Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, September 20, 2023

சுக்கிரன் பெயர்ச்சி பலன் 2023: அக்டோபர் முதல் அடியோடு மாறும் வாழ்க்கை.. திடீர் திருப்புமுனை யாருக்கு

கடக ராசியில் வக்ர நிலையில் பயணம் செய்த சுக்கிரன் வக்ர காலம் முடிந்து நேர் கதியில் மீண்டும் சிம்ம ராசிக்கு செல்லப்போகிறார்.

அக்டோபர் 1ஆம் தேதி முதல் சிம்ம ராசியில் பயணம் செய்யப்போகும் சுக்கிரனால் சில ராசிக்காரர்களுக்கு திடீர் லக் வரும். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

சுக்கிரன் களத்திரகாரகன் இல்லற வாழ்வுக்குறியவர். சுக்கிரன் என்றால் இன்பம். மனித வாழ்க்கையில் அன்பு, பாசம், காதல் ஆகிய மூன்று இன்பங்களை அளிக்கக் கூடியவர். சுக்கிரன் சுக போகங்களின் அதிபதி. சுக்கிரன் சிற்றின்பம், திருமணம் முதலான சுகத்தை ஆணுக்கு அளிப்பவர்.

அதே போல் பெண்களுக்கு நளினத் தன்மையையும் அழகான தோற்றம், கவர்ச்சி, வீரியசக்தி, அறிவாற்றல், மனத்துக்கிசைந்த கணவனை அடையும் தகுதியையும், சுக போகங்களில் திளைத்து மகிழும் ஆற்றலையும் வழங்குவார். தற்போது நெருப்பு ராசியான சிம்மத்தில் சூரியனுடன் சுக்கிரனும் இணைந்து சஞ்சரிப்பதால் யாருடைய வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படப்போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்: சுக ஸ்தானத்தில் உள்ள சுக்கிரன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்யப்போவதால் பணவரவு அதிகரிக்கும். மனதில் மகிழ்ச்சி கொப்பளிக்கும். உங்களுக்கு கற்பனை வளமும் அழகுணர்ச்சியும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவர் உங்கள் மீது காதல் மழை பொழியும் நேரமிது. வீட்டில் மனைவி, குழந்தைகள் மீது அன்பும் பாசமும் அதிகரிக்கும். காதலிப்பவர்களுக்கு இது ஏற்ற கால கட்டமாகும்.

ரிஷபம்: உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் சுக ஸ்தானத்தில் சுக்கிரன் பயணம் செய்யப்போகிறார். திருமண வாழ்க்கையில் ஊடல் வரலாம் அதே நேரத்தில் ஊடலுக்குப் பிறகு சந்தோஷ சம்பவங்கள் அரங்கேறும். பெண்கள் தங்க நகை வாங்கலாம். வீட்டுக்குத் தேவையான அலங்கார பொருட்களை வாங்குவீர்கள். சிலர் வீடுகளை பராமரிப்பு செய்வீர்கள். சுகமான நாட்களாக அமையப்போகிறது.

மிதுனம்: உங்கள் ராசிக்கு 3வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்யப்போகிறார். உங்களின் பேச்சுத்திறமையும், அழகியலும் அதிகரிக்கும். உங்கள் நட்பு வட்டம் அதிகரிக்கும். உங்களின் உடல் நலம் மேம்படும். மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். பொருளாதார வளம் மேம்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலையில் உங்களுக்கு சாதகமான சூழல் நிலவும். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறையும் கவனமும் தேவை.

கடகம்: உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் குடும்ப தன ஸ்தானத்தில் பயணம் செய்யப்போகும் சுக்கிரனால் பண வருமானம் அதிகாிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் மன மகிழ்ச்சியும் நிம்மதியும் தேடி வரும். கணவன் மனைவிக்கு இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். திருமண வயதில் இருப்பவா்களுக்கு திருமண பாக்கியம் கை கூடி வரும்.

சிம்மம்: சுக்கிரன் உங்கள் ராசிக்குள் நுழையப்போகிறார். உங்களுக்கு ராஜயோகம் வரப்போகிறது. ஏழாம் பார்வையாக உங்கள் களத்திர ஸ்தானத்தை செவ்வாய் பார்ப்பதால் திருமணம் கைகூடி வரும் காலமாகும். காதல் வாழ்க்கையும் உற்சாகத்தை தரும். திடீர் என காதல் மலரும். வேலையில் புரமோசன் கிடைக்கும். சம்பளம் அதிகரிக்கும் வருமானம் உயரும். பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். தங்க நகைகள் வாங்கலாம். கணவன் மனைவி இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். சிலருக்கு புதிய காதல் மலரும்.

