முருகனின் அறுபடை வீடுகளுக்கு முதல்கட்டமாக 200 மூத்த குடிமக்களை ஜன.28-ம் தேதி ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்ல இந்து சமய அறநிலையத் துறை முடிவெடுத்துள்ளது.
இதற்காக இன்றுமுதல் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் விண்ணப்பிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
கோயில்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் 2,646 பேருக்கு பொங்கல் கொடை வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்பி.கே.சேகர்பாபு நேற்று நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆணையர் அலுவலகத்தில் நேற்று தொடங்கி வைத்து ரூ.1000-க்கான காசோலைகளை வழங்கினார். அதனை தொடர்ந்து, முருகனின் அறுபடை வீடுகளுக்கு மூத்த குடிமக்கள் தரிசனம் செய்யும் வகையில் ஆன்மிக சுற்றுலா ஏற்பாடு செய்வதுகுறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:
தமிழ் கடவுள் என்று போற்றப்படுகின்ற முருகப் பெருமான் வீற்றிருக்கும் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவற்றுக்கு மூத்த குடிமக்கள், ஒரேமுறையாக சென்று தரிசனம் செய்ய சிரமப்படுகிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு, இந்த 6 கோயில்களுக்கும் கட்டணமில்லாமல் 60 வயது முதல் 70 வயதுக்குஉட்பட்ட 200 பேரை ஆண்டுக்கு 5 முறை அதாவது 1,000 பக்தர்களை அழைத்துச் சென்று தரிசனம் செய்து வைக்க இந்து சமய அறநிலையத் துறை புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, முதற்கட்ட அறுபடை வீடு ஆன்மிக சுற்றுப்பயணம் வரும் ஜன.28-ம் தேதி தொடங்கவுள்ளது. இதற்கான விண்ணப்பத்தை இன்றுமுதல் (ஜன.11) துறையின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். தகுதியுடைய 200 விண்ணப்பதாரர்கள் முதற்கட்ட பயணத்தில் அழைத்துச் செல்லப்படுவர். ஏனைய தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அடுத்தடுத்த ஆன்மிக பயணங்களில் அழைத்துச் செல்ல முன்னுரிமை வழங்கப்படும்.
அதேபோல், ராமேசுவரம் - காசி ஆன்மிக பயணத்துக்கு இந்தாண்டு 300 பேர் அழைத்துச் செல்லப்பட உள்ளனர். இதற்காக தமிழ்நாடு அரசு ரூ.75லட்சத்தை மானியமாக வழங்கிஉள்ளது. பழனியில் தைப்பூசத்துக்கு 10 நாட்களுக்கு நாள்தோறும் 10,000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அறுபடை வீடு கோயில்களிலும் தைப்பூசத்துக்கு சிறப்பு தரிசன கட்டணத்தைரத்து செய்வது தொடர்பாக கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சிகளில் துறையின் செயலாளர் க.மணிவாசகன், இந்து சமயஅறநிலையத் துறை சிறப்பு பணி அலுவலர் ஜெ.குமரகுருபரன், ஆணையர்க.வீ.முரளீதரன், கூடுதல் ஆணையர்கள் அ.சங்கர், பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞானபாலய தேசிகர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment