Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, December 28, 2022

'தலைமைச் செயலகம் முற்றுகையிடப்படும்' - தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் எச்சரிக்கை

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் பட்ஜெட் கூட்டத் தொடரின்போது தலைமைச் செயலகம் முற்றுகையிடப்படும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், அகவிலைப்படி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், அரசு அலுவலகங்கள் முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக சென்னை சைதாப்பேட்டையில் 50க்கும் மேற்பட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தை சேர்ந்தவர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்கள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அரசு ஊழியர் சங்கத்தினர், பல ஆண்டுகளாக எங்களது கோரிக்கைகளை எந்த அரசும் நிறைவேற்றவில்லை என்று தெரிவித்தனர். கடந்த ஆட்சியின் போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சி அமைந்த உடன் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றி கொடுக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்ததாக குறிப்பிட்ட அவர்கள், திமுக ஆட்சி அமைந்து 20 மாதங்கள் கடந்தும் இதுவரை எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை என்று கூறினர். தங்களை திமுக அரசு ஏமாற்றிவிட்டதாக குற்றம் சாட்டினர்.

முதலமைச்சர் ஸ்டாலின், அதிகாரிகளின் பேச்சை மட்டுமே கேட்டு செயல்படுவதாக கூறிய அவர்கள், தங்கள் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்கவில்லை என்றால், அடுத்த முறை திமுக ஆட்சி அமையாத நிலை ஏற்படும் என்று எச்சரித்தனர். மேலும் தங்களிடம் 6 சதவிகித வாக்கு இருப்பதாகவும் தெரிவித்தனர். அரசு துறையை மனித வள மேம்பாட்டு நிறுவனமாக, அரசு மாற்றியுள்ளதாக விமர்சித்த அவர்கள், நிதியமைச்சர் டிஎன்பிஎஸ்சி தேவையில்லை என கூறுவதாக குற்றம் சாட்டினர். சமூக நீதி பேசும் திமுக, கார்பரேட் நிறுவனங்கள் போல் செயல்படுவதாக கடுமையாக விமர்சித்தனர்.

தங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி பிப்ரவரி 10ஆம் தேதி மாவட்ட அளவில் பேரணி நடத்தப்படும் என்றும், அதன் பின்னரும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால், மார்ச் 28 ஆம் தேதி அரசு அலுவலங்களில் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்தனர். மேலும், தொடர்ந்து அரசு செவிசாய்க்கவில்லை என்றால், பட்ஜெட் கூட்டத்தொடரின் போது தலைமைச் செயலகத்தை அரசு ஊழியர்கள் முற்றுகையிடுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

No comments:

Post a Comment