Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, June 18, 2019

இளநிலை, முதுநிலை படிப்பை பாதியில் தொடர முடியாவிட்டாலும் அங்கீகாரம்:சான்றிதழ் அல்லது டிப்ளமோ வழங்க சென்னைப் பல்கலைக்கழகம் திட்டம்



இளநிலை அல்லது முதுநிலை படிப்பில் சேர்ந்து பாதியில் தொடர முடியாதவர்களுக்கு சான்றிதழ் படிப்பு அல்லது பட்டயப் படிப்புக்கான அங்கீகாரத்தை வழங்கும் வகையிலான புதிய திட்டத்தை சென்னைப் பல்கலைக்கழகம் அறிமுகம் செய்ய உள்ளது.
அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் நடைமுறையில் இருக்கும் இந்தத் திட்டத்தை, இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னைப் பல்கலைக்கழகம் அறிமுகம் செய்ய இருக்கிறது. சென்னைப் பல்கலைக்கழகம் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பல்கலைக்கழகங்கள் நடத்தும் தொலைநிலைப் படிப்புகளில் சேரும் மாணவர்களில் பலர், பல்வேறு காரணங்களால் படிப்பை பாதியில் கைவிட்டு விடுகின்றனர். இதேபோல, சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் மட்டும் ஆயிரக்கணக்கான மாணவர்கள், படிப்பை பாதியில் கைவிட்டுச் சென்றுள்ளனர். இதுபோன்ற மாணவர்களின் நலன் கருதி இந்த சிறந்த திட்டத்தை சென்னைப் பல்கலைக்கழகம் கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


இதுகுறித்து, பல்கலைக்கழகத் துணைவேந்தர் துரைசாமி கூறியது:
தொலைநிலைப் படிப்புகளில் சேரும் பல மாணவர்கள் பல்வேறு காரணங்களில் படிப்பை பாதியில் கைவிட்டுச் செல்கின்றனர். இதில் சிலர், படிப்பை மீண்டும் தொடர விரும்புகின்றனர். சிலர் படிப்பில் மீதமுள்ள அரியர் தாள்களை பலமுறை எழுதியும், அதில் தேர்ச்சி பெற முடியாமல் உள்ளனர். உதாரணமாக எம்.பி.ஏ. படிப்பில் மட்டும் 1998-ஆம் ஆண்டு முதல் சேர்ந்த மாணவர்களில் 55 ஆயிரம் பேர் படிப்பை பாதியில் கைவிட்டும், முடிக்க முடியாமலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபோல, பிற படிப்புகளிலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிப்புகளை பாதியில் கைவிட்டுள்ளனர்.
இதுபோன்ற மாணவர்களின் நலன் கருதியே, இந்தப் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் இத்தகையத் திட்டம் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. இந்தியாவில் சென்னைப் பல்கலைக்கழகம்தான் முதல் முறையாக அறிமுகம் செய்யவுள்ளது.
இந்தத் திட்டத்தின்படி, பி.ஏ., பி.காம். போன்ற இளநிலை படிப்புகளில் சேர்ந்து பாதியில் படிப்பை நிறுத்தியிருக்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் படிப்புக்கான அங்கீகாரம் வழங்கப்படும். இதற்கு அந்த மாணவர், பட்டப் படிப்பில் மொத்தமுள்ள தாள்களில் குறைந்தபட்சம் பாதி தாள்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உதாரணமாக, 15 தாள்களைக் கொண்ட பி.ஏ. பொருளாதாரம் படிப்பில் சேர்ந்து, குறைந்தபட்சம் 8 தாள்களில் தேர்ச்சி பெற்று படிப்பைத் தொடர முடியாமல் போனால் அவருக்கு பொருளாதாரத்தில் சான்றிதழ் படிப்பு முடித்ததற்கான அங்கீகாரம் அளிக்கப்படும்.


இவ்வாறு சான்றிதழ் அங்கீகாரம் பெறும் மாணவர், மீண்டும் பட்டப் படிப்பை முடிக்க விரும்பினால் ஐந்தாண்டுகளுக்குள் நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கை முறையில் பி.ஏ. படிப்பில் சேர்ந்து பட்டம் பெறலாம்.
அதேபோல், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.காம். போன்ற முதுநிலை படிப்புகளில் சேர்ந்து படிப்பை பாதியில் தொடர முடியாமல் கைவிடும் மாணவர்களுக்கு முதுநிலை பட்டயப் படிப்பு சான்றிதழ் வழங்கப்படும். உதாரணமாக 10 தாள்களைக் கொண்ட எம்.பி.ஏ. படிப்பில் சேர்ந்து குறைந்தபட்சம் 5 தாள்களில் தேர்ச்சி பெற்று படிப்பை தொடர முடியாமல் பாதியில் நிறுத்தும் மாணவர்களுக்கு பி.ஜி.டி.பி.எம். (முதுநிலை மேலாண்மை பட்டயம்) சான்றிதழ் வழங்கப்படும். இந்தச் சான்றிதழ் பெறும் மாணவர்கள், மீண்டும் எம்.பி.ஏ. படிப்பைத் தொடர விரும்பினால், இவர்களும் நேரடி இரண்டாமாண்டு சேர்க்கை முறையில் தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் சேர்ந்து எம்.பி.ஏ. முடித்துக்கொள்ள முடியும்.
இவ்வாறு சான்றிதழ் அல்லது முதுநிலை பட்டயப் படிப்பு அங்கீகாரம் பெற குறிப்பிட்ட கட்டணம் நிர்ணயிக்கப்படும். இந்தத் திட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை நடைபெறும் ஆட்சிக் குழுவில் ஒப்புதல் பெறப்பட்ட உடன், பின்னர் கல்விக்குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, நடைமுறைக்குக் கொண்டு வரப்படும் என்றார் அவர்.