பணிநிரவலில் பலிகடாவாகும் அரசு உதவி பெறும் பள்ளி இடைநிலை ஆசிரியர்களால் பள்ளிகளில் கற்பித்தல் செயல்பாடுகள் பாதிக்கப்படுகிறது, என தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் சங்கர் கூறினார்.அவர் கூறியதாவது:இடைநிலை ஆசிரியர்களை பதவி உயர்வு பெறாமல் பணிநிரவல், மாற்றுப்பணிகளில் நியமிக்க வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.பணிநிரவலின் போது பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நிர்ணயம் செய்வர். இதில் உபரி இருந்தால் அந்த பள்ளியில் பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களில் யார் ஜூனியரோ அவரை தான் பணி நிரவல், மாற்றுப்பணிக்கு பயன்படுத்துவர். இடைநிலை ஆசிரியர்களை எங்கேயும் பணிநிரவல், மாற்றுப்பணிக்கோ நியமிக்க முடியாது. எல்லா பள்ளிகளிலும் அவர்கள் தான் சீனியராக இருப்பர்.அப்படி இருக்கையில் விருதுநகர் மாவட்டத்தில் முன்னுக்கு பின் முரணாக அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களை மாற்றுப்பணி, பணிநிரவல் செய்கின்றனர்.
தலைமை ஆசிரியர்கள் விருப்பு வெறுப்பை பயன்படுத்தி கடிதம் அனுப்பினால் அந்த ஆசிரியர்களை மாற்றுப்பணிக்கு அனுப்பி விடுகின்றனர். இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.மாணவர்களுக்கு கற்பித்தல் பணி செய்து வரும் சூழலில் அதை தொந்தரவு செய்து பணிநிரவல் செய்வது கல்வித்திறனை பாதிக்கும். சி.இ.ஓ., டி.இ.ஓ., இதற்கு செவிசாய்க்கவில்லை. காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறோம்.
2003 முதல் இடைநிலை ஆசிரியர்கள் பணிநியமனம் இல்லாததால் 7 ஆண்டுகளாக பதவி உயர்வு கொடுக்கப்படவில்லை. இது பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. தற்போது 'டெட்' தேர்ச்சி பெற்றால் பதவி உயர்வு என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அப்படியானால் 7 ஆண்டுகளாக மறுக்கப்பட்ட எங்கள் பதவி உயர்வின் நிலை என்ன. இது தொடர்பாக அரசின் பதில் என்ன. இப்பிரச்னையில் சென்னையில் ஜூலை 10ல் இயக்குனர் அலுவலகம் முன் முற்றுகையிட உள்ளோம். அரசு உயர்நீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்து எங்களுக்கு பட்டதாரி பதவி உயர்வு வழங்க வேண்டும், என்றார்.
No comments:
Post a Comment