நிலவில் ரயில் பாதை அமைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. என்னது? நிலவில் ரயில் பாதையா? என்று நீங்கள் ஆச்சரியப்படுவது எங்களுக்கு இங்கே தெரிகிறது.
ஆம் மக்களே, நிலவில் ரயில் தடம் அமைக்க அமெரிக்கா திட்டமிட்டு, அதை நிறைவேற்ற ஒரு நிறுவனத்தையும் தேர்வு செய்துள்ளது.
அமெரிக்க அரசின் பாதுகாப்பு மேம்பட்ட ஆராய்ச்சி திட்ட முகமை (DARPA) ஒரு யுனைடெட் ஸ்டேட்ஸ் டிபார்ட்மென்ட் ஏஜென்சி ஆகும். இது சந்திரனில் ரயில் போக்குவரத்து அமைக்க இப்போது நார்த்ரோப் க்ரம்மன் (Northrop Grumman) நிறுவனத்தை தேர்வு செய்துள்ளது. இந்த நிறுவனம் நிலவில் எப்படி ரயில் பாதையை அமைக்கப்போகிறது என்று திட்டமிடப்போகிறது. நிலவில் ரயில் பாதை அவசியமா என்று நீங்கள் கருதலாம், இதன் தேவைக்கு முக்கிய காரணம் உள்ளது.
நிலவில் ரயில் பாதை அமைக்க அமெரிக்கா ஒப்புதல்:
நிலவில் மனிதர்களுக்கான மனித காலனியை அமைக்க அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது. 10 ஆண்டிற்குள் நிலவில் ரயில் பாதை அமைக்க தேவைப்படும் விஷயங்களை நார்த்ரோப் க்ரம்மன் நிறுவனம் DARPA-விடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை லூனா-10 (LunA-10) என்ற பெயருடன் துவங்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நிலவில் ரயில் பாதை அமைக்கும் திட்டம் உருவாக்கப்பட்டு, மேம்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
சந்திரனில் ரயிலை இயக்குவது மிகவும் முட்டாள்தனமாகத் தோன்றலாம், ஆனால் அதற்குப் பின்னால் சில உறுதியான காரணம் உள்ளது என்கிறது அமெரிக்கா. நிலவில் மனித காலனியை உறுதியாக உருவாக்க பல விஷயங்களை நாம் கருத்தில் கொள்ள வேண்டியதுள்ளது. நீர் பனிக்கட்டிகள் இருக்கும் இடங்களில் சுரங்கத்தை உருவாக்க வேண்டும். அணு மின் நிலையங்களை நிலவில் நிறுவ வேண்டும். தொழிற்சாலைகள் மற்றும் இரயில்வேக்கான தடங்களை அமைக்க வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
சந்திரனின் பரப்பளவு மிகவும் சிறியது என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், அது உண்மையில்லை. நிலவு ஆப்பிரிக்காவிற்கு சமமான பரப்பளவைக் கொண்ட மிகப் பெரிய இடம் என்பதே உண்மையாகும். அத்தகைய விரிவான இடத்திற்கு இடையே பயணிக்க மற்றும் பொருட்களை எடுத்து செல்ல ஒரு பாதுகாப்பான வாகனம் தேவை. இதை ரயில் மட்டுமே நிறைவேற்ற முடியும். குறிப்பாக, கூர்மையான நிலவின் தூசியில் இருந்து தப்பிக்க இது மிகவும் அவசியம் என்கிறது DARPA.
இந்த திட்டம் எப்படி செயல்படும்? எப்படி நிலவு ரயில் உருவாக்கப்படும்?
சந்திர தூசி மிகவும் கூர்மையானது. இது சிராய்ப்பு மற்றும் அரிக்கும் தன்மையை கொண்டது. சந்திர தூசியில் உள்ள ஸ்டாடிக் மின்சாரம், அதை ஸ்பேஸ்சூட்கள் மற்றும் உபகரணங்களில் ஒட்டிக்கொள்ளச் செய்கிறது. இதனால் அவை குறைந்த சேவை ஆயுளை பெறுகின்றன. ரயிலில் பயணம் செய்வது மனிதர்களுக்கும் தூசிக்கும் இடையிலான தொடர்பை வெகுவாகக் குறைக்கும் என்று கூறப்படுகிறது. ஸ்பேஸ்சூட் மற்றும் உபகரணங்கள் வேகமாக ஆயுளை இழக்கும் என்பதால் இது முக்கியமாக பார்க்கப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க, சந்திர பரப்பில் தண்டவாளம் அமைப்பது லேசுப்பட்ட காரியமில்லை. பூமியில் தண்டவாளத்தை நிலைநிறுத்துவது போல, எளிதாக நிலவில் தண்டவாளம் அமைக்க முடியாது. அப்படியானால், நிலவில் எப்படி தண்டவாளம் அமைக்கப்பட வேண்டும்? எப்படி அமைத்தால் அவை மிகவும் உறுதியாக இருக்கும்? என்ன உலோகத்தை பயன்படுத்தினால் நிலவின் தூசி தண்டவாளத்தையும், ரயிலையும் சேதப்படுத்தது? என்பது போன்ற தகவல்களை Northrop Grumman நிறுவனம் வழங்க வேண்டும்.
இதை உருவாக்க தேவைப்படும் செலவு, தொழில்நுட்ப மற்றும் தளவாட அபாயங்கள் ஆகியவற்றின் முக்கியமான பட்டியலை உருவாக்குதல், நிலவு ரயிலின் மாடல் வடிவமைப்பு, மற்றும் அதை உருவாக்கும் முன்மாதிரிகள் போன்ற பல விஷயங்களை Northrop Grumman விரைவில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இந்த தகவல்களை நிறுவனம் வழங்கிய பிறகு, பூமியில் இருந்து நிலவு ரயில் பணிக்கு தேவையான பொருட்கள், ரோபோட்கள் மற்றும் மனிதர்களை அழைத்து செல்லும் திட்டம் துவங்கும்.
No comments:
Post a Comment