Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, July 19, 2023

ராகு கேது பெயர்ச்சி பலன் 2023: 6 ராசிக்காரர்கள் வாழ்வில் அதிரடி மாற்றம்.. வீடு தேடி வரும் ஜாக்பாட்


ராகு கேது பெயர்ச்சி அக்டோபர் மாத இறுதியில் நிகழப்போகிறது. தற்போது மேஷ ராசியில் உள்ள ராகு மீனம் ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார்.

ஒன்றரை ஆண்டுகாலம் மீனம் ராசியில் பயணம் செய்வார் ராகு. இதே போல துலாம் ராசியில் இருந்து கேது பகவான் நகர்ந்து கன்னி ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த ராகு கேது பெயர்ச்சியினால் சிலருக்கு வீடு தேடி ஜாக்பாட் வரப்போகிறது.

ராகு கேது கிரகங்கள்: நிழல் கிரகங்களான ராகு கேது பொதுவாகவே ஒருவரின் ஜாதகத்தில் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம், ஆகிய வீடுகளில் இருந்தால் அந்த ஜாதகருக்கு வலுவான யோகம் உண்டு என்று நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. ஜனன ஜாதகத்தில் ராகு கேது 3, 6, 11 ஆகிய இடங்களில் நல்ல பலனை தரக்கூடியவை. ராகு கேதுவுக்கு 3, 7, 11, பார்வைகள் விசேசமானது.

வலிமையான ராகு கேது: நவக்கிரகங்களில் புதனை விட செவ்வாயும், செவ்வாயை விட சனியும், சனியை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும் சந்திரனை விட சூரியனும் சூரியனை விட ராகுவும் ராகுவை விட கேதுவும்,பலம் பெற்றவர்கள். ராகு ஆசைக்கு காரகர், கேது மோட்சத்திற்கு காரகர் இவர்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கின்றனரோ யாருடைய சாரத்தில் இருக்கிறார்களோ அதனுடைய பலனை செய்வார்கள். ஒவ்வொரு ராசியிலும் ஒன்றறை ஆண்டுகள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள். ராகு கேதுவிற்கு ஒரு நாளில் ஒன்றரை மணி நேரம் என மூன்று மணிநேரத்தை ராகு கேது ஆள்கின்றன.

மேஷம்: ராகு ஜென்ம ராசியிலும்,7 வீட்டில் கேதுவும் பயணம் செய்கின்றனர். ஐப்பசி மாதத்திற்குப் பிறகு 12 வீட்டிற்கு ராகுவும் 6ம் வீட்டிற்கு கேதுவும் இடம் மாறுகின்றனர். குருவுடன் பயணம் செய்த ராகு தனியாக பிரிந்து குருவின் வீடான மீன ராசிக்கு செல்கிறார். "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம்" என்பதன் அடிப்படையில் இப்பொழுது 12ஆம் வீடான மறைவு ஸ்தானத்திற்கு ராகுவும் ஆறாம் வீடான ருண ரோக ஸ்தானத்திற்கு கேது வருவது நல்லது தான். சுபகாரியங்கள் திருமணம் வீடு கிரகப்பிரவேசம் உள்ளிட்ட சுபகாரியங்கள் நடக்கும். சிலர் வீடு மாற்றம் ஊர் மாற்றம் செய்ய நேரிடும். கேதுவின் சஞ்சாரத்தினால் புது வேலை வாய்ப்பு மற்றும் தொழிலை பெருக்கி லாபம் சம்பாதிப்பீர்கள். சுகபோகங்களை பெருக்கி கொள்ளலாம். புதிய கடன்களை வாங்கினாலும் அது சுப விரயமாக மாறும். ராகு கேது பெயர்ச்சி முன்னேற்றத்தையும் மாற்றத்தையும் தரும். மலை போல வரும் துன்பம் எல்லாம் பனி போல விலகி ஓடும். குடும்பத்தில் அமைதி ஆனந்தம் ஏற்படும். மகிழ்ச்சிகரமான ராகு கேது பெயர்ச்சியாக அமைந்துள்ளது.

ரிஷபம்: உங்க ராசிக்கு சாதகமான இடத்திற்கு ராகு கேது வரப்போகிறார்கள். 11ல் வரும் ராகு எதிர்பாராத யோகத்தையும் திடீர் பண வரவையும் தரப்போகிறார்கள். உங்களுக்கு இருந்த பிரச்சனைகள் இனி தானாகவே மறைந்து விடும். மோட்ச காரகன் கேது பூர்வ பூண்ணிய ஸ்தமான 5ஆம் வீட்டிற்கு வருவது யோகம் தான். வாங்கிய கடனுக்கு அசலுக்கு அதிகமாக கடனை செலுத்தியவர்களுக்கு கடன் சுமை குறையும். கடன் பிரச்சினைகள் கழுத்தை பிடிக்க ஊரை விட்டு ஓடி விடுவோமா என்று நினைத்தவர்கள் சொந்த ஊரிலே தலை நிமிர்ந்து வாழலாம். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை உருவாகும். தடைப்பட்ட திருமணங்கள், புத்திரபாக்கியம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். செய்யும் தொழிலில் பார்க்கும் வேலையில் திருப்திகரமான போக்கும் நிம்மதியும் உண்டாகும். சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும். 5ல் கேது இருப்பதால் குலதெய்வ பிரார்த்தனை செய்யுங்கள்.

மிதுனம்: பத்தாம் வீட்டில் ராகுவும் நான்காம் வீட்டில் கேதுவும் பயணம் செய்யப்போகின்றன. கேந்திரத்தில் பாவ கிரகங்கள் வரும் பொழுது வலிமையான பலனை கொடுக்கும் சூரியனை கண்டு பனி விலகுவதை போல ஒவ்வொரு முயற்சியும் காரியமும் வெற்றியைக் கொடுக்கும். 10 ஆம் இடம் தொழில் ஸ்தானம், கீர்த்தி, செல்வாக்கு அந்தஸ்து ஸ்தானத்தில் ராகு வருவதால் தொழிலாளி முதலாளி ஆகலாம். நினைத்த மாதிரி வேலை வாய்ப்பு அமையலாம் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். வேலையை இழந்து வருமானம் இல்லாமல் தவித்தவர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி வெற்றியை தரப்போகிறது. அஷ்டமத்து சனியால் கணவன் மனைவி உறவு கசந்து சங்கடங்களை சந்தித்த உங்களுக்கு ராகு கேது பெயர்ச்சி யோகத்தைக் கொடுக்கப்போகிறது.

கடகம்: உங்கள் ராகு 9ஆம் வீட்டிற்கும் கேது மூன்றாம் வீட்டிற்கும் வருவது யோகமான அமைப்பாகும். தசைகள் யோகமாக இருந்தால் தலைக்கு வந்தது தலை பாகையோடு போய்விட்டது என்று ஆறுதல் படுத்திக்கொள்ளலாம். குடும்பத்தில் சுபகாரியம் புதுமுயற்சி,திருமணம்,புத்திர பாக்கியம் போன்ற சுபமங்கள நிகழ்ச்சிகள் நடக்கும். குருவின் பார்வை சாதகமான இடத்தில் விழுகிறது. குடும்ப உறவு சிறப்படையும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வேலை வாய்ப்புகள், தேடி வரும். வருமானம் திருப்தி தரும் வகையில் அமையும். குடும்பத்தில் பிரிவு மனக்கசப்புகளை சந்தித்தவர்களுக்கு ராகு கேது விடிவையும் விமோசனத்தையும் தரப்போகிறது.

சிம்மம்: உங்கள் ராசிக்கு 8ஆம் வீட்டிற்கு ராகு வருகிறார். கேது இரண்டாம் வீட்டிற்கும் இடப்பெயர்ச்சி அடைகின்றனர். ஜாதகத்தில் 8ஆம் இடம் என்பது கெட்ட ஸ்தானமாகும். இந்த ராகு பெயர்ச்சி யோகத்தையும் அதிர்ஷ்டத்தையும் பெயர், புகழையும் தரப்போகிறது. ராகு சூது கிரகம். எதிர்ப்பாராத பணம் பொன் பொருள் சேர்க்கை வீடு வாசல் போன்ற வசதிகளை தருவார். திருமணம் சுபகாரியம் நடைபெறும். கோர்ட் வம்பு வழக்கு சாதகமாகும். சிலருக்கு இடமாற்றம்,ஊர்மாற்றம் நேரலாம். இது வரை வெளியூரில் இருந்தால் உள்ளுரில் செட்டில் ஆகலாம். குடும்ப ஸ்தானத்தில் கேது வருவதால் சொல்லும் செயலும் வெற்றி பெறும். உங்க முயற்சி தன்னம்பிக்கை மூலம் தான் வாழ்க்கையில் முன்னேற்றம் வரும். ராகு கேது பெயர்ச்சி மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தரப்போகிறது.

