Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, May 22, 2023

பணி நிரந்தரம் கோரி, பகுதி நேர ஆசிரியர்கள் உண்ணாவிரதம்!

பள்ளிக் கல்விதுறை வளாகத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்துள்ள 300க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

இவர்கள் அரசாணை எண் 177/2011 ஆம் ஆண்டின் படி பகுதிநேர ஆசிரியர்களாக முறையான நியமனத்தில் தமிழக மாணவர்களின் பன்முக திறன்களை மேம்படுத்தும் உடற்கல்வி, கணினி, தையல், இசை, ஓவியம், தோட்டக்கலை, கட்டிடக்கலை ஆகிய பாடப் பிரிவுகளில் ஆசிரியர்களாக கடந்த 12 ஆண்டுகளாக 10,000 ரூபாய் ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். அதன் காரணமாக தற்போது பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைக்கின்றனர்.


உண்ணாவிரதப் போராட்டத்தில் பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் துணை அமைப்பாளர் ஜெயப்பிரியா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், குறைந்த ஊதியம் காரணமாக வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பணி நியமனம் பெற்ற 15 ஆயிரம் ஆசிரியர்களில் 3 ஆயிரம் ஆசிரியர்கள் இந்த பணியை விட்டு சென்றுவிட்டனர். எங்களைப் போன்ற பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஆண்டில் 11 மாதங்கள் மட்டும்தான் ஊதியம். இந்த மே மாதம் எங்களுக்கு ஊதியம் கிடையாது. அதனால் அடுத்த மாத செலவுக்கு என்ன செய்யப் போகிறோம் என்பது தெரியாத நிலை தான் உள்ளது.

மேலும்,வறுமை மற்றும் விபத்தால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இதுவரை 5 பகுதி நேர ஆசிரியர்கள் உயிரிழந்துள்ளனர். 12 ஆண்டுகளாக வெறும் 10,000 ரூபாய் ஊதியத்தில் பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும். திமுகவின் தேர்தல் அறிக்கை எண் 181ல் கொடுத்த வாக்குறுதியான பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்கிற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

No comments:

Post a Comment