தமிழ்நாடு அரசு சமீபத்தில் கொண்டுவந்த 12 மணி நேர வேலை, 4 நாட்கள் விடுமுறை என்ற புதிய தொழிலாளர் சட்ட மசோதாவை கொண்டுவந்தது.
இந்த மசோதாவுக்கு பல தரப்பிலும் எதிர்ப்புகளும் கண்டனங்களும் எழுந்ததை அடுத்து மசோதாவை நிறுத்தி வைப்பதாக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் 12ம் தேதி தொழிற்சாலைகள் தொடர்பான சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா 12 மணி நேர வேலையை அனுமதிக்கும் வகையில் இருந்த நிலையில் இது தொழிலாளர்கள் நலனைப் பாதிக்கும் என்பதால் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த மசோதாவுக்கு திமுக, அதிமுக, மற்றும் பாஜக தரப்பினர் மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்நிலையில் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது.
இந்த மசோதா நிறைவேற்றம் மக்களிடையே பெரும் அதிருப்தியை உண்டாக்கியது. 8 மணி நேர வேலை என்ற உரிமையைப் பெரும் போராட்டத்துக்குப் பிறகே உலக அளவில் தொழிலாளர்கள் பெற்றுள்ளனர். ஆனாலும் இன்னமும் சில தொழில்களில் தொழிலாளர்கள் 8 மணி நேரத்தையும் தாண்டி வேலை செய்கின்றனர். நகரங்களில் பயணத்துக்கே பல மணி நேரங்களை செலவிடும் நிலையும் இருக்கிறது. ஏற்கெனவே பணிச் சுமை, பணி நெருக்கடி போன்றவற்றால் உடல், மன ஆரோக்கியத்தை இழந்துகொண்டிருக்கிறார்கள் தொழிலாளர்கள். இந்நிலையில் 12 மணி நேர வேலை என்பது மேலும் அவர்களை அடிமைகளாக்கும் நடவடிக்கை என்று கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
இதையடுத்து திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து மசோதாவைத் திரும்பப் பெறுமாறு வலியுறுத்தினர். மேலும் இந்த மசோதா தொடர்பாக தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் அரசு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்ததையில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, செயலர்கள் முகமது நசிமுதீன் (தொழிலாளர் நலன்), ச.கிருஷ்ணன் (தொழில் துறை), தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் ஆகியோர் பங்கேற்றனர்.

தொழிற்சங்கங்கள் சார்பில், சண்முகம், நடராஜன் (தொமுச), கமலக்கண்ணன், தாடி மா.ராசு (அண்ணா தொழிற்சங்கம்), சவுந்திரராஜன் (சிஐடியு) மற்றும் தொழிலாளர் விடுதலை முன்னணி, ஐஎன்டியுசி, ஏஐடியுசி, பாட்டாளி தொழிலாளர் பேரவை, ஆம் ஆத்மி மக்கள் தேசியக் கட்சி, ஹிந்த் மஸ்தூர் சபா, தமிழ்நாடு வீட்டுவேலை சங்கம் உள்ளிட்ட 20 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அனைவருமே இந்த மசோதாவைத் திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்தினர். இதையடுத்து தமிழ்நாடு அரசு 12 மணி நேர வேலை சட்ட மசோதாவை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் அரசு எப்போது தொழிலாளர்கள் நலனில் அக்கறையுடன் இருக்கும். இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், வேலை சூழலை மேம்படுத்தவும்தான் அரசு முயற்சித்துவருகிறது என்று தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment