Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, November 6, 2020

சென்னை உள்ளிட்ட 3 நகரங்களில் நீரிழிவு நோய் அதிகரிப்பு; புகை பிடித்தல், ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இல்லாததால் அதிகரிப்பு: ஆய்வில் தகவல்

தெற்கு ஆசியாவில் சென்னை உள்ளிட்ட 3 நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவு, கொலஸ்ட்ரால் கட்டுப்பாட்டில் இருந்தபோதிலும் புகை பிடித்தல், ரத்தக் கொதிப்பு கட்டுப்பாட்டில் இல்லாததால் தொடர்ந்து நீரிழிவு நோயின் பாதிப்பு அதிகரித்து வருகிறது எனத் தெரியவந்துள்ளது.

இதுகுறித்த ஆய்வுத் தகவல்கள் வருமாறு:

நீரிழிவு நோய் பாதிப்பு குறித்து தெற்கு ஆசியாவில் உள்ள 3 மிகப்பெரிய நகரங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் ரத்த சர்க்கரை அளவு, கொலஸ்ட்ரால் கட்டுப்பாட்டில் இருந்தபோதிலும் புகை பழக்கம் மற்றும் ரத்தக் கொதிப்பு போன்றவை கட்டுப்பாட்டில் இல்லாத காரணத்தால் நீரிழிவு நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்று தெரியவந்துள்ளது.

'2010 முதல் 2016 வரை தெற்காசியாவில் நகர்ப்புற நீரிழிவு நோய் பாதிப்பு மற்றும் பராமரிப்பு இலக்குகளை அடைவதில் தற்காலிக மாற்றங்கள்' என்னும் இந்த ஆய்வை தெற்காசியாவின் இருதய ஆபத்து குறைப்பு மையம் மேற்கொண்டது. இந்த ஆய்வு அறிக்கை சமீபத்தில் நீரிழிவு மருத்துவம் என்ற பெயரில் மிகவும் புகழ்பெற்ற பிரிட்டிஷ் ஜர்னல் பத்திரிகையில் ஆன்லைனில் வெளிவந்தது.

இந்த ஆய்வு இந்திய பொது சுகாதார அறக்கட்டளையை அடிப்படையாகக் கொண்டு புதுடெல்லியில் செயல்படும் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ் - தெற்காசியாவில் இருதய-வளர்சிதை மாற்ற ஆபத்து குறைப்பு மையம், புதுடெல்லியைச் சேர்ந்த நாள்பட்ட நோய் கட்டுப்பாட்டு மையம், புதுடெல்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் சங்கம், சென்னையைச் சேர்ந்த மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை, பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் உள்ள அகா கான் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் அட்லாண்டாவைச் சேர்ந்த எமோரி பல்கலைக்கழகம் உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது.

சிஏஆர்ஆர்எஸ் என்பது தெற்காசியாவின் மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவில் சென்னை மற்றும் புதுடெல்லி மற்றும் பாகிஸ்தானில் கராச்சி உள்ளிட்ட 3 பெரிய நகரங்களின் ஆய்வுகள் நடத்தப்பட்டன.

இந்த ஆய்வின் முக்கிய அம்சங்கள்

இந்த ஆய்வு 2 மாதிரிகளின் அடிப்படையில் இந்தியாவில் சென்னை மற்றும் புதுடெல்லி மற்றும் பாகிஸ்தானில் உள்ள கராச்சி ஆகிய நகரங்களில் உள்ள பெரியவர்களிடம் மேற்கொள்ளப்பட்டது. இது 2010-11இல் 16,288 பேரிடமும் 2015-16இல் 14,587 பேரிடமும் நடத்தப்பட்டது.

இந்த ஆய்வின் முக்கிய நோக்கம் நீரிழிவு நோயின் பரவலான மாற்றங்கள் மற்றும் அதைக் கட்டுப்படுத்துதல் மற்றும் அதற்கான சிகிச்சை தொடர்பான விஷயங்களைக் கொண்டதாகும். நீரிழிவு சிகிச்சையின் தரத்தை அறிந்து கொள்வதற்கும் இந்த ஆய்வானது 2010-11 மற்றும் 2015-16 ஆகிய 5 ஆண்டு இடைவெளியில் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின் புதிய தகவல்கள்

தெற்காசியாவின் இந்த 3 பெரிய நகரங்களில் நீரிழிவு நோய் பாதிப்பு உயர்ந்துள்ளது என்று இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த 2010-11இல் 19 சதவீதமாக இருந்த பாதிப்பானது 2015-16இல் 20 சதவீதமாக அதிகரித்துள்ளது.

அடுத்ததாக 4 நீரிழிவு பராமரிப்பு இலக்குகளை அடைவது தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதாவது 1. ரத்த சர்க்கரை அளவு (HbA1c <7.0%), 2. ரத்தக் கொதிப்பு (BP<140/90 mmHg), 3. கொலஸ்ட்ரால் நிலை (LDL cholesterol <100 mg/dl) மற்றும் 4. புகை பிடித்தல் இல்லாதது ஆகியவை ஆகும்.

இவை ஏபிசிடி என முறையே (ஏ-ஏ1சி ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாடு, பி - ரத்தக் கொதிப்பு கட்டுப்பாடு, சி - கொலஸ்ட்ரால் (லிப்பிடு) கட்டுப்பாடு மற்றும் டி - புகை பிடித்தல் நிலை) பெயரிடப்பட்டது. இந்த 4 காரணிகளால் எத்தனை நபர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டனர் என்றும் தனித்தனியாகவும் மொத்தமாகவும் இந்த காரணிகளால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

இதில் ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் முன்னேற்றங்கள் இருப்பது தெரியவந்தது. இது கடந்த 2010-11 ஆம் ஆண்டில் 25 சதவீதமாக இருந்தது. 2015-16ல் 30 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதேபோல், இந்தக் காலகட்டத்தில் கொலஸ்ட்ரால் கட்டுப்பாடும் 34 சதவீதத்தில் இருந்து 45 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இருப்பினும், இந்தக் காலகட்டத்தில் ரத்த அழுத்தக் கட்டுப்பாடு அல்லது புகை பிடிக்கும் நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் எதுவும் இல்லை. இந்த ஆய்வில் வயது, பாலினம், பொருளாதார நிலை ஆகியவற்றின் காரணமாக எந்தவித மாற்றமும் கண்டறியப்படவில்லை.

2010-11 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2015-16 ஆம் ஆண்டில் அதிக அளவிலான நீரிழிவு நோயாளிகள் இரண்டு, மூன்று அல்லது நான்கு சிகிச்சை இலக்குகளை சந்தித்ததாகவும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. இருப்பினும், ஒட்டு மொத்தமாக 7 சதவீத பேர் மட்டுமே 4 சிகிச்சை இலக்குகளையும் பூர்த்தி செய்தனர்.

ஆகவே, ரத்த சர்க்கரை கட்டுப்பாடு மற்றும் கொலஸ்ட்ரால் கட்டுப்பாட்டில் சில முன்னேற்றங்கள் இருந்தது ஆய்வில் தெரியவந்தாலும், குறிப்பாக இருதய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய காரணிகளை பொறுத்தவரை ரத்த அழுத்தம் மற்றும் புகைத்தல் போன்றவற்றில் பெரிய இடைவெளிகள் இன்னும் உள்ளன.

இந்த ஆய்வின் முக்கியத்துவம்

நீரிழிவு சிகிச்சையின் தரத்தை மேம்படுத்த ஒருங்கிணைந்த கொள்கை, அமைப்பு, மருத்துவ மற்றும் தனிப்பட்ட முயற்சிகளின் அவசரத் தேவையை இந்த ஆய்வுகள் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளன. இவற்றைத் துரிதமாகச் செய்யாவிட்டால் தனி நபர்களின் உடல்நலம் மற்றும் பார்வை பிரச்சினை, இருதய நோய், சிறுநீரக நோய், சுகாதாரப் பாதுகாப்பு முறைகளில் அதிக அழுத்தம், மற்றும் இறுதியில் அது தெற்காசிய நாடுகளின் பொருளாதாரத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

இதுகுறித்து இந்த ஆய்வின் ஆசிரியர்கள் கூறியிருப்பதாவது:-

டாக்டர் மோகன்'ஸ் நீரிழிவு சிறப்பு மையத்தின் நிர்வாக இயக்குனரும், மெட்ராஸ் நீரிழிவு அறக்கட்டளையின் துணைத் தலைவருமான டாக்டர் ஆர்.எம். அஞ்சனா கூறுகையில், ''இந்த ஆய்வின் தகவல்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும். ஏனெனில் அவை ஒற்றை ஆபத்து காரணியைக் கட்டுப்படுத்துவதை விட இருதய-வளர்சிதை மாற்ற ஆபத்து காரணிகளின் தீவிரம் மற்றும் அதை கட்டுப்படுத்துவதற்கான அவசியத்தை வலியுறுத்துகின்றன.

4 நீரிழிவு பராமரிப்பு இலக்குகளையும் 7 சதவீதத்துக்கும் குறைவான நபர்கள் மட்டுமே அடைந்துள்ளனர் என்பது கவலைக்குரியதாகும். இது நீரிழிவு நோயைத் திறமையாகக் கையாள்வதற்கான தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுவதோடு ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை மட்டும் நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை'' என்று தெரிவித்தார்.

இந்த ஆய்வு குறித்து டாக்டர் மோகன்'ஸ் நீரிழிவு சிறப்பு மையத்தின் தலைவரும், மெட்ராஸ் நீரிழிவு அறக்கட்டளையின் தலைவருமான டாக்டர் வி.மோகன் கூறுகையில், ''தெற்காசியாவின் இந்த 3 பெரிய நகரங்களில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. மேலும் 5 பெரியவர்களில் ஒருவரை இந்த நோய் பாதிக்கிறது என்று இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

மற்றொரு முக்கியமான விஷயம் பெரும்பாலான நீரிழிவு நோயாளிகளிடம் நல்ல முன்னேற்றம் இருப்பதும் தெரியவந்தது. இந்த முன்னேற்றத்திற்கான முக்கியமான காரணங்கள், நீரிழிவு நோயாளிகளிடையிலான ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாடு தொடர்பான விழிப்புணர்வு அதிகரிப்பு மற்றும் பரவலான சிகிச்சை முறைகள் கிடைப்பது உள்ளிட்டவை ஆகும்'' என்று தெரிவித்தார்.

அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் உள்ள ரோலின்ஸ் ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த், எமோரி பல்கலைக்கழகத்தின் உலகளாவிய சுகாதாரம் மற்றும் தொற்றுநோயியல் இணைப் பேராசிரியர் டாக்டர் முகமது கே. அலி இந்த ஆய்வு குறித்துக் கூறுகையில், இந்த ஆய்வில், ''லிப்பிட் கட்டுப்பாட்டில் (எல்டிஎல் கொழுப்பின் அளவு) மேம்பாடுகளை நாங்கள் கவனித்தோம். இதற்குக் காரணம் அதற்கான சரியான மருந்துகளை எடுத்துக் கொள்வதே ஆகும்.

இதில் சில மேம்பாடுகள் இருந்தாலும், நீரிழிவு நோயாளிகளில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட கெட்ட கொழுப்பு அதிக அளவில் இருந்தது கவலைக்குரியதாகும். நீரிழிவு நோய்க்கு சர்க்கரை மட்டும் காரணம் இல்லை என்பதை இந்த ஆய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. நீரிழிவு நோய் குறித்து நாம் இன்னும் முழுமையாக கண்டறிய வேண்டும்'' என்று தெரிவித்தார்.

இதுகுறித்து அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் உள்ள ரோலின்ஸ் ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த், எமோரி பல்கலைக்கழகத்தின் உலகளாவிய சுகாதாரம் மற்றும் தொற்றுநோயியல் பேராசிரியரும் இந்த ஆய்வின் முதன்மைப் புலனாய்வாளருமான டாக்டர் கே.எம். வெங்கட் நாராயணன் கூறுகையில், ''இருதய ஆபத்துக் காரணிகள் தொடர்பாக போதிய விழிப்புணர்வு இல்லாமையால் நீரிழிவு நோய் வேகமாக அதிகரித்து வருவதற்கு இணையாக அதுவும் உள்ளது. இதன் காரணமாக எதிர்காலத்தில் இந்தப் பகுதிகளில் இருதயம் சம்பந்தமான நோய்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இது இந்த தெற்காசிய நாடுகளின் சுகாதார அமைப்புகள் மற்றும் பொருளாதாரத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இந்தப் பராமரிப்பு இடைவெளிகளை சரி செய்வதற்கு ஒருங்கிணைந்த கொள்கை, முறையான மருத்துவ மற்றும் தனிப்பட்ட முயற்சிகள் தேவை. அடுத்த ஆண்டு இன்சுலின் கண்டுபிடிக்கப்பட்ட 100-வது ஆண்டாகும். இது நீரிழிவு நோயைக் கண்டறிதல் மற்றும் கட்டுப்பாட்டுக்கான இலக்குகளை நிர்ணயிப்பதற்கும், அத்தகைய இலக்குகளை அடைவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும்'' என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment