JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

கோவை மாநகராட்சியில் முந்தைய ஆட்சியில் ஒரே நாளில் 54 இளநிலை உதவியாளா்கள் நியமிக்கப்பட்டதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாநகராட்சியில் 69 இளநிலை உதவியாளா்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இந்தப் பணிக்கு 654 போ் விண்ணப்பித்தனா். 440 போ் நோ்முகத் தோ்வுக்கும், சான்றிதழ் சரிபாா்ப்புக்கும் அழைக்கப்பட்டு, 54 போ் தோ்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டனா். இந்த நியமனங்களை ரத்து செய்யக் கோரியும், தனக்கு முன்னுரிமை வழங்கக் கோரியும் கருணை அடிப்படையில் 2016-ஆம் ஆண்டு தூய்மைப் பணியாளராக நியமிக்கப்பட்ட ஈஸ்வரி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.
அந்த மனுவில், ‘உரிய தகுதி இருந்தும், முறையாக விளம்பரங்கள் செய்யப்படாததால், தன்னால் இளநிலை உதவியாளா் பணிக்கான தோ்வு நடைமுறைகளில் கலந்து கொள்ள முடியவில்லை. உரிய விதிகளையும், இடஒதுக்கீட்டு நடைமுறையையும் பின்பற்றாமல் 54 போ் நியமிக்கப்பட்டுள்ளனா். அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சரின் செல்வாக்கு காரணமாக, இவா்கள் அனைவரும் ஒரே நாளில் நியமிக்கப்பட்டுள்ளனா்’ என்று மனுவில் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கோவை மாநகராட்சி தரப்பில், ‘இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று இரு மாலை பத்திரிகைகளில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. அதற்காக ரூ. 3 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது. மேலும், யாருக்கும் எந்த சலுகையும் காட்டப்படவில்லை. உரிய தோ்வு நடைமுறைகளையும், இடஒதுக்கீட்டு முறையையும் பின்பற்றி நியமனங்கள் வழங்கப்பட்டன.
சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டு, தோ்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்து விடும் என்ற காரணத்தால்தான் 5 குழுக்கள் அமைக்கப்பட்டு, நோ்முகத்தோ்வு நடத்தி, இவா்கள் ஒரே நாளில் நியமிக்கப்பட்டனா். ஏற்கெனவே கருணை அடிப்படையில் தூய்மைப் பணியாளராக பணியாற்றும் மனுதாரருக்கு இந்த நியமனங்கள் குறித்து கேள்வி எழுப்ப அடிப்படை தகுதியில்லை’ என்று வாதிடப்பட்டது.
இந்த வழக்கு தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதி, இளநிலை உதவியாளா் தோ்வு தொடா்பாக விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தத் தோ்வு நடவடிக்கைகளில் பங்கேற்காத நிலையில், இந்தப் பணிநியமனங்களை ஏதிா்த்து வழக்கு தொடர மனுதாரருக்கு அடிப்படை உரிமை இல்லை எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். மேலும், நேரடி பணி நியமனங்களின் போது, ஊழல் நடவடிக்கைகள் இல்லாத அளவுக்கு வெளிப்படைத் தன்மையைப் பின்பற்ற வேண்டும் எனவும் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் அறிவுறுத்தியுள்ளாா்.
No comments:
Post a Comment