Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, April 30, 2023

"களை எடுக்க ஆள் இல்லை, கலெக்டர் ஆபிஸ்ல உள்ளவங்களை அனுப்புங்க" ஆட்சியருக்கு அதிர்ச்சி கொடுத்த விவசாயி!


கிராமங்களில் 100 நாள் வேலைத்திட்டம் நடைபெறுவதால் விவசாயம் செய்யும் பருவத்தில் வேலை ஆட்கள் இல்லாமல் தவிப்பதால், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள உபரி ஊழியர்களை விவசாய வேலைக்கு அனுப்பி வைக்கும் படி மாவட்ட ஆட்சியருக்கு விவசாயி அனுப்பிய மனு அதிகாரிகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

தென்காசி: விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஏப்.28) அன்று தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளைக் கூறினர். அப்போது அந்த குறைதீர் கூட்டத்தில் நெல்கட்டும்செவல் ஊராட்சிக்கு உட்பட்ட பாறைப்பட்டியைச் சேர்ந்த விவசாயி மகேஸ்வரன் என்பவரும் கலந்து கொண்டார்.

அப்போது அவர் ஆட்சியர் அலுவலக அதிகாரிகளிடம் மனு ஒன்றை அளித்தார். அவரது மனுவைப் படித்துப் பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். விவசாயி மகேஸ்வரன் அந்த மனுவில், "நான் சிவகிரி தாலுகா நெல்கட்டும்செவல் கிராமத்தில் 4 ஏக்கர் பரப்பில் விவசாயம் செய்து வருகிறேன். எங்கள் பகுதியில் பிப்ரவரி - ஜூன் மாதங்களில் கோடைக்கால பருவத்திலும், செப்டம்பர் - ஜனவரியில் மழைக்காலத்திலும் பயிர் செய்து வருகிறோம்.

இருபருவத்திலும் பயிரின் வயதுக்கு ஏற்ப முதல் 50 நாட்கள் வரை களை எடுப்பது உள்ளிட்ட பராமரிப்பு பணிக்கும் கடைசி 30 நாட்கள் வரை அறுவடைக்கும் கூலி ஆட்கள் அதிக அளவில் தேவை. ஆனால் ஒவ்வொரு வருடமும் பயிர் பராமரிப்பு நேரத்திலும் அறுவடை நேரத்திலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் (MGNREGS) எனும் 100 நாட்கள் வேலைக்குக் கிராம மக்கள் அனைவரும் சென்று வருகின்றனர்.
கலெக்டர் ஆபிசில் உள்ளவர்களை களை எடுக்க அனுப்பும் படி மாவட்ட ஆட்சியருக்கு விவசாயி அளித்த மனு

இதனால் பயிரின் முக்கிய பிரச்சனையான களையெடுப்பிற்கு ஆட்கள் கிடைக்காமல் சில வருடங்களாக நாங்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளோம். அப்படியே ஆட்கள் கிடைத்தாலும் 7 மணி நேர வேலை என்பது 100 நாள் வேலையின் காரணமாக 4 மணி நேரமாகச் சுருங்கி விட்டது. இதனால் பயிர் பராமரிப்பு செலவு மேலும் அதிகமாகி விட்டதால் விவசாயிகள் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளோம்.

நான் சுமார் 3 ஏக்கர் பரப்பில் தற்போது பருத்தி பயிர் செய்துள்ளேன். எங்கள் பகுதியில் தற்போது MGNREGS திட்ட வேலை நடைபெறுவதால் களை எடுக்க ஆட்கள் கிடைக்கவில்லை. எனவே தங்கள் அலுவலகத்தில் உபரி ஊழியர்கள் எவரேனும் இருப்பின் அவர்களை எனது நிலத்தில் களை எடுக்க DEPUTATION ல் அனுப்பி வைத்து உதவ தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

அவ்வாறு அவர்களை அனுப்பி வைக்கும் பட்சத்தில் அவர்களுக்குக் கூலி, பஞ்சப்படி(D.A), பயணப்படி (T.A), மதிய உணவு என அனைத்தும் கொடுக்க தயாராக உள்ளேன் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். இத்துடன் எனது நிலத்தின் புகைப்பட நகலையும் இணைத்துள்ளேன்" என மனுவில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

விவசாய வேலைகளுக்குக் கூலி ஆட்கள் பற்றாக்குறை மிகக் கடுமையாக ஏற்பட்டுள்ள நிலையில், மகேஸ்வரனின் இந்த வித்தியாசமான மனு ஆட்சியர் அலுவலக வட்டாரத்திலும், விவசாயிகள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment