Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, November 30, 2018

சிம் நிறுவனங்களின் மினிமம் ரீசார்ஜ்க்கு செக்' - ட்ராய் கிடுக்கிப்பிடி


குறைந்தபட்ச ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களின் இன்கமிங்
கால்களை நிறுத்தக்கூடாது என சிம் நிறுவனங்களை ட்ராய் எச்சரித்துள்ளது.
இந்தியாவில் செல்போன் வாடிக்கையாளர்கள் மத்தியில் கொடிகட்டி பறந்த நிறுவனங்களாக ஏர்டெல், வோடாஃபோன், ஏர்செல் மற்றும் ஐடியா ஆகியவை திகழ்ந்தன. 



ஆனால் இந்த நிறுவனங்கள் அனைத்து ஜியோவின் வருகைக்குப் பிறகு கடும் சரிவை சந்தித்துள்ளன. குறிப்பாக ஜியோவின் இலவச டேட்டா மற்றும் அழைப்புகளால் அனைத்து சிம் நிறுவனங்கள் பெரிய இழப்பை சந்தித்துள்ளன. இதில் ஏர்செல் தங்கள் நிறுவனத்தையே மூடிவிட்டனர். அதுமட்டுமின்றி ஜியோ நிறுவனத்தின் ஆஃபர்களால் மற்ற சிம்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களும், தங்கள் செல்போன்களில் இரண்டாவது சிம் ஆக ஜியோவை பயன்படுத்த துவங்கியுள்ளனர்.

இவ்வாறு பயன்படுத்தும் வாடிக்கயாளர்கள் தங்கள் முதல் சிம் கார்டை (ஏர்டெல், வோடாஃபோன், ஐடியா) வெறும் இன்கமிங் கால்களுக்கு மட்டும் பயன்படுத்துகின்றனர். ஆனால் அனைத்து டேட்டா ரிசார்ஜ்களையும் ஜியோவில் செய்துகொள்கின்றனர். இந்த நிகழ்வை மாற்றுவதற்காக மற்ற சிம் நிறுவனங்களும் ஆஃபர்களை வாரி இரைத்தனர். ஆனாலும் பலர் ஜியோவின் ஆஃபர்களில் இருந்து மீண்டு வரவில்லை. இந்நிலையில் தான் ஏர்டெல், வோடாஃபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் ஒரு புதிய கட்டண விதியை கொண்டுவந்தன.




கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தபட்ட இந்த கட்டண முறைப்படி, வாடிக்கையாளர்கள் குறைந்த பட்சம் மாதந்தோறும் ரூ.35க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். இல்லையென்றால் அவர்களது இன்கமிங் சேவை நிறுத்தப்படும். இன்கமிங் சேவை நிறுத்தப்படும் நடைமுறை அமலுக்கு வந்ததும், ஏராளமான வாடிக்கையாளர்கள் பெரும் அதிருப்தி அடைந்தனர்.

ஆனால் சிம் நிறுவனங்கள் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் மூலம் பல கோடி லாபம் பெறலாம் என்ற நோக்கில் இதை செய்தனர். இதனால் பல வாடிக்கையாளர்கள் தங்கள் சிம் கார்டுகளை முற்றிலும் ஜியோவிற்கு மாற்றிக்கொண்டனர். இருப்பினும் பலர் டவர் கிடைக்க வேண்டும் என்ற சில காரணங்களுக்காக பழைய சிம் சேவையிலேயே இருந்தனர். மற்றொருபுறம் சிம் நிறுவனங்களின் குறைந்தபட்ச ரீசார்ஜ் நடவடிக்கை தொடர்பாக ஆயிரக்கணக்கான புகார்கள் ட்ராய் எனப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் குவிந்தன.



புகார்களின் எதிரொலியாக, குறைந்தபட்ச ரிசார்ஜ் செய்யவில்லை என சிம் நிறுவனங்கள் சேவையை நிறுத்தக்கூடாது என்று ட்ராய் எச்சரித்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்களின் சேவை நிறுத்தங்கள் தொடர்பாக 72 மணி நேரங்களுக்கு முன்னரே குறுஞ்செய்திகள் அனுப்பப்பட வேண்டும் என எச்சரித்துள்ளது. 

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியுள்ள ட்ராய் தலைவர் ஆர்.எஸ்.ஷர்மா, சிம் நிறுவனங்களின் கட்டண விவரங்களில் ட்ராய் தலையிடுவதில்லை என தெரிவித்துள்ளார். அதேசமயம் குறைந்தபட்ச ரீசார்ஜ் என்ற காரணத்தைக் கூறி வாடிக்கையாளர்களின் இன்கமிங் சேவையை நிறுத்துவது மற்றும் சேவையை ரத்து செய்வது முதலியவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளார்.



No comments:

Post a Comment