Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, August 17, 2019

நுழைவுத் தேர்வுகளுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்புக்குத் தடை: மீறி நடத்தினால் அங்கீகாரம் ரத்து: பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ எச்சரிக்கை


நுழைவுத் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்பு நடத்த அனுமதி கிடையாது என கேந்திரிய வித்யாலயா மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, சிபிஎஸ்இ எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் உயர் கல்வியில் சேர பல்வேறு நுழைவுத் தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். குறிப்பாக, இந்திய உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனமான ஐஐடி-யில் சேருவதற்கான ஜேஇஇ நுழைவுத் தேர்வு, மருத்துவப் படிப்புக்கான, நீட் நுழைவுத் தேர்வு ஆகியவை முக்கியமானவை. இதற்காக, நாடு முழுவதும், சிறப்புப் பயிற்சி மையங்கள் உள்ளன. இந்த மையங்களில், லட்சக்கணக்கில் கட்டணம் வசூலித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்தநிலையில், பெரும்பாலான பள்ளிகளில், தனியார், கோச்சிங் மையங்களுடன் ஒப்பந்தம் செய்து, பள்ளியிலேயே சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மாணவர் சேர்க்கையின் போதே, பேக்கேஜ் என்ற முறையில், சிறப்புப் பயிற்சிக்கும் சேர்த்து, கட்டணம் வசூலிக்கப்படுகிறது.


பயிற்சி வகுப்பு தேவையில்லை என்று, மாணவர்கள் கூறினாலும், அதற்கு பள்ளிகள் ஒப்புக் கொள்வதில்லை என பெற்றோர் புகார் தெரிவிக்கின்றனர். பயிற்சி வகுப்பில் சேராவிட்டாலும், சிறப்புப் பயிற்சிக்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என பள்ளிகள் கட்டாயப்படுத்துவதாக பெற்றோர் தரப்பில் சிபிஎஸ்இ-க்கு அதிகளவிலான புகார்கள் அனுப்பப்பட்டன. இது குறித்து சிபிஎஸ்இ நிர்வாகம் விசாரணை நடத்தி, பயிற்சி வகுப்புகள் நடத்த தடை விதித்துள்ளது. இதற்கான சுற்றறிக்கை, அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
மத்திய அரசின் நேரடி பள்ளிகளான, கேந்திரிய வித்யாலயா, சைனிக் பள்ளிகள், நவோதயா பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என, அனைத்துக்கும், இந்த தடை உத்தரவு பொருந்தும் என கூறப்பட்டுள்ளது. எந்தப் பள்ளியாவது, சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தியதாக புகார் வந்தால், அந்தப் பள்ளியின் இணைப்பு அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் சிபிஎஸ்இ எச்சரித்துள்ளது.