Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, December 13, 2020

உடலை வலுவாக்கும் உளுந்து கஞ்சி

ஒரு சிலருக்கு உடலானது எப்போதும் பலவீனமாக இருப்பதாக உணர்வார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு தான் இந்த பதிவு. உடலுக்கு உடனடியாக பலம் சேர்க்கும் தன்மை உளுந்துக்கு உண்டு. அதிலும் தோல் நீக்காத கருப்பு உளுந்து உடலின் பலத்தை பல மடங்காக அதிகரிக்கும் தன்மை கொண்டது. இன்று நாம் பார்க்க இருக்கும் கஞ்சியை மட்டும் மூன்று நாட்களுக்கு வைத்து குடித்து பாருங்கள். உங்கள் உடலுக்கு அசுரபலம் கிடைத்து விடும்.

முதுகு வலி, தண்டுவடம், கை, கால் வலி, மூட்டு வலி, பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் ஏற்படக்கூடிய நடு முதுகு வலி, இடுப்பு வலி ஆகியவை இந்த கஞ்சி குடித்தால் பஞ்சாய் பறந்து போய்விடும். இத்தகைய சக்தி வாய்ந்த உளுந்து கஞ்சியை எந்த முறையில் வைத்தால் அதிக பலன் பெறலாம் என்பதை இப்போது காணலாம். சத்து கஞ்சி செய்வதற்கு முதலில் தோல் நீக்காத உளுந்து 100 கிராம் அளவு எடுத்து கொள்ளுங்கள். இதனை மூன்று முறை தண்ணீரில் போட்டு நன்றாக கழுவி கொள்ளவும். பிறகு நல்ல தண்ணீரில் ஆறு முதல் ஏழு மணி நேரம் வரை ஊற வைத்து கொள்ளலாம். உளுந்து ஊறிய பிறகு அதிலுள்ள தண்ணீரை வடிகட்டி ஒரு வெள்ளை துணியில் போட்டு கட்டி முளைகட்ட அனுமதிக்கவும்.

ஒரு சில்வர் பாத்திரத்தில் போட்டு மூடி வைத்து விட்டால் ஆறே மணி நேரத்தில் உளுந்து முளைக்க ஆரம்பிக்கும். முளைக்கட்டிய இந்த உளுந்தை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி மொழு மொழுவென்று அரைத்து எடுத்து கொள்ளவும். இப்போது அடி கனமான ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அரைத்த உளுந்தை அதில் சேர்க்கவும்.

நாம் எவ்வளவு உளுந்து சேர்த்திருக்கின்றோமோ அதற்கு ஐந்து மடங்கு அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். தண்ணீர் குறைவாக இருந்தால் கஞ்சி போல இல்லாமல் களி போல மாறிவிடும். அடுப்பு தீயை மிதமாக வைத்து கைவிடாமல் கிளறி கொண்டே இருங்கள். இதற்கு இடையில் மற்றொரு பாத்திரத்தில் 150 கிராம் வெல்லத்தை பொடி செய்து சேர்க்கவும்.

இதில் 50 ml அளவு தண்ணீர் ஊற்றி கிளறவும். நமக்கு பாகு பதம் எதுவும் தேவையில்லை. வெல்லம் கரைந்தாலே போதும். வெல்லம் கரைந்த பிறகு அதனை வடிகட்டி தனியாக எடுத்து வைத்து விடலாம். உளுந்தின் பச்சை வாசனை போகும் வரை கிளறி கொண்டே இருக்க வேண்டும். இதற்கு குறைந்தது முப்பது நிமிடங்களாவது எடுக்கும்.

உளுந்தின் பச்சை வாசனை போன பிறகு காய்த்து வைத்துள்ள வெல்லத்தை ஊற்றவும். வெல்லத்தின் பச்சை வாசனை போகும் வரை ஐந்து நிமிடம் கிளறி அடுப்பை அணைத்து விடவும். ஒரு தாளிப்பு கரண்டியில் இரண்டு தேக்கரண்டி நெய் ஊற்றி முந்திரி பருப்பு, திராட்சை, பாதாம் பருப்பு மற்றும் ஒரு கையளவு தேங்காய் துருவலை சேர்த்து தாளித்து கஞ்சியில் சேர்க்கவும்.

கடைசியில் ஒரு சிட்டிகை ஏலக்காய் தூள் சேர்த்தால் உளுந்து கஞ்சி தயாராக உள்ளது. இதனை பகல் நேரத்தில் தான் பருக வேண்டும். ஏனெனில் இது ஜீரணமாவதற்கு சிறிது நேரம் எடுக்கும். வாரத்தில் மூன்று நாட்கள் இந்த கஞ்சியை குடித்து வந்தாலே போதும், இரும்பு போல ஸ்ட்ராங் ஆகி விடலாம். இது பெண்களுக்கு மிகவும் சத்தான ஒரு பானம். குறிப்பாக உங்கள் வீட்டில் வயது வந்த பெண் குழந்தைகள் இருந்தால் வாரம் இரண்டு முறையாவது இந்த கஞ்சியை செய்து கொடுங்கள்.

No comments:

Post a Comment