Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, January 8, 2023

குளிர்காலத்தில் காது வலி ஏற்படுவது ஏன் - மருத்துவரின் விளக்கம்

மார்கழி, தை, மாசி மாதங்களின் போது குளிரால் தமிழ்நாட்டு மக்களுக்கு உடலில் சில பாதிப்புகள் ஏற்படும்.

அதிலும் குறிப்பாக குளிர் காலத்தின் போது முதியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் காது வலி அடிக்கடி ஏற்படும். இதிலிருந்து மீள என்ன செய்யலாம் என மருத்துவகள் விளக்கம் அளித்து உள்ளனர்.

குளிர்காலத்தின் போது ஏற்படும் காது வலி இயல்பானது என நம்மில் பலர் எண்ணுகின்றனர். ஆனால் உரிய நேரத்தில் கவனிக்கத் தவறினால், காதில் ஏற்படும் வலி அதிகரிக்கும். குளிர்காலத்தில் நமக்கு ஏன் காது வலி ஏற்படுகிறது? இதை எப்படி சமாளிப்பது என்று காது வலி தொடர்பாக பிபிசி தமிழின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார், சென்னையைச் சேர்ந்த காது மூக்கு தொண்டை நிபுணர் வித்யாதரன்.மருத்துவர் வித்யாதரன்

குளிர்காலத்தில் காதுகளில் எதனால் வலி ஏற்படுகிறது?

நமது மூக்கையும் காதையும் இணைக்கும் ஒரு குழாய் தான் இதற்குக் காரணம். யூஸ்டேஷியன் குழாய்(Eustachian Tube) என்று அழைக்கப்படும் இந்தக் குழாய், குளிர் காலத்தின் போது மூக்கின் வழியாக உடலுக்குள் நுழையும் வறண்ட குளிர் காற்றின் காரணமாக மூடிக்கொள்கிறது. இந்தக் குழாய் மூடுவதன் விளைவாக, காது சவ்வுகள் இழுக்கப்பட்டு நமக்கு காது வலி ஏற்படுகிறது. அது மட்டுமின்றி உடலில் மற்ற பாகங்களில் இருப்பதைப் போல நமது வெளிப்புற காதுகளில் கொழுப்பு கிடையாது. இதன் காரணமாக காதுகளைச் சுற்றி எந்தப் பாதுகாப்பும் இல்லை. விலங்குகள் குளிர் காலத்தின் போது தங்களைப் பாதுகாத்து கொள்ள காதுகளை வைத்து முகத்தை மூடிக்கொள்ளும், ஆனால் மனிதர்களுக்கு இத்தகைய அமைப்பு இல்லாததால் குளிர்காலத்தின் போது நமது காதுகளுக்கு வலி ஏற்படும்.

யாருக்கெல்லாம் குளிர்காலத்தின் போது காது வலி ஏற்படும்?

குழந்தைகளுக்கு இருக்கும் யூஸ்டேஷியன் குழாய் அளவில் சிறியதாக இருக்கும். இதனால் குழந்தைகளுக்கு குளிர்காலத்தின் போது காது வலி ஏற்படுகிறது. அதே போல முதியவர்களுக்கும் குளிர்காலத்தில் வலி ஏற்படும் வாய்ப்புள்ளது. பெண்களைப் பொறுத்தவரை 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இந்தப் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.

காது வலி ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

குழந்தைகள், முதியவர்கள் குளிர்காலத்தில் வீட்டில் இருக்கும் போது வெளிப்புற காதுகளை முழுவதுமாக மூடும் வகையில் குல்லா அணிந்து கொள்வதன் மூலம், வறண்ட குளிர்காற்று காதுக்குள் செல்வதைத் தடுக்க முடியும். வெளியே செல்லும் போது காதையும், மூக்கையும் சேர்த்து மூடும் வகையில் ஸ்கார்ஃப் அணிந்து கொள்ளலாம். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அணிவதைப் போன்று வெளியே செல்லும் போது ஸ்கார்ஃப் அணிந்து சென்றால், காது வலி ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.

தமிழ்நாட்டில் இருக்கும் நபர்களுக்கு எந்த மாதங்களில் குளிரால் ஏற்படும் காது வலி ஏற்படுகிறது?

பொதுவாக டிசம்பர் மாதத்தில் தான் தமிழ்நாட்டில் குளிர்காலம் தொடங்கும் என்றாலும், பருவமழைக்காலமான அக்டோபர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை குளிந்த காற்று வீசக்கூடும். அதனால் இந்தக் காலகட்டங்களில் நாம் பாதுகாப்பாக இருப்பது நல்லது.

சளி, மூக்கடைப்பு பிரச்னையால் காது வலி வருமா?

குளிர்காலத்தின் போது காற்றில் வழக்கத்தைவிட அதிகமாக தூசு நிறைந்து இருக்கும். இதன் காரணமாக நாம் சுவாசிக்கும் காற்று மூக்கு வழியாக நுழையும் போது அலர்ஜி ஏற்படுகிறது. இதனால் சளி தொந்தரவு இருக்கும் நபர்களுக்கு யூஸ்டேஷியன் குழாயினுள் தூசு நுழைவதன் காரணமாக காது வலி இயல்பாகவே ஏற்படுகிறது. இது மட்டுமின்றி குளிர்காலத்தின் போது வெட்டவெளிகளில் பணியாற்றும் விவசாயி போன்ற நபர்களில் வெகு சிலருக்கு ஒரு பிரச்னை ஏற்படுகிறது. காதில் ஏற்படும் வலியின் காரணமாக முகத்துடன் இணைந்துள்ள நரம்பில் அழுத்தம் ஏற்பட்டு, அந்த நரம்பின் செயல்பாடு பாதிப்புக்குள்ளாகிறது. இதன் விளைவாக முகத்தில் உள்ள தசைகள் வேலை செய்யாமல் போகின்றன. இதை மருத்துவ குறிப்பில் பெல்ஸ் பாலஸி(Bell's Palsy) என்று அழைக்கிறார்கள். இந்த பாதிப்பு பிரபல பாடகர் ஜஸ்டின் பீபருக்கு சமீபத்தில் ஏற்பட்டது.

சைனஸ் தொந்தரவு இருக்கும் நபர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்?

குளிர் காலத்தின் போது நிலவும் வறண்ட குளிர் காற்றினால், சைனஸ் பிரச்னை உள்ள நபர்களின் மூக்குகளுக்கு உள்ளே இருக்கும் சதைகள் வீங்கும். இதனால் அவர்களுக்கு காது வலி, தலை வலி போன்ற உபாதைகள் ஏற்படும். மற்ற நபர்களை விட சைனஸ் பாதிப்பு இருக்கும் நபர்களுக்கு குளிர்காலத்தின் போது காது வலி ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

காது வலி ஏற்படும் போது என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்?

காது வலி ஏற்பட்ட உடன் மருந்துகளோ, மருத்துவரையோ அணுக வேண்டிய அவசியம் இல்லை. முதல் கட்டமாக குளிர் காலத்தில் வெளியே சென்று வந்த பிறகு, ஆவி பிடிப்பது நல்லது. இப்படி செய்வதன் மூலம் மூக்கினுள் ஈரப்பதம் நிறைந்த சூடான காற்று செல்வதன் வழியே நிவாரணம் கிடைக்கும். அதன் பிறகும் வலி இருந்தால், மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம்.

No comments:

Post a Comment