கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும் வகையில் நீர்ச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
உடலுக்கு குளிர்ச்சி மற்றும் ஆரோக்கியம் தரும் காய்கறிகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
வெயிலின் தாக்கத்தால் உடலில் இருக்கும் நீர்ச்சத்துக்கள் எல்லாம் உறிஞ்சப்பட்டு சோர்வு ஏற்படும். இந்த காலத்தில் தண்ணீர்ச்சத்து மட்டுமின்றி, உப்புச் சத்து குறைபாடும் ஏற்படும். உடல் வறட்சியைப் போக்குவதற்கு ஒரே வழி, நீர்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள பழங்கள், காய்கறிகள், தண்ணீர் மற்றும் ஜூஸ்கள் போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும். அதில் காய்கறிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
அந்தவகையில், அதிக நீர்ச்சத்து கொண்ட சுரைக்காயில் சுமார் 96 சதவீதம் நீர்ச்சத்து நிரம்பியுள்ளது. இதனால், நம் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும், போதுமான நீர்ச்சத்து வழங்கி புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் இது உதவிகரமாக இருக்கிறது. இந்த காய்கறி உடல் வறட்சியை நீக்குவது மட்டுமின்றி, கண் பார்வையையும் கூர்மையாக்கும்.
இதேபோல் வெள்ளரிக்காயும் அதிக நீர்சத்து கொண்டது. வெள்ளரியை வெயில் நாட்களில் தினசரி சாப்பிடுவது உடலை டிஹைட்ரேட் ஆகாமல் தடுக்கிறது. மேலும் பளபளப்பான சருமத்தை பராமரிக்க, அசிடிட்டி ஏற்படாமல் தடுக்க வெள்ளரி உதவுகிறது. கண்களின் மேல் வெள்ளரிக்காய் துண்டுகளை சிறிது நேரம் வைத்து எடுத்தால், கண்களுக்கு குளிர்ச்சி கிடைப்பதோடு, கருவளையம் ஏற்படுவதையும் கட்டுப்படுத்துகிறது.
தக்காளியில் 93% தண்ணீர் மற்றும் லைகோபைன் என்னும் உடலை சுத்தம் செய்யும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால், இதனை வெயில் காலத்தில் அதிகம் சாப்பிடலாம். முகம் பொலிவோடு இருப்பதோடு, வறட்சியின்றியும் இருக்கும். குறிப்பாக இதனை பச்சையாக சாப்பிட்டால், அடிக்கடி பசி ஏற்படாமலும் இருக்கும்.
வெள்ளைப் பூசணியில் அதிக அளவில் நீர்ச்சத்து நிறைந்துள்ளது. எனவே கோடைகாலத்தில் அதிக அளவில், இந்த காய்கறியை சேர்த்து வந்தால், உடலை வறட்சியின்றி வைத்துக் கொள்ளலாம்.
குடைமிளகாயில் 90 சதவீதம் தண்ணீர் நிறைந்துள்ளதால், அதனை கோடைகாலத்தில் அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. மேலும் இதில் வைட்டமின் சி, ஏ, கே மற்றும் இதர சத்துக்களான லூடின், பொட்டாசியம் போன்றவையும் அதிகம் உள்ளது.
நீர்ச்சத்து அதிகமுள்ள கொத்தமல்லி கீரையை சாப்பிட்டால், இரத்த அழுத்தம் குறைவதோடு, கோடைக்காலத்தில் உடலை வறட்சியின்றி வைப்பதோடு, குளிர்ச்சியாகவும் வைத்துக் கொள்ளும் தன்மை உடையது.
No comments:
Post a Comment