Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, February 11, 2024

பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு நாளை முதல் தொடக்கம்

பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு நாளை (பிப்ரவரி 12) தொடங்கி பிப்ரவரி 17-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடத்தப்படவுள்ளது. இதற்கான இறுதிகட்ட பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதவுள்ள 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் நாளை (பிப்.12) தொடங்கி பிப்.17 வரை நடைபெற உள்ளன. மாநிலம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் பயிலும் சுமார் 6 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வில் பங்கேற்க உள்ளனர்.

இதற்காக அனைத்து பள்ளிகளிலும் செய்முறை தேர்வுக்கு தேவையான ஆய்வகப் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அதன்படி தேர்வுத்துறை வழங்கியுள்ள வழிமுறைகளை பின்பற்றி பாடவாரியாக அட்டவணை தயாரித்து எவ்வித குளறுபடியுமின்றி பிப்ரவரி 17-ம் தேதிக்குள் செய்முறைத் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும். ஒரு சுற்றுக்கு அதிகபட்சம் 25 முதல் 30 மாணவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

தலைமை ஆசிரியர் பொறுப்பு:

மேலும், தேர்வுத்துறை சலுகை அறிவித்த மாணவர்களுக்கு மட்டும் செய்முறைத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். தேர்வில் ஏதேனும் புகார் கிடைக்கப் பெற்றால் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் பொறுப்பேற்க நேரிடும். எனவே, கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுறுத்தல்களை தேர்வுத் துறை வழங்கியுள்ளது.

இதற்கிடையே பொதுத்தேர்வில் முறைகேடுகள் நடைபெறுவதை தவிர்ப்பதற்காக பல்வேறு செயல்பாடுகளை தேர்வுத் துறை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் மாணவர்கள் தேர்வில் காப்பி அடிப்பதை தடுக்கும் வகையில் 2 விதமான வினாத்தாள் வழங்கப்பட உள்ளன. இந்த வழக்கம் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது.

எனினும், அதை முறைப்படுத்தி தேர்வு அறையில் மாணவர்களுக்கு வினாத்தாள்களை சரியாக வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக தேர்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment