Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, November 24, 2020

போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக புதிய திட்டம்

யு.பி.எஸ்.சி., - ஐ.ஐ.டி., மற்றும் 'நீட்' உள்ளிட்ட போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும், தலித் மற்றும் ஓ.பி.சி., எனப்படும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஏழை மாணவர்களுக்கு, மத்திய அரசு இலவச பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.


இதில், 50 சதவீத மாணவர்கள், தாங்கள் விரும்பும் பயிற்சி மையங்களில் சேர்ந்து இலவசமாக படிக்கும் வாய்ப்பை உருவாக்கித் தர, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.யு.பி.எஸ்.சி., எனப்படும், மத்திய அரசு பணியாளர்கள் தேர்வாணையம், எஸ்.எஸ்.சி., எனப்படும் மாநில அரசு பணியாளர்கள் தேர்வாணையம், பொதுத் துறை நிறுவன பணிகள், ஐ.ஐ.டி., - ஜே.இ.இ., மற்றும் மருத்துவ படிப்புக்கான நீட் உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இலவச பயிற்சி

பொருளாதார வசதி உள்ள மாணவர்கள், பல லட்சம் ரூபாய் செலவு செய்து, தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து, போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று வருகின்றனர். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஏழை மாணவர்களுக்கு, இந்தப் படிப்புகள் வெறும் கனவாக இருந்து வந்தன.இதை நனவாக்க, மத்திய அரசு பல்வேறு திட்டங்களை நடைமுறை படுத்தி வருகிறது. இதில், பொருளாதார நிலையில் பின்தங்கிய தலித் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள், போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்காக, அவர்களுக்கு சிறப்பு இலவச பயிற்சி வகுப்புகளை, மத்திய சமூக நீதித் துறை அமைச்சகம் அளித்து வருகிறது.இதில், 70 சதவீத தலித் மாணவர்களும், 30 சதவீத ஓ.பி.சி., மாணவர்களும் பயனடைந்து வருகின்றனர். பயிற்சி பெறும் மாணவர்களில், 10 சதவீதம் பேர், பல்வேறு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சியும் அடைகின்றனர்.

ஆண்டுக்கு, 8 லட்சம் ரூபாய் மற்றும் அதற்கு குறைவான குடும்ப வருமானம் உள்ள, தலித் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள், இந்தப் பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயனடைய தகுதி பெறுகின்றனர்.இத்திட்டத்தின் கீழ், பல்வேறு தனியார் பயிற்சி மையங்கள், மத்திய அரசுடன் பதிவு செய்து உள்ளன.

முடிவு

இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெற தேர்வாகும் மாணவர்களுக்கான பயிற்சி மையங்களை, மத்திய அரசே தேர்வு செய்து, அதில் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இத்திட்டத்தில், ஆண்டு தோறும், 4,000 மாணவர்கள் தற்போது பயன்அடைந்து வருகின்றனர்.இத்திட்டத்தில், சிறிய மாற்றத்தை செய்ய, மத்திய சமூக நீதித் துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி, தேர்வாகும், 4,000 மாணவர்களில், படிப்பில் சிறந்து விளக்கும், 2,000 மாணவர்களை தேர்வு செய்து, அவர்கள் விரும்பும் பயிற்சி மையங்களிலேயே, அவர்களை சேர்த்து விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

அந்தப் பயிற்சி மையம், மத்திய அரசு திட்டத்தில் பதிவு பெறாத நிறுவனமாக இருந்தாலும், மாணவர்களுக்கான முழு கட்டணத்தையும் அரசே செலுத்தி, அவர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது. தற்போது, 50 சதவீத மாணவர்களுக்கு கிடைக்கும் இந்த வசதி, விரைவில், 100 சதவீத மாணவர்களையும் சென்று சேரும் அளவுக்கு, விரிவுபடுத்தப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்

No comments:

Post a Comment