தற்போது அனைவரின் கைகளிலும் செல்போன் தவழ்கிறது. செல்போனின் கூகுள் பே, போன் பே போன்ற பணப் பரிவர்த்தனை செயலிகளும் வைத்திருக்கிறார்கள்.
டீ குடித்துவிட்டு ரூ.10 பணம் செலுத்த வேண்டும் என்றாலும் கூட கடைகளில் உள்ளQR code அட்டை மூலம் ஸ்கேன் செய்தே செலுத்துகின்றனர். குக்கிராமங்களில் கூட QR code அட்டை மூலம் பணம் செலுத்தும் வசதி வந்துவிட்டது.
என்றாலும் கூட தமிழகத்திலுள்ள ரேசன் கடைகளில் சில்லறையாக பணம் கொடுத்துவிட்டு சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வாங்க வேண்டிய சூழல் உள்ளது. ஆகவே, பணம் செலுத்தும் முறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ரேசன் கடையில் புதிய வசதி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட டெம்பிள் சிட்டியில் உள்ள M.VM.P ரேஷன் கடையில் QR code மூலம் பணம் செலுத்தும் நடைமுறையை கூட்டுறவு சங்க பதிவாளர் சண்முகசுந்தரம் அறிமுகம் செய்தார். இதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 602 ரேஷன் கடைகள், 53 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், 7 நகர கூட்டுறவு சங்கம், 10 மருந்தகங்கள் என கூட்டுறவு சங்கங்களில் பொதுமக்கள் QR code மூலமாக பணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்தை தொடங்கி வைத்த பிறகு செய்தியாளரை சந்தித்த கூட்டுறவு சங்க பதிவாளர் சண்முகசுந்தரம், "தமிழகத்தில் 22,000-ற்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்களில் தேர்தல் நடத்தும் பணி நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 6,500 கூட்டுறவு சங்கங்களில் ஏப்ரல் 30ஆம் தேதியுடன் பதவி காலம் நிறைவடைந்த பணியாளர்களின் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது" என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு சங்க இணை பதிவாளர் ஜெயஸ்ரீ, கூடுதல் பதிவாளர் முருகன் உள்ளிட்ட கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment