Friday, November 3, 2023

அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு தினமும் மாலையில் நீட், ஜேஇஇ பயிற்சி: கல்வித் துறை வழிகாட்டுதல் வெளியீடு


அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு நீட், ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் தினமும் மாலையில் நடத்தப்பட உள்ளன.

நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளுக்கு அரசுப் பள்ளி மாணவர்கள் தயாராகும் விதமாக பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஆண்டுதோறும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த பயிற்சி வகுப்பு குறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:

நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வு பயிற்சி வகுப்புகள் நடத்த ஏதுவாக, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், இயற்பியல், கணிதம், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடங்களில் ஒவ்வொரு பாடத்துக்கும் தலா 2 பாட வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட வேண்டும். பயிற்சி அளிப்பதில் தன்னார்வத்துடன் செயல்படும் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற்று உயர்கல்வி படித்து வரும் மாணவர்கள் ஆகியோரையும் தன்னார்வலர்களாக இணைக்கலாம்.

நீட், ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டத்தின்படி பள்ளிக்கல்வி இயக்குநரகத்தால் வழங்கப்படும் கால அட்டவணையை பின்பற்றி முறையாக பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். மாநில குழுவில் இருந்து வரும் வினாத்தாள்கள், விடைக் குறிப்புகளை பயன்படுத்தி பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதை உறுதிசெய்யவேண்டும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களை இப்பயிற்சி வகுப்புகளில் சேருமாறு ஊக்கப்படுத்தலாம். ஆனால், யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது.

பள்ளியின் அனைத்து வேலை நாட்களிலும் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 4 முதல் 5.30 மணி வரை பள்ளி வளாகத்திலேயே பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். அரையாண்டு, பொதுத் தேர்வு விடுமுறை நாட்களிலும் சிறப்பு பயிற்சி வழங்கப்படும். பள்ளிகளில் உள்ள கணினி ஆய்வகம் மூலமாகவும் பயிற்சி அளிக்கப்படும்.

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 4 முதல் 5.30 மணி வரை பள்ளி வளாகத்திலேயே வகுப்பு நடக்கும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News