தமிழ் நாட்டில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வருவதற்கான விரிவான அறிக்கையை அனுப்ப அனைத்து துறை செயலாளர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். தமிழகத்திலும் தற்போது நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் திமுக ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவுடன் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பதை ஆராய தமிழ்நாடு அரசு சார்பில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. இந்த வல்லுநர் குழு பரிந்துரைகளை நன்கு பரிசீலித்து, உரிய முடிவை மேற்கொண்டு அரசாணை வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்திடம் தமிழ்நாடு அரசு ஏற்கனவே உறுதியளித்துள்ளது.
இதனையடுத்து பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த விரிவான அறிக்கையை அனுப்ப அனைத்து துறை செயலாளர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி புதிய ஓய்வூதிய திட்டத்திலிருந்து பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற விரும்பும் ஊழியர்களின் விவரங்களை அனுப்ப அனைத்து துறை செயலாளர்களுக்கு தமிழக அரசின் நிதித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஊழியர்கள் அளிக்கும் தகவல்கள், நீதிமன்ற வழக்கு, அரசாணைகள் அடிப்படையில் தமிழக அரசு இறுதி முடிவெடுக்கும் என அரசாணை தெரிவித்துள்ளது. அரசு ஊழியர்களுக்காக தற்போது நடைமுறையில் உள்ள புதிய ஓய்வூதிய திட்டத்திலிருந்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு கொண்டு வருவது குறித்து தமிழக அரசு தீவிர ஆலோசனை செய்து வருகிறது.
2004 ஆம் ஆண்டு அமலுக்கு வந்த புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- யாழன்
No comments:
Post a Comment