ஜனவரி 2026 மாத சிறார் திரைப்படம் `அயலி - பாகம் 1` திரையிடல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
உலகமெங்கும் திரைத்துறை வாயிலாக திரைப்படங்கள் ஏற்படுத்திய தாக்கங்களும், மாற்றங்களும் ஏராளம். திரைப்படங்களால் மாணவர்களுக்கு அறம் மற்றும் சமத்துவ கருத்துகள் பற்றின புரிதலை, கலந்துரையாடல்களின் வாயிலாக எளிதான வகையில் ஏற்படுத்திவிட முடியும். தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித்துறையின் முன்னெடுப்புகளில் அனைவராலும் பாராட்டப்பட்ட மிகவும் முக்கியமான நிகழ்வு சிறார் திரைப்படங்களை பள்ளிகளில் திரையிடுதல். மாணவர்களுக்கு சமூக நீதி, சமத்துவம், அறிவியல் பார்வை ஆகியவற்றைப் பற்றின விழிப்புணர்வு மற்றும் அதன் மீதான பார்வையை ஏற்படுத்துவதற்கும், மாணவர்கள் திரைப்படங்களை பகுத்தறிவுடன் அணுகுதல், தங்கள் வாழும் சூழலை புரிந்து கொள்ளுதல், பல்வேறு கலாச்சாரங்களின் தனித்தன்மையை அறிந்து கொள்ளுதல், தன்னம்பிக்கை, நட்பு பாராட்டுதல், குழுவாக இணைந்து செயல்படுதல், பாலின சமத்துவம் ஆகிய பண்பு நலன்களை அடையாளம் காணுதல், தங்களிடம் உள்ளார்ந்து புதைந்திருக்கும் படைப்பாற்றலை வெளிக்கொணர செய்தல் போன்ற நோக்கத்துடன் மாதந்தோறும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் திரைப்படம் திரையிடப்படுகிறது.
மேலும் திரைப்படக் கலையில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு கலையை ரசிப்பதற்கும், கதை, எழுத்து, திரைக்கதை, நடிப்பு, உடையலங்காரம், பின்னணி வடிவமைப்பு, இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இயக்கம் மற்றும் தயாரிப்பு போன்ற திரைத்துறையின் பிரிவுகளை அறிமுகப்படுத்தவும் இந்நிகழ்வு அடிப்படையாக அமைகிறது.
அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்பு வரை பயின்று வரும் மாணவர்கள் அனைவரும் கண்டுணரும் வகையில் ஜனவரி மாதம் "அயலி பாகம் 1" திரைப்படத்தை திரையிடக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
படத்தின் கதைக் கரு, சுருக்கம், குழந்தைகள் புரிந்துகொள்ள வேண்டியவை, உரையாடவேண்டியவை இணைப்பில் பகிரப்பட்டுள்ளது.



No comments:
Post a Comment