Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, August 17, 2019

ஒவ்வொரு பள்ளியிலும் 44 பேர் கொண்ட மாணவர் காவல் படை: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு


ஒவ்வொரு பள்ளியிலும் தலா 44 மாணவ, மாணவிகளுடன் மாணவர் காவல் படை அமைக்கப்பட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
மாணவர்களை சமூக கண்ணோட்டத்தின் அடிப்படையில் உருவாக்கவும், சட்டத்தை மதித்தும், போக்குவரத்து விதிகளை அறிந்து நடக்கும் வகையில் மாணவர் காவல் படை என்ற ஸ்டூடண்ட் போலீஸ் கேடர் குழுக்களை பள்ளிகளில் உருவாக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை மொத்தம் 22 மாணவ, மாணவிகளும், 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளில் 22 மாணவ, மாணவிகளும் என ஒரு பள்ளிக்கு மொத்தம் 44 பேரை கொண்டு இக்குழு உருவாக்கப்படுகிறது. இந்தக் குழுக்களுக்கு இருபாலர் பள்ளி எனில் ஒரு ஆண் ஆசிரியரும், ஒரு பெண் ஆசிரியரும் பொறுப்பேற்பர்.


ஒரு பாலர் பள்ளி எனில் அதற்கேற்ப ஒரு ஆசிரியரோ, ஆசிரியையோ பொறுப்பேற்பர். இந்தக் குழுக்கள் வாரம் ஒரு நாள் பள்ளி நேரம் முடிந்து ஒரு மணி நேரம் காவல் நிலையங்களிலோ அல்லது போக்குவரத்து போலீஸாருடன் இணைந்தோ சேவையாற்றுவர்.
ஏற்கெனவே நாட்டு நலப்பணி திட்டம் என்ற என்எஸ்எஸ் திட்டத்தின் கீழ் மேல்நிலைக்கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் போக்குவரத்து போலீஸாருடன் இணைந்து போக்குவரத்து சீரமைப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் மரம் நடுதல் உள்பட பல்வேறு விழிப்புணர்வு பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இவர்களை போன்றே மாணவர் காவல் படைக் குழுக்களும் செயல்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.