Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, October 27, 2018

அடங்கல் பதிவேடுகள் மின்னணு முறைக்கு மாற்றம்


சாகுபடி செய்யும் பரப்புகள் குறித்த விவரங்களைத் தெரிவிக்கும் அடங்கல் பதிவேடுகளை மின்னணு முறைக்கு மாற்றம் செய்யும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.



ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் விவசாயிகள் சாகுபடி செய்யும் பயிர்கள், அதன் விளைச்சல், நீர்ப்பாசன ஆதாரங்கள் போன்ற விவரங்கள் கிராம நிர்வாக அலுவலர்களால் கைப்பட எழுதி பராமரிக்கப்பட்டு வருகிறது. 

இந்த அடங்கல் பதிவேடுகளை மின்னணு பதிவேடாக மாற்றம் செய்யும் வகையில், இ-அடங்கல் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின்படி, மின்னணு அடங்கல் திட்டத்தை முதல்வர் பழனிசாமி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். 

என்ன பயன்?: மின்னணு அடங்கல் முறையில், கிராம நிர்வாக அலுவலர்கள் பயிர் சாகுபடி தொடர்பான விவரங்களைப் பதிவு செய்வது மட்டுமின்றி, விவசாயிகள் தங்களுக்குச் சொந்தமான நிலத்தில், தாங்கள் பயிர் செய்துள்ள விவரங்களை அவர்களே பதிவு செய்யலாம். 



கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் மேற்கொள்ளும் பதிவுகளுக்கு இடையே வேறுபாடு இருந்தால், அந்தப் பதிவு தானாகவே வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட உயர் அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டு திருத்தம் மேற்கொள்ளப்படும்.

மின்னணு அடங்கல் முறையில், கிராம நிர்வாக அலுவலர் பராமரிக்கும் பிற தொடர்புடைய 9 பதிவேடுகளையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விவசாயிகள் எந்தக் கட்டணமும் இல்லாமல் மின்னணு அடங்கல் பதிவினை பார்வையிட முடியும். 

அடங்கல் நகல் பெற அரசு நிர்ணயித்த கட்டணத்தைச் செலுத்தி எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



பதிவு செய்யலாம்: மின்னணு அடங்கல் முறையில், வருவாய், வேளாண்மை, தோட்டக்கலை, புள்ளியியல் துறைகளைச் சேர்ந்த அலுவலர்களுக்கு தனியாக உள்ளீடுக்குறி (லாகின் ஐ.டி.,) உள்ளது. 

அவர்களும் கள ஆய்வில் கண்டறிந்த பயிர் சாகுபடி தொடர்பான பதிவுகளைப் பதிவு செய்ய முடியும். விவசாயம் மற்றும் விவசாயிகள் தொடர்பாக தமிழக அரசு எடுக்கும் கொள்கை முடிவுகளை உரிய நேரத்தில் விரைந்து செயல்படுத்த மின்னணு அடங்கல் முறை பெரிதும் உதவியாக இருக்கும்.




குறிப்பாக, வெள்ளம், வறட்சி போன்ற பேரிடர்களால் பயிர்களுக்கு ஏற்படும் சேத விவரங்களை துல்லியமாக கணக்கிடவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணங்களை வழங்கவும் வழிவகை ஏற்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வெள்ளம்-புயல்-சுனாமி தகவல்களைப் பெற தனி செயலி தொடக்கம்
வெள்ளம், புயல், சுனாமி போன்ற பேரிடர் காலங்களின்போது முன்னெச்சரிக்கை தகவல்களைப் பெற தனி செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய செயலியை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:
பேரிடர்களின் தாக்கத்தை முன்னதாகவே அறிந்து அவசர முன்னெச்சரிக்கை மீட்பு நடவடிக்கைகளை முறைப்படுத்தும் அமைப்பை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். 

இந்த அமைப்பில் நவீன தொழில்நுட்பங்களின் மூலம் முன்னறிவிப்பு மற்றும் பேரிடர் அபாய தணிப்பு நடவடிக்கைகளுக்கான தகவல்களைச் சேகரிக்க முடியும். மேலும், தகவல்களை ஆவணப்படுத்துதல், செயல்படுத்துதல் மற்றும் செய்திகளை மக்களிடம் கொண்டு செல்லுதல் போன்ற பணிகளைச் செய்ய முடியும்.

வெள்ள பாதிப்பை அறியலாம்: இந்திய வானிலை ஆய்வு மையத்தால் அளிக்கப்படும் மழை முன்னெச்சரிக்கை மற்றும் கடந்த காலங்களில் பெய்த பருவமழையின் அளவு, நீர்த்தேக்கங்களின் இருப்பு ஆகியவற்றின் அடிப்படையிலும், தமிழகத்திலுள்ள 32 மாவட்டங்களிலும் வெள்ள அபாயம் ஏற்படும் எனக் கண்டறியப்பட்ட இடங்களில் எத்தகைய வெள்ள பாதிப்பு ஏற்படும் என கணிக்க முடியும். வெள்ளம் மட்டுமல்லாது, புயல், சுனாமி போன்ற பேரிடர்களின் தாக்கத்தையும் முன்கூட்டியே கணிக்க முடியும்.

இந்த முன்னெச்சரிக்கை தகவல்களைக் கொண்டு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து உயிர் இழப்புகளையும், பொருட்சேதத்தையும் தவிர்க்க முடியும். அந்த அமைப்பு குறித்த விவரங்களை
ஜ்ஜ்ஜ்.ற்ய்ள்க்ம்ஹ.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
இதன் தொடர்ச்சியாக, பசநஙஅதப என்ற செல்லிடப்பேசி செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பேரிடர் குறித்த தகவல்கள், முன்னெச்சரிக்கைகள், மழைப் பொழிவின் அளவு ஆகியவற்றைப் பதிவு செய்யப்பட்ட பயனாளர்கள் அறிந்து கொள்ள இயலும். 



இந்த செயலியில் உத்தேச மழையளவு, மழை-வெள்ளத்தின் போது செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை போன்ற தகவல்களைப் பெறலாம். செல்லிடப் பேசிகள் அமைதி நிலையில் இருந்தாலும்கூட எச்சரிக்கை ஒலியுடன் செய்தியைப் பெற முடியும். இந்த எச்சரிக்கை ஒலியானது செயலியில் உள்ள செய்தியைப் பார்த்த பிறகே நிற்கும்.

இணையதளம் மற்றும் புதிய செயலி செயல்பாடுகளை முதல்வர் பழனிசாமி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். இதில், வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், வருவாய் நிர்வாக ஆணையாளர் கொ.சத்யகோபால், வருவாய்த் துறை முதன்மைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.