Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, August 17, 2019

ஆசிரியர்களுக்கு தலைக்கவசம் கட்டாயம்: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

ஆசிரியர்கள் இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு வரும் போது கட்டாயம் தலைக்கவசம் அணிந்து வர வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
அதேவேளையில் உடற்கல்வி ஆசிரியர்கள் பேருந்து நிறுத்தத்தில் ஒரு மணி நேரம் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சாலைப் பாதுகாப்பு விதிமுறைகளை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பின்பற்றுவது குறித்து பள்ளிகல்வித் துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:
இந்திய தேசிய குற்றவியல் அறிக்கையின் படி தமிழகத்தில் சாலை விபத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 65 ஆயிரமாக உள்ளது. அதில் 18 வயதுக்கு குறைந்தவர்களின் எண்ணிக்கை 569 ஆகும். சாலை விதிகளை மீறுவதே இதற்கு முக்கிய காரணமாகும்.


மோட்டார் வாகனச் சட்டம் 1986-இன் படி 18 வயதுக்கு குறைந்தவர்கள் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவதன் மூலமாக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழப்பு அதிகரிக்க காரணமாக உள்ளது. குறிப்பாக தலைக்கவசம் அணியாததே இரு சக்கர வாகன விபத்துக்களில் உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது.
விபத்துகளைக் குறைப்பதில் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பொறுப்புண்டு என்பதை உணர்ந்து தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் என அனைத்துப் பணியாளர்களும் தலைக்கவசம் அணிந்து பள்ளிக்கு வர வேண்டும். மாணவர்களுக்கு கல்வி போதிப்பது மட்டுமல்லாமல் இது போன்று தலைக்கவசம் அணிந்து வருவது அவர்களுக்கு முன்மாதிரியாக இருந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி சமூகத்தில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தலாம்.
படிக்கட்டில் பயணம் கூடாது: அதேபோன்று பள்ளிகளில் இறைவணக்க கூட்டத்தின் போது சாலைப் பாதுகாப்பு விதிமுறைகள் பற்றி கூற வேண்டும். பேருந்தில் படிக்கட்டில் நின்று பயணம் செய்யக்கூடாது, சாலைகளை இருபுறமும் பார்த்து கடக்க வேண்டும் உள்ளிட்டவற்றை அவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும்.
அனைத்து மாணவர்களையும் ஒரே நேரத்தில் பள்ளி முடிந்து அனுப்புவதால் தான் மாணவர்கள் பேருந்தில் தொங்கிய படி பயணிக்கின்றனர்.

எனவே 15 நிமிஷ இடைவெளியில் மாணவர்களை அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகளின் நலன் கருதி உடற்கல்வி ஆசிரியர்கள் பேருந்து நிறுத்தத்தில் ஒரு மணி நேரம் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட வேண்டும். இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு வந்தால் அவர்களை பள்ளிக்குள் அனுமதிக்கக் கூடாது.
மேலும் அனைத்து வகையான பள்ளிகளிலும் சாலை பாதுகாப்பு மன்றத்தை தொடங்கி அதில் மாணவர்களை சேர்த்து சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என அதில் கூறியுள்ளார்.