
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால், தூய்மை பணிகளுக்காக தலைமை செயலகம், பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட தமிழக அரசு அலுவலங்கள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஜூலை மாதம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கும் என்று எச்சரித்துள்ளனர். தற்போது, தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 18ம் தேதியில் இருந்து அனைத்து அரசு அலுவலகங்களிலும் 50 சதவீத ஊழியர்களுடன் சுழற்சி முறையில் பணியாற்றி வருகிறார்கள். சென்னை, தலைமை செயலகத்தில் மட்டும் தினசரி 3,500க்கு மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் கொரோனா தொற்று தலைமை செயலக ஊழியர்களுக்கு அதிகரித்து வருகிறது. அங்கு கடந்த 8ம் தேதி நிலவரப்படி 44 ஊழியர்கள் கொரோனா பிடியில் சிக்கி இருந்தனர். இதைத்தொடர்ந்து 250 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 138 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் மருத்துவமனைக்கு போக விரும்பாமல் வீட்டு தனிமையில் இருக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் அனைத்து அலுவலகங்களும் இன்றும்(சனிக்கிழமை), நாளையும்(ஞாயிற்றுக்கிழமை) மூடப்படுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள் அடிப்படையில், ஒவ்வொரு அரசு அலுவலகங்களும் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை முழு அளவில் மேற்கொள்வதற்காக இரண்டாம் சனிக்கிழமைகளில் மூடப்பட வேண்டும் என்றும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் சுத்திகரிப்புப் பணி நடத்தப்பட வேண்டும் எனவும், தலைமைச் செயலகத்தில் உள்ள அனைத்து துறை செயலாளர்களுக்கும், பொதுத்துறை முதன்மைச் செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) பி.செந்தில்குமார் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. அதன்படி, தலைமை செயலகத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் செய்து வருகின்றனர். அதேவேளையில், நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை வளாகத்திலும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த வளாகத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வரும் நிலையில், இங்கு 5 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment