
குரூப்-1, குரூப்-2, குரூப்-4 தேர்வுகள் கட்டாயம் நடக்கும். தேர்வர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம். தேர்வுக்குத் தயாராகுங்கள் என டிஎன்பிஎஸ்சி செயலர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இந்திய அளவில் அரசுப் பணிக்காக தேர்வு மூலம் அதிக அளவில் தேர்வு செய்யப்படுவது தமிழகத்தில்தான். டிஎன்பிஎஸ்சி மூலம் தமிழகத்தில் ஆட்சிப் பணி உள்ளிட்ட அரசுப் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இந்த ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு ஏப்ரலிலும், குரூப்-2 தேர்வு ஜூலையிலும் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கரோனா தொற்று காரணமாக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. குரூப்-4 தேர்வும் நடைபெற உள்ளது.
அகில இந்திய ஆட்சிப் பணித் தேர்வுகள் மே 31-ம் தேதி நடப்பதாக இருந்த நிலையில் 2 முறை ஒத்திவைக்கப்பட்டு தற்போது அக்டோபர் 4-ம் தேதி நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடத்தப்படுமா என்கிற சந்தேகம் தேர்வுக்குத் தயாராவோர் மத்தியில் எழுந்துள்ளது.
இந்நிலையில் சிந்தாதிரிப்பேட்டையில் மருத்துவ முகாமைத் தொடங்கி வைக்க அமைச்சர் ஜெயக்குமார் வந்தார். அவருடன் வந்த டிஎன்பிஎஸ்சி செயலர் நந்தகுமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்துப் பேசினர்.
தேர்வு நடப்பது குறித்த தேர்வர்களின் சந்தேகத்தைக் கேட்டனர். அதற்குப் பதிலளித்த நந்தகுமார், ''தேர்வுகள் நடைபெறுமா, காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுமா? என்கிற சந்தேகம் எல்லாம் வேண்டாம். கட்டாயம் மாணவர்கள் நம்பிக்கையுடன் படிக்கலாம். கோவிட்-19 பிரச்சினை தீர்ந்தவுடன் குரூப்-1, குரூப்-2 தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும்.
இரண்டு தேர்வுக்கும் 3 மாத கால இடைவெளி இருக்கும் வகையில் அறிவிப்பு இருக்கும். மாணவர்கள் தொடர்ந்து குரூப் தேர்வுகளுக்குத் தயாராகலாம்'' என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment