Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, August 21, 2020

10ம் வகுப்பு, பிளஸ் 2 சான்றிதழில் பிழைதிருத்தம் செய்ய சிறப்பு வாய்ப்பு

ஹெச்எம்களுக்கு தேர்வு துறை உத்தரவு

நெல்லை : 10ம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழில் பிழைகள் ஏதும் இருப்பின் திருத்தம் செய்ய அரசு தேர்வுகள் துறை உத்தரவிட்டுள்ளது. உரிய திருத்தம் செய்யப்படாமல் மதிப்பெண் சான்றிதழ் வழங்க நேரிட்டால் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசு தேர்வுகள் துறை இயக்குநர் எச்சரித்துள்ளார். அரசு தேர்வுகள் இயக்குநர் உஷாராணி உத்தரவின்பேரில் முதன்மை கல்வி அலுவலர்கள் சார்பில் அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: அனைத்து உயர்நிலை மேல்நிலைப்பள்ளி தலை மை ஆசிரியர்களுக்கும் 2020ம் ஆண்டு 10ம் வகுப்பு பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகளுக்கான பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள தற்போது இறுதியாக ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

எனவே மாணவர்களுக்கு வழங்கிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பட்டியலில் திருத்தங்கள் இருந்தால் எந்தெந்த மாணவருக்கு என்னென்ன திருத்தங்கள் செய்யவேண்டும் என்பதற்கான பட்டியலை வகுப்பு வாரியாக பதிவெண் வாயிலாக பள்ளி தலைமை ஆசிரியர்கள் தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் வரும் 24 முதல் 29ம் தேதி வரையிலான நாட்களில் அரசுத் தேர்வுத்துறை இணையதளத்திற்குச் சென்று தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் பயன்படுத்தி மாணவர்களது பெயர் ஆங்கிலம் மற்றும் தமிழ் பெயர், தலைப்பெழுத்து, பிறந்த தேதி, புகைப்படம், பயிற்றுமொழி, மொழிப்பாடம், பள்ளியின் பெயர் ஆகியவற்றில் உள்ள திருத்தங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

10ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர் பெயர்களில் ஆங்கிலம், தமிழில் உள்ள திருத்தங்களையும் பள்ளித் தலைமையாசிரியர்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மாணவரது மற்றும் பெற்றோரது தமிழ்ப் பெயர் திருத்தம் மேற்கொள்வதாக இருந்தால் ஏற்கனவே உள்ள பெயரை முழுமையாக நீக்கிவிட்டு புதிதாக பெயரை தட்டச்சு செய்ய வேண்டும். பள்ளியின் பெயரில் திருத்தம் மேற்கொள்வதற்கு பள்ளியின் விவரங்கள் உள்ள பகுதிக்கு சென்று திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.

பெயர்ப் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்திச் செய்வதற்கு அந்தந்த மாவட்டத்தில் உள்ள அரசு தேர்வுகள் தொடர்பான பணிகளை மேற்கொள்ளும் ஒருங்கிணைப்பாளர்களின் அலைபேசி எண்ணை தொடர்புகொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள கோரி முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு ஏற்கனவே கடிதம் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. அக்கடிதத்தில் தெரிவித்துள்ள திருத்தங்களை பள்ளி தலைமை ஆசிரியரே தற்போது குறிப்பிட்டவாறு இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

தலைமையாசிரியர்கள் திருத்தங்கள் மேற்கொண்ட பின்னர் அதன் விபரத்தை நகல் எடுத்து அதில் பள்ளி தலைமையாசிரியர் கையொப்பமிட்டு பள்ளி முத்திரையுடன் செப்டம்பர் 1ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மாணவர்களின் நலன் கருதி பிழைகளற்ற மதிப்பெண் சான்றிதழ் பெறுவதற்காக அச்சிட வழங்கப்படும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாமல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்ட பிறகு மதிப்பெண் சான்றுகளில் திருத்தம் செய்யக்கோரி இந்த அலுவலகத்தில் மனுக்கள் பெறப்படின் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள பள்ளிக்கல்வித் துறைக்கு பரிந்துரை செய்யப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment