Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, June 26, 2023

புதுச்சேரி முதல்வரின் வீட்டை முற்றுகையிட்ட ஆசிரியர்கள்


புதுச்சேரியில் இடமாற்றல் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில முதல்வர் ரங்கசாமி வீட்டை ஆசிரியர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி அரசின் கல்வித் துறையில் பணியாற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட புதுவையைச் சேர்ந்த ஆசிரியர்கள் காரைக்கால் அரசு தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் காரைக்காலில் சுமார் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிபவர்கள் தங்களை மீண்டும் சொந்த பிராந்தியமான புதுச்சேரிக்குப் பணியிட மாறுதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்தச் சூழலில் கல்வித்துறை, கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிய பணியிட மாறுதல் கொள்கையை வெளியிட்டது.

இதற்கு ஆசிரியர்களில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பணி மூப்பு அடிப்படையில்தான் ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். புதிய இடமாற்றல் கொள்கையில் முரண்பாடுகள் இருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கல்வித்துறை வளாகத்தில் நேற்று முன்தினம் ஒன்று கூடி, பணியிட மாறுதல் விவகாரத்தில் சம்மேளனமும், கூட்டமைப்பும் இணைந்து, கூட்டாக போராட்டக் குழுவை உருவாக்கி போராடுவது என முடிவு எடுக்கப்பட்டது.

இதனிடையே நேற்று (ஜூன் 25) கோரிமேட்டில் உள்ள அப்பா பைத்தியசாமி கோயில் வளாகத்தில் உள்ள முதல்வர் இல்லத் தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஒன்று திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து முதல்வர் அவர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, பணிமூப்பு அடிப்படையில்தான் இடமாற்றம் செய்ய வேண்டும் என்று முதல்வரிடம் நேரில் வலியுறுத்தினர். அதற்கு, கல்வித்துறை அமைச்சரைச் சந்தித்து பேசும்படி முதல்வர் கூறினார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அவர்கள் இன்று (ஜூன் 26) கல்வித் துறை அமைச்சரைச் சந்தித்துப் பேச உள்ளதாகத் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment