Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, September 11, 2020

பள்ளிக் கல்வி இயக்குனரின் அதிகாரம் திடீர் குறைப்பு

பள்ளிக் கல்வி துறையில்,இயக்குனருக்கான அதிகாரம் குறைக்கப்பட்டு, பள்ளிக் கல்வி கமிஷனருக்கு, கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக, செங்கோட்டையன் பொறுப்பேற்றது முதல், பல்வேறு மாற்றங்களை செய்துள்ளார்.

ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங், 'ஆன்லைன்' முறைக்கு மாறியது. இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் மாணவர் சேர்க்கை, ஆசிரியர்களின் சம்பளம் மற்றும் பணி விபரங்கள் உள்ளிட்டவையும், ஆன்லைன் முறைக்கு மாறின.மாவட்ட அளவில், சி.இ.ஓ.,க்கள் என்ற, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டது.

இணை இயக்குனர்களின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டன.அதேபோல, பள்ளிக் கல்வி இயக்குனரகத்தில், புதிதாக கமிஷனர் பதவி உருவாக்கப்பட்டது. அதில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிஜி தாமஸ் வைத்யன், முதல் கமிஷனராக நியமிக்கப்பட்டார்.

அவருக்கு, அரசின் கல்விக் கொள்கை குறித்து ஆய்வு செய்வது, பள்ளிகளின் செயல்பாடுகளை பார்வையிடுவது, புதிய பாடத்திட்ட செயல்பாடுகளை ஆய்வு செய்வதுபோன்ற பணிகள் வழங்கப்பட்டுள்ளன.படிப்படியாக, கமிஷனருக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.

அதன் விளைவாக, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பனுக்கான அதிகாரம் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, பள்ளிக்கல்வி வட்டாரங்கள் கூறியதாவது:

பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கைகள் அனுப்புவது வழக்கம்.

இனி, கமிஷனரின் அனுமதி பெற்றோ அல்லதுஒப்புதல் பெற்றோ, சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.முக்கிய முடிவுகளை, கமிஷனரின் அனுமதியின்றி மேற்கொள்ளக் கூடாது.

பள்ளி விடுமுறை, பள்ளி வேலை நாட்கள், அகாடமிக் விவகாரம் போன்றவற்றில், கமிஷனரின் அறிவுரையை பெற்ற பின்னரே செயல்பட வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவின் எதிரொலியாக, பள்ளிகளின் காலாண்டு விடுமுறை அறிவிப்பையும், 'ஆன்லைன்' வகுப்புகள் ரத்து தொடர்பான அறிவிப்பையும், அமைச்சர் வெளியிட்டார்.

அவரை தொடர்ந்து, பள்ளிக் கல்வி கமிஷனர் சிஜி தாமஸ் செய்திக்குறிப்பாக வெளியிட்டார். வரும் காலங்களில், இயக்குனரின் அதிகாரங்கள், மேலும் குறைக்கப்படும் என, தெரிகிறது. இவ்வாறு, அந்த வட்டாரங்கள் கூறின.

No comments:

Post a Comment