Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, September 11, 2020

நோய் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள மாணவர்களுக்கு NEET தேர்வு எழுத அனுமதி இல்லை

நாடு முழுவதும் நீட் தேர்வுகள் வரும் 13ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் நீட் உள்ளிட்ட தேசிய அளவிலான தகுதித்தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மாணவர்களை நீட் தேர்வு எழுத அனுமதிக்கக்கூடாது என்று மத்திய அரசு கூறியுள்ளது.

மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் 13ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு இந்த தேர்வை நடத்துவதற்கு தேசிய தேர்வு முகமை தற்போது தயாராகி வருகிறது. 

கொரோனா பரவல் அச்சம் உள்ள இந்த கால கட்டத்தில் நீட் தேர்வினை ஒத்திவைக்க வேண்டும் என்று நாடு முழுவதும் எதிர்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர். 

நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இதனையடுத்து நீட் தேர்வு நடைபெறுவது உறுதியாகியுள்ளது.

நாடு முழுவதும் இந்த தேர்வை 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 பேர் எழுத உள்ளனர். தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 990 பேர் எழுதுகின்றனர். 

கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு தனி மனித இடைவெளியோடு மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு ஏதுவாக 3 ஆயிரத்து 842 தேர்வு மையங்களாக எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. 

ஒவ்வொரு தேர்வு அறைக்கும் 24 மாணவர்களுக்கு பதிலாக 12 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர்.

மாணவர்கள் தேர்வு அறைக்குள் வரும்போதும், தேர்வு அறையிலும் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை குறித்த வழிகாட்டும் ஆலோசனைகள் ஹால் டிக்கெட்டோடு சேர்த்து வழங்கப்பட்டு இருப்பதாகவும், அதனை மாணவர்கள் முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

இதுதவிர இந்த தேர்வுக்கு ஒத்துழைப்பு கொடுக்க, அந்தந்த மாநில அரசுகளுக்கு தேசிய தேர்வு முகமை கடிதமும் எழுதியுள்ளது. தேர்வு அறைக்குள் நுழையும் மாணவர்கள் தேசிய தேர்வு முகமையால் வழங்கப்படும் முக கவசத்தைதான் பயன்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

ஹால் டிக்கெட்டுகளில் பூர்த்தி செய்ய வேண்டிய விவரங்களை சரியாக பூர்த்தி செய்து தேர்வு முடிந்ததும், தேர்வுக்கூட கண்காணிப்பாளரிடம் தேர்வர்கள் ஒப்படைக்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால் விடைத்தாள் மதிப்பீடு செய்யாமலும் போகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே தேர்வர்கள் ஹால் டிக்கெட்டில் கேட்கப்பட்டிருக்கும் தகவலை முறையாக பூர்த்தி செய்ய வேண்டும்.

நீட் வழிகாட்டு நெறிமுறைகள்

நீட் தேர்வு எழுத வரும் மாணவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். கிளவுஸ், தண்ணீர் பாட்டில், சானிடைசர் என தனித்தனியாக பயன்படுத்த வேண்டும். 

மாணவர்கள் தேர்வு எழுதும் அறைக்குள் நுழையும் முன்பாக கொடுக்கப்படும் முக கவசத்தை புதிதாக மாணவர்கள் பயன்படுத்த வேண்டும்.

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மாணவர்களை நீட் தேர்வு எழுத அனுமதிக்கக்கூடாது என்று மத்திய அரசு கூறியுள்ளது. 

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வு மையங்களும் அமைக்கக்கூடாது என்று மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. 

கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிப்போரை தேர்வுப் பணிகளில ஈடுபடுத்தக் கூடாது என்று கூறியுள்ளது.

மாணவர்களும், கண்காணிப்பாளர்களும் தேர்வு மையத்துக்குள் நுழையும் முன் உடல்வெப்ப சோதனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். 

மாணவர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் தனிமனித இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

மாணவர்களுக்கு இடையே 6 அடி தூர இடைவெளி இருக்க வேண்டும். தேர்வு முடிந்த பின் மாணவர்கள் ஒவ்வொருவராக மட்டுமே வெளியேற வேண்டும்.

மத்திய சுகாதாரத்துறையின் இந்த அறிவிப்பு நீட் தேர்வுக்கு இரவு பகல் பாராமல் படித்து வந்த பல மாணவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இந்த ஆண்டு மருத்துவ கனவோடு பயிற்சி பெற்று வந்த பல மாணவர்கள் நோய் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்தால் அவர்களின் மருத்துவக்கனவு இந்த ஆண்டு நனவாகாமல் போக வாய்ப்பு உள்ளது என்பதுதான் வேதனை.

No comments:

Post a Comment