Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, September 25, 2019

அரசு அலுவலகங்களில் தமிழை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்: தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர்


அரசு அலுவலகங்களில் அனைத்து செயல்பாடுகளிலும் தமிழை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்று தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் கோ.விசயராகவன் கூறினார்.
திருவண்ணாமலை மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் ஆட்சிமொழிக் கருத்தரங்கின் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி தலைமை வகித்தார்.


ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சு.ஜானகி முன்னிலை வகித்தார். தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் தே.செயசோதி வரவேற்றார். மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பயிலரங்கை தொடக்கிவைத்துப் பேசினார். தொடர்ந்து, அலுவலகக் குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள் என்ற தலைப்பில் ஓய்வு பெற்ற தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் க.சிவசாமி, ஆட்சிமொழி செயலாக்கம், அரசாணைகள் என்ற தலைப்பில் ஓய்வு பெற்ற தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் துரை.தம்புசாமி ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
கருத்தரங்கம்: மாலையில் நடைபெற்ற கருத்தரங்கில், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் கோ.விசயராகவன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது:
தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சிமொழி சட்டத்தை 100 சதவீதம் நடைமுறைப்படுத்த வேண்டியது நம் கடமை. அரசு அலுவலர்கள் அனைத்து செயல்பாடுகளிலும் தமிழையே பயன்படுத்த வேண்டும். அரசின் சட்டம், அரசு ஆணைகளை மதித்துப் பின்பற்ற வேண்டும் என்றார்.


தொடர்ந்து, 2016, 2017-ஆம் ஆண்டுகளில் தமிழில் சிறந்த வரைவுகள், குறிப்புகள் எழுதிய அரசுப் பணியாளர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் கோ.விசயராகவன் பரிசுகள் வழங்கினார். 2017-ஆம் ஆண்டில் சிறந்த மாவட்ட நிலை அலுவலகமாக தேர்வு செய்யப்பட்ட விதைச்சான்று உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு கேடயம் வழங்கப்பட்டது.
விழாவில், சென்னை மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் தா.லலிதா, திருவண்ணாமலை மாவட்ட தமிழ்ச் சங்க நிறுவனர் பா.இந்திரராஜன், கம்பன் தமிழ்ச் சங்க பொதுச் செயலர் ந.சண்முகம், காஞ்சிபுரம் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் க.பவானி உள்பட பலர் கலந்து கொண்டனர்.