கன்னி: உங்களுடைய ராசியில் கேதுவும் 7 ஆம் வீட்டிற்கு ராகுவும் பெயர்ச்சியாகப் போகின்றனர். களத்திரம் கூட்டு தொழில் ஸ்தானம் நண்பர்கள் ஸ்தானத்தில் ராகு வருவதால் தொழில் வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் கூடும். கடன் வாங்கி நொந்து போனவர்களுக்கு புதிய நட்பு கூட்டு தொழில் உதவி கிடைக்கும். கணவன் மனைவி பிரச்சினை நீங்கி ஓன்று சேரலாம். கோர்ட்டு விவாகரத்து என்று அலைந்தவர்களுக்கு தீர்ப்பு சாதகமாக அமைந்து மறுமணம் நடக்கலாம். உங்கள் ராசியில் கேது வருவதால் கௌரவம் புகழ் கீர்த்தி அந்தஸ்து தரும். கேதுவுக்கு குரு பார்வை கிடைப்பதால் கஷ்ட நஷ்டங்களிலிருந்து விடிவு விமோசனம் ஆகியவற்றை அடையலாம். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் உத்யோகத்தில் முன்னேற்றம் வரும். வருமானம் திருப்தி தரும். பிள்ளைகள் படிப்புக்காக கடன் வாங்குவீர்கள். ராகு கேது பெயர்ச்சியால் மாற்றம் முன்னேற்றம் வரும்.

துலாம்: உங்களுடைய ராசிக்கு எதிரி போட்டி பொறாமை கடன் வைத்திய செலவு ஆகிய ஸ்தானத்தில் ராகு வருவதால் கடன் அடைப்படும் தீராத நோய் தீரும். ஏழரை சனியாலும் ஜென்ம கேதுவாலும் பாதிக்கப்பட்ட பிரச்சினை முடிவுக்கு வரும். போட்டி பொறாமைகள் நீங்கும். தொழில் முயற்சிகள் கை கூடும். படித்து முடித்து வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும். பதவி உயர்வு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும் வீடு மனை வாங்கும் யோகம் வரும். தடைபட்ட திருமணம் நடைபெறும். நீண்ட நாள் கனவான குழந்தை பாக்கியம் கிடைக்கும். மோட்ச ஸ்தானத்தில் மோட்சகாரகன் கேது வருவதால் புது முயற்சிகள் கை கூடும். விரைய செலவுகள் குறைந்து சுப செலவுகள் உயரும். சுப தேவைகளுக்கு கடன் வாங்குவீர்கள். உங்களின் நீண்ட நாள் கடன்களும் அடையும். இந்த ராகு கேது பெயர்ச்சி திடீர் யோகத்தை கொடுத்து செல்வம், செல்வாக்கை அதிகரிக்கப்போகிறது.

விருச்சிகம்: ராகு உங்கள் ராசிக்கு 5ஆம் இடத்திற்கும் கேது லாப ஸ்தானமான 11ஆம் வீட்டிற்கும் வருகிறார்கள். 18 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த ஸ்தானங்களில் ராகு கேது சஞ்சரிப்பார்கள். விரைய செலவுகளால் அல்லல் பட்டு வந்தீர்கள். போதுமான வருமானம் வந்தாலும் நிம்மதி குறைந்த வாழ்க்கை வாழ்ந்த உங்களுக்கு ராகு கேது பெயர்ச்சி நிம்மதியை தரும். கேது 11ஆம் வீட்டிற்கு வருவதால் தொட்டது துலங்கும். தேவையற்ற செலவுகள் குறையும் செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கடன் சுமை குறையும் தொழில் விசயங்கள் ஏற்றத்தை தரும். இது வரை திருமணம் ஆகி புத்திரபாக்கியம் தடைப்பட்ட தம்பதியினருக்கு புத்திரபாக்கியமும் குடும்பத்தில் அமைதியும் நிலவும். கருத்து வேற்றுமையால் பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவார்கள். 11ஆம் வீட்டில் கேது வருவதால் சிலருக்கு மறுமணம் நடைபெறும். ராகு கேது பெயர்ச்சி சிலருக்கு ஆறுதலையும் முன்னேற்றத்தையும் வீடு மனை வாங்கும் யோகத்தை கொடுக்கப்போகிறது.

