Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, April 19, 2023

விடைத்தாள் திருத்தும் பணியில் தனியார் பள்ளி ஆசிரியர் பங்கேற்றால்தான் தேர்வு முடிவு வெளியீடு

பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றால் மட்டுமே, அப்பள்ளிகளின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13 முதல் ஏப்.5-ம் தேதி வரை நடந்தது. இத்தேர்வை 16 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர். அவர்களது விடைத்தாள்களை திருத்தும் பணி கடந்த 10-ம் தேதி முதல் நடந்து வருகிறது.

இதற்கிடையே, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 6-ம் தேதி தொடங்கியது. இத்தேர்வை 9.2 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். நாளையுடன் (ஏப்.20) தேர்வு நிறைவடைகிறது. இதன்பிறகு, விடைத்தாள் திருத்தும் பணி ஏப்.24 முதல் மே 3-ம் தேதி வரை நடக்க உள்ளது.

இந்நிலையில், விடைத்தாள் திருத்தும் பணி குறித்து தேர்வுத் துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

விடைத்தாள் மதிப்பீட்டு பணியை செய்து முடிக்க தேவையான ஆசிரியர்களின் எண்ணிக்கையை சரியாக கணக்கிட்டு, பாடவாரியான ஆசிரியர்களை உடனே விடுவித்து, முகாம் பணிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

தமிழில் கற்பிக்கும் ஆசிரியர்கள் தமிழ்வழி விடைத்தாள்களையும், ஆங்கிலத்தில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் ஆங்கிலவழி விடைத்தாள்களையும் மதிப்பீடு செய்ய வேண்டும். அதற்கேற்ப ஆசிரியர்களை கணக்கிட்டு நியமிக்க வேண்டும். மதிப்பீட்டு பணிகளை மேற்கொள்ள தங்கள் எல்லைக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளில் இருந்தும் தகுதியான ஆசிரியர்களை பணியில் இருந்து விடுவித்து தேர்வாளர்களாக நியமிக்க வேண்டும். எந்த பள்ளியில் இருந்தும் ஆசிரியர்கள் விடுபடாதவாறு கண்காணிக்க வேண்டும்.

தனியார் பள்ளிகள் தங்கள் ஆசிரியர்களை முகாம் பணிக்கு முழு எண்ணிக்கையில் அனுப்பி வைத்தால் மட்டுமே அப்பள்ளிக்கான தேர்வு முடிவு வெளியிடப்படும். எனவே, இதற்கான அறிவுறுத்தல்களை பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் எடுத்துரைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment