Join THAMIZHKADAL WhatsApp Groups
சென்னையில் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பத்துடன் நாளை முதல் டோக்கன் விநியோகிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், காவல் ஆணையர் சந்தீப் ரத்தோர் உள்ளிட்டோர் ஆலோசனை மேற்கொண்டனர். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், மகளிர் உரிமை தொகைக்கான டோக்கன் மற்றும் விண்ணப்பங்கள் நாளை முதல் வினியோகம் செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார்.
நியாய விலைக்கடை ஊழியர்கள் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று டோக்கன் மற்றும் விண்ணப்பங்களை வழங்கவுள்ளதாகவும், முதல் தவணையில் வழங்கப்படவில்லை என்றால், இரண்டாம் தவணையில் விண்ணப்பம் வழங்கப்படும் என்றும், எனவே பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் கூறினார்.
முதற்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் வரும் 24ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரையும்,இரண்டாம் கட்ட முகாம் ஆகஸ்ட் 5 முதல் 16ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் தெரிவித்தார்.
இதில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என்றும், முகாம் நடைபெறும் இடம், எந்த தேதியில் நடைபெறும் முகாமில் பங்கேற்க வேண்டும் உள்ளிட்ட தகவல்கள் டோக்கனில் தெரிவிக்கப்பட்டிருக்கும் என்றும் கூறினார்.
இதுதொடர்பான விரிவான தகவல்கள் நியாயவிலைக்கடைகளில் ஒட்டப்படும் எனவும், மண்டல வாரியாக அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைகளை தொடர்பு கொண்டு கூடுதல் தகவல்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment