் யாராக இருக்க முடியும் ?

உள்ளே இருக்கும் இவளுடைய கணவர் முனிவரா? முக்காலமும் அறிந்த ஞானிகளாக இருப்பர்களோ? என்றெல்லாம் நினைத்து குழம்பிப் போனார். தணிந்த குரலில் ஆமாம் என்று முணுமுணுத்துக் கொண்டு தலையை ஆட்டினர்.

அந்த பெண் சொன்னாள் உள்ளே உடல் நலமில்லாத என் கணவருக்கு உதவி செய்ய வேண்டியிருப்பதால் உங்களோடு பேச நேரமில்லை. நான்காவது தெருவில் ராமன் இருக்கிறான், அவனிடத்தில் போய் கேளுங்கள், அவன் சொல்வான் என்று கூறிவிட்டு உள்ளே போய்விட்டாள்.

பசிக்களைப்பும் எதிர்பாராத விதமாக ஒரு குடும்பப் பெண் ஞான திருஷ்டியோடு பேசுவதும் கேள்வி கேட்பதும் அவரை சோர்வடையச் செய்தது.
வருந்திப் பெற்ற தன் தவ வலிமைக்கு ஏதோ சவால் வந்து விட்டதாக நினைத்தார்.

ராமனுடைய வீட்டை தேடி போய் கண்டு பிடித்து விட்டார். ஏழை எளிய மக்கள் வாழும் பகுதியில் ஒரு குடிசை தான் ராமனுடைய வீடு. வீட்டை நெருங்கிப் போனதும் அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த வீடு ஒரு கசாப்புக் கடை. விற்பனை செய்து முடித்த பிறகு மீதமிருந்த மாமிசத் துண்டங்களை வாங்க யாராவது வருவார்கள் என்று காத்திருந்தான்.

அங்கே போன துறவியைப் பார்த்து ராமன் "வாங்க சாமி அம்மா அனுப்பி வைச்சாங்களா?" என்றான். இப்பொழுது துறவிக்கு மயக்கம் வராத குறைதான். அந்த பெண் அனுப்பித்தான் நான் வருகிறேன் இவனுக்கு எப்படி தெரிந்தது? இவனுக்கும் ஞான திருஷ்டியோ?

ஒரே குழப்பம்.

ராமன் அவருக்கு ஒரு இருக்கைகொடுத்து உட்காரச் சொன்னான். "சாமி ரொம்ப களைப்பாக இருக்கீங்க போலிருக்கு என் வீட்டில் ஏதாவது சாப்பிடுவீங்களா” என்றான்.

"அந்த அம்மா கொடுத்த உணவு இருக்கிறது நான் பிறகு சாப்பிட்டுக் கொள்கிறேன்" என்று கூறிய துறவி சிறிது நேரம் அமைதியாக இருந்தார். பிறகு தொடர்ந்தார்.

எனக்கு ஒரு விஷயம் தெரிந்தாக வேண்டும். அந்த அம்மா யார்? அவருடைய கணவர் யார்? அவர்கள் மேதைகளா முனிவர்களா? என்று அடுக்கிக் கொண்டே போனார்.

ராமன் சாவகாசமாக துறவிக்கு பதில் சொன்னான். அந்த அம்மா சாதாரண குடும்பப் பெண்தான் அதிகம் படித்தவர் கூட இல்லை. வயது முதிர்ந்த தன் நோயாளிக் கணவனை சரியாக, ஜாக்கிரதை யாக கவனித்துக் கொள்ளவே அந்த அம்மாவுக்கு நேரம் சரியாகப் போய்விடும் வேறு எதுவும் அவர்களைப் பற்றி சொல்லுவதற்கு இல்லை" என்றான்.

துறவிக்கு ஒன்றுமே புரியவில்லை. “நீங்கள் யார்" என்று ராமனிடம் கேட்டார். நான் பல வருடங்களாக இந்த கசாப்புக் கடை வைத்து வியாபாரம் செய்கிறேன்.

வரும் சொற்ப வருமானத்தை வைத்து என்னுடைய முதிய பெற்றோர்களையும் இரண்டு குழந்தைகளையும் கண் கலங்காமல் காப்பாற்றி வருகிறேன். நானும் அதிகம் படிக்க வில்லை நான் உண்டு என் வேலை உண்டு என்று வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் " என்றான் துறவி வீட்டை சுற்றும் முற்றும் பார்த்தார்.

வீட்டில் இரு முதியவர்கள் உட்கார்ந்திருந்தார்கள், குழந்தைகளின் கூச்சலும் விளையாடும் குரலும் கேட்டது.

துறவி திரும்பவும் கேட்டார். "நீங்கள் வேறு எதுவும் செய்வதில்லையா? என்று. அவருடைய குரலில் ஒரு பரிதாபம் தெரிந்தது. ராமன் கொடுத்த பதிலில் அவர் திருப்தி அடையவில்லை என்பதும் தெரிந்தது.

"ஆமாம் சாமி எனக்கு வேறு எதுவும் தெரியாது. நான் திருப்தியாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்" என்றான் ராமன்

அந்த தவசிரேஷ்டர் சோர்ந்த முகத்தோடு, குழம்பிய மனத்தோடு நடையைக் கட்டினார்.

நீதி:

தவம் என்றுகாட்டில் போய் செய்வதற்கு எதுவும் இல்லை. சாதாரண மனிதன் தன் கடமையைச் செய்து சுற்றத்தாருக்கும், சமுதாயத்துக்கும், பயனுள்ள வாழ்க்கை நடத்துவதுதான் உண்மை தவம். என்று சொல்லாமல் சொல்லுகிறது.

No comments:

Post a Comment