தனுசு: தனுசு ராசிக்காரர்களே ராகு கேந்திர ஸ்தானமான 4ஆம் இடத்திற்கும், கேது 10இடத்திற்கும் மாறுகிறார்கள். கேந்திரத்தில் வரும் ராகு கேது இது வரை தடைப்பட்ட காரியங்களை வெற்றிகரமாக முடிப்பதற்கு உதவுவார்கள். தாயார் வழியில் சில தேவைற்ற செலவுகள் வரும். பூமி வீடு வாகனம் வாங்கும் யோகத்தை கொடுப்பார். சிலருக்கு இடமாற்றம் தொழில் மாற்றம் வரலாம். பழைய கடன்கள் அடைப்படும். பிள்ளைகளின் திருமணம் படிப்புக்கு செலவு செய்வீர்கள். கடனுக்கு வட்டி கட்டிய நேரம் மாறி வரவுகள் சேமிப்பாக உயரும். பத்தாம் இடம் என்பது தொழில், மாமியார் வீடு, உத்தியோகம் வேலை வாய்ப்பு ஆகிய ஸ்தானங்களுக்கு கேது வருகிறார். தனம் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். திடீர் அதிர்ஷ்டம் யோகத்தை கொடுக்கும். வசதி வாய்ப்புகள் கூடும் எதிர்பாராத திருப்பம் ஏற்படும். தொழிலில் இடமாற்றம் உத்தியோக உயர்வு கிடைக்கும்.

மகரம்: பொதுவாகவே ராகு பதினொன்று,முன்று,ஆறாம் இடத்திற்கு சேரின் பாகு தேன் பழமும் பாலும் வற்றாத தனமும் உண்டாகும். மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்திற்கு ராகு வரப்போவதால் செய்யும் தொழிலிலோ பார்க்கிற வேலையிலோ திருப்தி இல்லாத நிலைமாறி தைரியத்துடன் புது தெம்புடன் செழிப்பான வாழ்க்கை அமையும். புது முயற்சிகள் யாவும் வெற்றி பெறும்.தேவைகள் பூர்த்தியாகும் உங்களுடைய நீண்ட கால கனவுகள் லட்சியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் நீண்ட நாள் இருந்த பிரச்சனைகள் தீரும். பாக்ய ஸ்தானத்திற்கு மோட்சத்தை கொடுக்க கூடிய கேது வருவதால் இதுவரை தடைபட்டு நடக்காத காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். படித்த படிப்புக்கு ஏற்ற வேலை அமையாதவர்களுக்கு நல்ல வேலையும் கை நிறைய சம்பாத்தியம் கிடைக்கும். கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி யாரை எல்லாம் தேடி தேடி உதவி கேட்டீர்களோ அவர்கள் எல்லாம் தானாக நாடி வந்து உதவி செய்வார்கள்.

கும்பம்: சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்பம் ராசிக்காரர்களே ராகு கேது பெயர்ச்சி மிகப்பெரிய மாற்றத்தை தரப்போகின்றன. ராகு மூன்றாம் வீட்டில் இருந்து 2ஆம் வீட்டிற்கு வரப்போகிறார். 2ம் இடம் என்பது செல்வம், குடும்பம்,பணம் கையிருப்பு, அசையும் சொத்துக்கள், கண்கள்,வாக்கு, நாணயம் இவைகளை குறிக்கும் பாவமாகும். உங்களுக்கு தேவைகேற்ப தனவரவு, வரும். நல்ல வேலை கிடைக்கும். வெளிநாட்டு யோகமும் கைகூடி வரும். தடைபட்ட சுப காரியங்கள் தடைகள் நீங்கி நடைபெறும். எட்டாம் வீட்டில் அமரும் கேதுவினால் தொட்டது துலங்கும். போட்டி பொறாமை எதிரிகள் தொல்லைகள் நீங்கும். வருமானம் அபரிமிதமாக வரும்.

மீனம்: ராகு உங்க ராசிக்கும் கேது ஏழாம் வீட்டிற்கும் வரப்போகிறார்கள். 18 வருஷம் முடிவே இல்லாத பிரச்சனைகளை ஒன்றறை மணிநேரத்தில் தவிடு பொடியாக்கி செல்வாக்கை தக்க வைத்தார். உங்களுடைய ஜென்ம ராசியில் வரப்போகும் ராகுவிற்கு ஏழாம் வீட்டில் உள்ள கேதுவின் பார்வையும் ராசிக்கு கிடைக்கிறது. நீண்ட நாள் பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும். சகோதர சகோதரிகள் வகையில் அனுகூலம் ஆதாயத்தை தரும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். நண்பர்கள் உதவியால் பொருளாதார நிலை உயரும் இதுநாள் வரை தடைப்பட்டிருந்த திருமணம் இனி தடை நீங்கி நடக்கும். உயர்கல்வியும் படிக்கும் வாய்ப்பு வரும். களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டில் கேது அமர்வதால் தவிர்க்க முடியாத செலவும் அதனால் கடன் வாங்கும் கட்டாயமும் வரலாம் கவனம் தேவை. ராகு காலத்தில் துர்கை அம்மனை வழிபட பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெறும்.

No comments:

Post a Comment