கன்னி: உங்கள் ராசிக்கு 12வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்யப்போவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளுக்காக ஏற்பாடுகள் நடைபெறும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். வாழ்க்கை துணையுடன் அந்நியோன்னியம் அதிகரிக்கும். காதல் வாழ்க்கையும் கலகலப்பை ஏற்படுத்தும். விரைய ஸ்தானத்தில் பயணிக்கும் சுக்கிரனால் உங்களுக்கு பணமழை பொழியப்போகிறது. கூடவே செலவுகளும் எட்டிப்பார்க்கும். மருத்துவ செலவுகள், வண்டி வாகனங்களினால் பராமரிப்பு செலவுகள் வரும் கவனம் தேவை.

துலாம்: உங்கள் ராசிக்கு 11வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்வதால் சமூகத்தில் மதிப்பு மரியாதை உயரும். மனைவியுடன் வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். திருமண வாழ்க்கையில் உற்சாகம் அடைவீர்கள். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பண வருமானம் இரட்டிப்பாகும். கணவன் மனைவிக்கு இடையே காதல் நினைவுகள் உற்சாகத்தைக் கொடுக்கும்.

விருச்சிகம்: உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் சுக்கிரன் அமர்வது ராஜயோகம் வரும் காலம். பத்தில் சுக்கிரன் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்துவார். நல்ல நேரம் வந்து விட்டது. உங்கள் வேலையில், தொழிலில் உற்சாகத்தை ஏற்படுத்தும். வேலையில் முன்னேற்றம் கிடைக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வுக்கு வாய்ப்புள்ளது. குடும்பத்தில் மனைவியுடனோ அல்லது காதலியுடனோ சின்னச் சின்ன ஊடல் ஏற்படலாம் சமாளியுங்கள். பேச்சில் நிதானமும் கவனமும் தேவை.

தனுசு: உங்கள் ராசிக்கு 9வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்யப்போகிறார். பாக்ய ஸ்தானத்தில் சுக்கிரன் பயணம் செய்வது நன்மையை தரும் காலமாகும். வேலையில் மாற்றம் ஏற்படலாம். கணவன் மனைவியின் அன்பான செயல்பாடுகள் அதிகரிக்கும். காதலிப்பவர்கள் உற்சாகமாக இருக்கும் காலம் இது. அதிர்ஷ்டம் தேடி வரும் காலமாகும். யோகத்தால் வரும் வருமானத்தை குதூகலமாக அனுபவிக்க தயாராகுங்கள்.

மகரம்: எட்டாம் வீட்டில் சுக்கிரன் அமர்வதால் பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். எட்டாம் வீட்டில் சுக்கிரன் இணைவதால் மனைவியின் உடல் நலத்தில் அக்கறை செலுத்தவும். இருவருமே கவனமாக இருந்தால் பொருள், நகை பாதிப்பை தவிர்க்கலாம். இல்லாவிட்டால் திடீர் மருத்துவ செலவுகள் எற்படும். பணம், பொருட்களை கவனமாக வைத்திருங்கள். அடுத்தவர்களுக்குஇரவல் தர வேண்டாம்.

கும்பம்: காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 7ஆம் இடத்தில் பயணம் செய்யப்போகிறார். சுக்கிரனின் நேரடி பார்வை உங்க ராசிக்கு கிடைக்கப்போகிறது. வாழ்க்கை துணை உடனான காதல் உணர்வுகள் அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் உற்சாகம் அதிகரிக்கும். காதல் வாழ்க்கையும் உற்சாகத்தை தரும் சந்தோஷமாக அனுபவிக்க தயாராகுங்கள். சிலருக்கு காதல் கணிந்து திருமணத்திலும் முடிய வாய்ப்பு உள்ளது சந்தோஷமாக அனுபவியுங்கள்.

மீனம்: சுக்கிரன் உங்கள் ராசிக்கு 6வது வீட்டில் மறைவதால் உங்கள் உடல் நலனையும் பாக்கெட்டில் உள்ள பணத்தையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளவும். வீட்டில் வாழ்க்கைத்துணையினால் சின்னச்சின்ன சச்சரவுகள், ஊடல்கள் ஏற்படலாம். காதலிப்பவர்கள் பேச்சில் கவனமும் நிதானமும் தேவை. விட்டுக்கொடுத்து சென்றால் நீண்ட காலப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படும்.

No comments:

Post a Comment