Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, August 18, 2019

பிளஸ் 2 துணைத் தேர்வு: பிளஸ் 2 துணைத் தேர்வு ஆக.21 முதல் அசல் மதிப்பெண் சான்று விநியோகம்


பிளஸ் 2 துணைத் தேர்வெழுதியவர்களுக்கு வரும் 21-ஆம் தேதி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கடந்த மார்ச் மாதம் மேல்நிலை வகுப்புகளுக்கான பொதுத் தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கான சிறப்பு துணைத் தேர்வு, கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெற்றது.

அதில், பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கடந்த மாதம் 10-ஆம் தேதி முதல் இணையதளம் மூலம் மதிப்பெண் பட்டியல்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.



தற்போது கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற பிளஸ் 1, பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வெழுதிய தேர்வர்கள் (மறுகூட்டல், மறுமதிப்பீடு உள்பட) தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை, ஆகஸ்ட் 21-ஆம் தேதி (புதன்கிழமை) முதல் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

பழைய நடைமுறையில் (1200 மதிப்பெண்கள்), நிரந்தர பதிவெண் மூலம் தேர்வு எழுதியோர், இதற்கு முந்தைய பருவங்களில் தேர்ச்சி பெறாத பாடங்களை சிறப்பு துணைத் தேர்வில் எழுதி அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்று இருந்தால் அவர்களுக்கு ஒருங்கிணைந்த அசல் மதிப்பெண் சான்றுகளும், முழுமையாக தேர்ச்சி பெறாதவர்களுக்கு தேர்வு எழுதிய பாடங்களுக்கு மட்டும் மதிப்பெண் சான்றுகள் வழங்கப்படும்.



புதிய நடைமுறையின்படி தேர்வு எழுதி, அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மட்டும் பிளஸ் 1 (600 மதிப்பெண்கள்) பிளஸ் 2 ( 600 மதிப்பெண்கள்) தனித்தனியாக மதிப்பெண் சான்றுகள் வழங்கப்படும். பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகளில் முழுமையாக தேர்ச்சி அடையாத தேர்வர்களுக்கு அவர்கள் இரு தேர்வுகளிலும் பெற்ற மதிப்பெண்களைப் பதிவு செய்து அச்சிடப்பட்ட ஒரே மதிப்பெண் பட்டியலாக வழங்கப்படும்.

இந்த வகை மாணவர்கள், மேற்கண்ட இரண்டு வகுப்புகளில் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற பிறகே அவர்களுக்கு தனித்தனி மதிப்பெண் சான்றுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.