தரமான கல்வி, தமிழக அரசின் சலுகைகளால், கேரளாவின் இடுக்கி மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தேனிக்கு கல்விக்காக இடம்பெறும் மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
தேனி மாவட்டத்துக்கு அருகே கேரளாவின் இடுக்கி மாவட்டம் அமைந்துள்ளது. மொழிவாரி மாநிலம் பிரிக்கப்படுவதுக்கு முன்பு இப்பகுதி சென்னை மாகாணமாக ஒருங்கிணைந்து இருந்தது. தமிழர்கள் இங்கு அதிகளவில் வசித்து வந்தனர்.மாநிலம் பிரிக்கப்பட்ட போது மூணாறு உள்ளிட்ட பகுதிகள் கேரளாவுடன் இணைந்தது. இருப்பினும் பல தலைமுறையாக தமிழர்கள் தோட்டத் தொழிலாளர்களாக தொடர்ந்து அங்கு அதிகளவில் வசித்து வருகின்றனர்.
இதனால் திருவிழா, பண்டிகை, குடும்ப நிகழ்வுகளுக்கு அடிக்கடி தமிழகம் வந்து செல்வதுடன், தமிழை முதன்மொழியாகவும் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் குழந்தைகளுக்கும் தமிழ்வழி கல்வியையே போதித்து வருகின்றனர். இருப்பினும் மூணாறு உள்ளிட்ட பகுதிகளைப் பொறுத்தளவில் தமிழ்வழி கல்விநிலையங்கள் குறைவாக இருப்பதுடன், வெகுதூரமும் செல்ல வேண்டியதுள்ளது. எனவே மூணாறு, சூரியநல்லி, நெடுங்கண்டம், குமுளி, வண்டிப்பெரியாறு உள்ளிட்ட இடுக்கி மாவட்டத்தின் பல பகுதியைச் சேர்ந்தவர்கள் கல்விக்காக தேனி மாவட்டத்துக்கு வரும்நிலை உள்ளது.
தேனி அரசு மாணவர் விடுதியில் மாணவர்களை கண்காணிக்கும் கேமரா பதிவுகள்
தமிழகத்தைப் பொறுத்தளவில் மாணவர்களுக்காக பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இலவசமாக மடிக்கணினி, மிதிவண்டி, சீருடை, பேருந்து அட்டை, பாடப்புத்தகம் போன்ற பல்வேறு சலுகைகளுடன் இலவச விடுதி வசதியும் உள்ளது. இது இடுக்கி மாவட்ட தமிழர்களுக்கு பொருளாதாரச் சுமையை குறைக்கும் வகையில் உள்ளது. எனவே கேரளாவில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான மாணவ, மாணவிகள் கல்விக்காக தேனி மாவட்டத்துக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.
இவர்களுக்காக தமிழக விடுதிகளில் ஒதுக்கீடும் உள்ளது. தேனி மாவட்டத்தைப் பொறுத்தளவில் 37 பள்ளி, கல்லூரி விடுதிகள் உள்ளன. இதில் ஆதிதிராவிடர் உள்ளிட்ட ஒதுக்கீடு போக கேரளா மாணவர்களுக்கு 100இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்த ஆண்டு 200ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. விடுதியில்இடம் கிடைக்காதவர்கள் உறவினர்களின் வீடுகளிலும் தங்கி படிக்கின்றனர்.
அரசு மாணவர் விடுதியில் நவீன முறையில் உணவு தயாரிக்கும் இயந்திரம்
இதுகுறித்து தேனி மாவட்ட விடுதிக்காப்பாளர்கள் கூறுகையில், "விடுதியில் தங்கும் இடம், உணவு முற்றிலும் இலவசம். முதல் மற்றும் மூன்றாம் வாரம் ஆட்டு இறைச்சியும், இரண்டு மற்றும் நான்காம் வாரம் கோழி இறைச்சியும், வாரம் 5 முட்டையும், சோப்பு, தேங்காய் எண்ணெய், முடிவெட்டிக் கொள்ள மாதம் ரூ.75 மாணவர்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. போர்வை மற்றும் பாயும் வழங்கப்படுகிறது. இது தமிழக மாணவர்களுக்கு மட்டுமல்லாது கேரளாவில் இருந்து கல்வி பயில வருபவர்களுக்கும் உதவிகரமாக உள்ளது" என்றனர்.
No comments:
Post a Comment