சளி மற்றும் மூக்கடைப்பைக் குணப்படுத்தும் துளசி, அதிமதுரம், வெட்டிவேர், சுக்கு ஆகியவை அடங்கிய பையுடன் கூடிய மூலிகை முகக்கவசம் குமாரபாளையத்தில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. மருத்துவக் குணங்கள் கொண்ட மூலிகையுடன் கூடிய முகக்கவசம் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மருந்து கண்டுபிடிக்கப்படாததால் மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும் என, சுகாதரத் துறையின் வழிகாட்டுதல்படி அரசு அறிவுறுத்தி வருகிறது. மக்களும் இதைப் பின்பற்றுவதால் முகக்கவசத் தயாரிப்பு மற்றும் விற்பனை பரவலாக அதிகரித்துள்ளது.
இயற்கை மூலிகை
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த சீனிவாசராகவன் என்பவர் மூலிகை முகக்கவசங்களை தயாரித்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறார். துளசி, அதிமதுரம், வெட்டிவேர், சுக்கு போன்ற இயற்கை மூலிகைகளை சிறிய பையில் அடைத்து அதை முகக்கவசத்தினுள் வைத்து, தைத்து தயாரித்து வருகிறார். மருத்துவக் குணம் நிறைந்த மூலிகைப் பொருட்களுடன் கூடிய இந்த முகக்கவசத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதுகுறித்து சீனிவாசராகவன் கூறும்போது, "கரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க முகக்கவசம் அணிவது அவசியம். இந்நிலையில், மக்களுக்குப் பயன்படும் வகையில் முகக்கவசம் தயாரிக்க வேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டது. எனவே முகக்கவசத்தின் மேல் பகுதியில் பை போன்ற அமைப்பைத் தைத்துள்ளோம்.
பயனும், பயன்பாடும்
இதில், துளசி, அதிமதுரம், வெட்டிவேர், சுக்கு ஆகியவற்றை சிறு சிறு பைகளில் போட்டு தையலிட்டு முகக்கவசத்தினுள் வைத்து விடுகிறோம். இதனை அணிந்து கொள்ளும்போது மேற்குறிப்பிட்டவற்றில் இருந்து வரும் நறுமணம் மனதுக்கு இதமளிக்கும். இந்த மூலிகைகள் இருக்கும் காரத்தன்மை சளிக்கு அருமருந்தாகவும் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.
முகக்கவசங்கள் ரூ.20-க்கும், துளசி, அதிமதுரம், வெட்டிவேர், சுக்கு ஆகிய மூலிகை அடங்கிய பைகள் ரூ.7-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மூலிகைப் பையை 20 நாட்களுக்கு ஒருமுறை மாற்றிக் கொள்ளலாம். விற்பனை நோக்கமாக இருந்தாலும் அதில் மக்களுக்குப் பயன் தரும் வகையில் இதைத் தயாரித்துள்ளோம். மேலும், இதைப் பயன்படுத்தும்போது, இதில் அடங்கிய மூலிகை குறித்த பயன் மற்றும் பயன்பாடு குறித்து விழிப்புணர்வும் மக்களைச் சென்றடையும்.
இங்கு உற்பத்தி செய்யப்படும் மூலிகை முகக்கவசங்கள் தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கும் அனுப்பி வருகிறோம். குறைந்த விலை என்பதால் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு உள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு மாற்றாக துணிப்பைகளைத் தயாரித்து வருகிறோம்" என அவர் கூறினார்.
மூக்கடைப்பைக் குணப்படுத்தும்
இதுகுறித்து நாமக்கல் எர்ணாபுரம் அரசு சித்த மருத்துவர் எஸ்.பூபதி ராஜா கூறும்போது, "துளசி, அதிமதுரம், சுக்கு உள்ளிட்டவை சளியைக் குணப்படுத்தும் தன்மை கொண்டவை. இவற்றை உட்கொள்வது சிறந்த பயனைத் தரும். அதேவேளையில் இவற்றை நுகர்வதும் பயனாக இருக்கும். காரத்தன்மை கொண்ட நறுமணம் மூக்கடைப்பு உள்ளிட்டவற்றைக் குணப்படுத்தும்" என்றார்.
No comments:
Post a Comment