Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, June 10, 2023

பணி நிரந்தரத்திற்கு காத்திருக்கும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள்

இலவு காத்த கிளி :

பணி நிரந்தரத்திற்கு காத்திருக்கும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் :

பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் அறிக்கை:

தமிழில் இலவு காத்த கிளி என்ற கதை ஒன்று சொல்வார்கள்.

அதுபோல, அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் தற்காலிகமாக 12 ஆண்டுகளாக ரூபாய் 10ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணியாற்றுகிற கணினி, உடற்கல்வி, ஓவியம், இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன் பாட 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் தங்கள் பணி நிரந்தரம் செய்யப்படும் என்று கிளியை போல் காத்திருந்தும் பயன் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

பள்ளிக்கல்வித்துறையில் 2012-ம் ஆண்டு நியமித்த பகுதிநேர ஆசிரியர்களை மட்டும் பணி நிரந்தரம் செய்ய அரசு ஏன் தயங்குகிறது என்று தெரியவில்லை.

இதே காலகட்டத்தில் அரசு பள்ளிகளில் நியமித்த 5 ஆயிரம் துப்புரவாளர்கள் மற்றும் இரவு காவலர்கள் பின்னர் பணி நிரந்தரம் செய்யப்பட்டதை அரசு கவனத்தில் எடுத்து கொள்ளாமல் இருக்கலாமா?

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள், பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தற்காலிக பணியாளர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று திமுக தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டு இருந்தது.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என நம்பினர்.

அந்த நம்பிக்கை இன்னும் நிறைவேறவில்லை; அவர்களின் துயரங்களும் தீரவில்லை.

இதற்கு முன் கடந்த 2006-ஆம் ஆண்டில் கலைஞர் முதலமைச்சராக பதவியேற்றவுடன் மிகக்குறைந்த ஊதியத்தில் தற்காலிக ஆசிரியர்களாக பணியாற்றி வந்த 50,000 பேரை ஒரே ஆணையில் பணி நிரந்தரம் செய்தார்.

அப்போதும் அரசுக்கு நிதி நெருக்கடி இருந்தது.

ஆனாலும் இந்த நடவடிக்கையால் அரசின் நிதிநிலைமைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இப்போதும் தற்காலிக நிலையில் 10 ஆண்டுக்கும் மேலாக பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்கள், ஊழியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்வதால் அரசுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடாது.

இதை மனதில் கொண்டு பகுதிநேர ஆசிரியர்களை, பணி நிரந்தரம் செய்து முதலமைச்சர் ஆணையிட வேண்டும்.

பள்ளிக்கல்வித்துறையில் இதற்கு முன்பு தற்காலிகமாக பணிபுரிந்த 5 ஆயிரம் பகுதிநேர தொழிற்கல்வி ஆசிரியர்கள், 2 ஆயிரம் கணினி ஆசிரியர்கள், 5 ஆயிரம் இசை, தையல், ஓவியம், உடற்கல்வி ஆசிரியர்கள் போன்றோர் பணி நிரந்தரம் செய்யப்பட்டதை அரசு கவனத்தில் எடுத்து கொள்ளாமல் இருக்கலாமா?

ஒடிசா மாநிலத்தில் 57ஆயிரம் தற்காலிக பணியாளர்கள், ராஜஸ்தான் மாநிலத்தில் 1.10 லட்சம் தற்காலிக பணியாளர்கள் முறைப்படுத்தப்பட்டு நிரந்தரம் செய்யப்பட்டுள்ளார்கள்.

தமிழ்நாட்டிலும் இதுபோல் முதல்வர் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

*************************
S.செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்,
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு,
செல் : 9487257203

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News