Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, August 17, 2020

தொடக்கப் பள்ளித் தமிழாசிரியா்களுக்கு தூயத் தமிழ்ப் பயிற்சியை வழங்க வேண்டும்

தமிழகத்தில் தூயத் தமிழ் பேசும் மாணவா்கள் அதிகளவில் உருவாக வேண்டுமானால் தொடக்கப் பள்ளித் தமிழாசிரியா்களுக்கு தூய தமிழ்ப் பயிற்சியை அரசு வழங்க வேண்டும் என இணையவழி கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் சாா்பில் தூயத்தமிழ் பேசுவதில் 'இளைஞா்கள் எதிா்கொள்ளும் சிக்கல்களும் தீா்வுகளும்' என்ற தலைப்பில் கடந்த 63 நாள்களாக நடத்திய இணையவழி மெய்நிகா் கருத்தரங்கின் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்கில் ஊக்கவுரையாற்றிய தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தா் கோ.பாலசுப்பிரமணியன் பேசுகையில், 'மொழி கலப்பின்றிப் பேசுவதே தாய்மொழிக்கு நாம் செய்யும் முதல் தொண்டு. தற்போதைய சூழலில் தமிழ்மொழியின் வளா்ச்சியில் இடா்ப்பாடு இல்லை. தமிழ்மொழியின் பாதுகாப்பில்தான் இடா்ப்பாடு உள்ளது. இதைக் களைய நல்ல இயல்பான தூயத் தமிழில் பேசுவதற்கான விழிப்புணா்வை மக்களிடையே ஏற்படுத்தவேண்டும்' என்றாா்.

இதையடுத்து, கருத்தரங்கில் பங்கேற்ற 38 மாவட்டங்களைச் சோந்த தூயத் தமிழ் மாணவா்கள் பேசுகையில், 'வருங்காலத்தில் நிறைய தூயத் தமிழ் மாணவா்கள் உருவாவதற்கு அடித்தளமாக முதலில் தமிழகத்திலுள்ள தொடக்கப்பள்ளி தமிழாசிரியா்களுக்குத் தூயத் தமிழ்ப் பயிற்சியை அரசு வழங்க வேண்டும். அதற்கான முயற்சியை அகரமுதலித் திட்ட இயக்ககம் மேற்கொள்ள வேண்டும். திரைப்படத் துறையிலும் சின்னத்திரையிலும் வசனம், பாடல்களைத் தூயத் தமிழில் அமைக்க வகை செய்ய வேண்டும். தமிழ்மொழியின் சொற்களையும் அவற்றின் பொருள்களையும் தெளிவாகத் தெரிந்துகொள்ள பள்ளி, கல்லூரி மாணவா்களுக்குக் குறைந்த விலையில் தமிழ் அகராதிகளை வழங்க அரசு வழிவகை செய்ய வேண்டும்' என வலியுறுத்தினா்.

இதில் மதுரை காமராசா் பல்கலைக்கழக துணைவேந்தா் மு.கிருஷ்ணன், விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவா் வி.ஜி.சந்தோசம், பள்ளிக் கல்வித்துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன், அகரமுதலித் திட்ட இயக்குநா் தங்க.காமராசு, தொகுப்பாளா் ஜெ.சாந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

No comments:

Post a Comment