அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் ஒரு கோடிக்கும் மேற்பட்டோருக்கு அகவிலைப்படியை 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்த்தி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 6 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படுகிறது. விலைவாசி உயர்வை ஈடுசெய்யும் வகையில், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. நுகர்வோர் விலைப் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு, அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது.
இதற்காக, தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைப் பட்டியலை மத்திய தொழில் துறை அமைச்சகம் ஒவ்வொரு மாதமும் வெளியிடுகிறது.
இதற்கு முன் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ம் தேதி மாற்றப்பட்டது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் முடிவடைந்த அகில இந்திய நுகர்வோர் விலைப் பட்டியலின் 12 மாத சராசரி அடிப்படையில், அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கப்பட்டு, 38 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இது கடந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
இந்நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கான நுகர்வோர் விலைப் பட்டியல் அறிக்கை, கடந்த ஜனவரி 31-ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் அகவிலைப்படியை 4.23 சதவீதம் உயர்த்த வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 1-ஐ கணக்கிட்டு...
அதனால், அகவிலைப்படியை தற்போதுள்ள 38 சதவீதத்திலிருந்து 4 சதவீதம் உயர்த்தி, 42 சதவீதமாக மத்திய அரசு அறிவிக்க வாய்ப்புள்ளதாக அகில இந்திய ரயில்வே ஊழியர்கள் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் சிவ கோபால் மிஸ்ரா தெரிவித்துள்ளார். அகவிலைப்படியை உயர்த்துவதற்கான திட்டத்தை மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத் துறை தயாரித்து, மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பும். அதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டால், கடந்த ஜனவரி 1-ம் தேதியைக் கணக்கிட்டு, அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும்.
இதன் மூலம் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் பயனடைவர்.
மத்திய அரசு அகவிலைப்படியை உயர்த்திய பின்னர், அதற்கு இணையாக மாநில அரசுகளும் அக விலைப்படியை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மாநில அரசுகளின் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களும் பயனடைவர்.
No comments:
Post a Comment