Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, April 10, 2019

6, 7, 8 ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் தேர்வு முடிவுகளை கல்வித்துறையின் அதிகாரி களின் ஒப்புதலை பெற்று மே மாதம் 2ம் தேதி வெளியிட வேண்டும்:மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்



பள்ளிகளில் 6, 7, 8ம் வகுப்பு மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்தால் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் தான் முழு பொறுப்பேற்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளில் படிக்கும் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதனால் 6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளை தோல்வி அடையச் செய்யக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அனைத்து வகை பள்ளிகளிலும் தற்போது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், சென்னைப் பள்ளிகள், ஆதிதிராவிடர் சமூக நலத்துறை, மெட்ரிக்குலேஷன் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் ஆகியவற்றில் 6, 7, 8ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகளை விதிமுறைகளை பின்பற்றி வெளியிட வேண்டும்.

தேர்ச்சிக்காக நிர்ணயிக்கப்பட்ட விதிகளை தளர்வு செய்தால் அதற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் சிறப்பு அனுமதியை பெற வேண்டும். மெட்ரிக்குலேஷன் பள்ளிகள், அந்தந்த கல்வி மாவட்டத்தில் மட்டுமே மதிப்பெண் பதிவேடு மற்றும் மதிப்பெண் பட்டியலின் நகலை அளிக்க வேண்டும். அரசு, அரசு நிதியுதவி பெறும் சென்னைப் பள்ளிகள், ஆதிதிராவிடர், சமூக நலத்துறை, மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் 6, 7, 8ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்ச்சி முடிவுகளை மாவட்ட கல்வி அலுவலர் ஒப்புதலை பெற்ற பின்னரே வெளியிட வேண்டும்.

மேற்கண்ட பள்ளிகளில் 6, 7, 8ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் கட்டாய தேர்ச்சி அளிக்க வேண்டும். இல்லை என்றால் பின்னால் வரும் விளைவுகளுக்கு தலைமை ஆசிரியர்கள் அல்லது முதல்வர்கள் முழு பொறுப்பேற்க வேண்டும். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் கல்வித்துறையின் அதிகாரிகளின் ஒப்புதலை பெற்று மே மாதம் 2ம் தேதி வெளியிட வேண்டும்.

இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இதையும் மீறி பல தனியார் பள்ளிகள் மேற்கண்ட வகுப்புகளில் படிக்கும் மாணவர்களை பெயிலாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ஒரு தனியார் பள்ளியில் படித்த எல்கேஜி குழந்தையை பெயிலாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியது.