Sunday, April 7, 2024

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: விடைத்தாள் மதிப்பீட்டில் புது விதிமுறை - முக்கிய அறிவிப்பு

பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீட்டில் ஆங்கில வழி ஆசிரியர்களுக்கு ஆங்கில வழி விடைத்தாளும், தமிழ் வழி ஆசிரியர்களுக்கு தமிழ்வழி விடைத்தாளும் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்கக இணை இயக்குநர்‌ நரேஷ்‌, அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், 10ஆம் வகுப்பு 2024 பொதுத் தேர்வு மதிப்பீட்டுப்‌ பணியில் விடைத் தாள்‌ எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர்கள்‌ நியமனம்‌ செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள்‌ வழங்கப்பட்டுள்ளன. அதில் மேலும் கூறி உள்ளதாவது:

''மார்ச்‌ / ஏப்ரல்‌ 2024 இடைநிலைப்‌ பள்ளி விடுப்புச்‌ சான்றிதழ் பொதுத்தேர்வு தொடர்பாக கல்வி மாவட்டந்தோறும்‌ அமைக்கப்பட்டுள்ள விடைத்தாள்‌ மதிப்பீட்டு முகாம்களில்‌ தங்கள்‌ மாவட்டத்தில்‌ தேர்வெழுதிய மாணவர்களின்‌ எண்ணிக்கைக்கேற்ப விடைத் தாட்கள்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அவ்வெண்ணிக்கைக்கு தக்கபடி மதிப்பீட்டுப்‌ பணியை செய்து முடிக்க தேவையான ஆசிரியர்களின்‌ எண்ணிக்கையினை சரியாகக்‌ கணக்கிட்டு பாடவாரியான / பயிற்று மொழிவாரியான ஆசிரியர்களை உடனடியாக பணிவிடுவிப்பு செய்து முகாம்‌ பணிக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறது.

விடைத்தாள் மதிப்பீட்டில் புது முறை

மேலும்‌, தமிழ்‌ வழியில்‌ போதிக்கும்‌ ஆசிரியர்கள்‌ தமிழ்வழி விடைத்தாட்களையும்‌, ஆங்கில வழியில்‌ போதிக்கும்‌ ஆசிரியர்கள்‌, ஆங்கிலவழி விடைத்தாட்களை மட்டுமே மதிப்பீடு செய்ய வேண்டும்‌ என்ற விதிமுறை பின்பற்றத்தக்க வகையில்‌, தங்கள்‌ மாவட்டத்தில்‌அமையும்‌ மதிப்பீட்டு முகாமில்‌ பெறப்படும்‌ பயிற்று மொழி வாரியான விடைத்தாள்களின்‌ எண்ணிக்கைக்கு தக்க விகிதத்தில்‌ ஆங்கிலம்‌, தமிழ்‌ வழிகளில்‌ பயிற்றுவிக்கும்‌ ஆசிரியர்களை கணக்கிட்டு நியமனம்‌ செய்து அனுப்பிட வேண்டும்‌.

மதிப்பீட்டுப்‌ பணி குறிப்பிட்டுள்ள நாட்களுக்குள்‌ திட்டமிட்டு தொய்வில்லாமலும்‌, கால தாமதமில்லாமலும்‌ நடைபெற வேண்டும்‌. மேற்படி மதிப்பீட்டுப்‌ பணியினை மேற்கொள்ள தங்களது ஆளுகைக்குட்பட்ட அரசு பள்ளிகள்‌ / அரசு நிதிஉதவி பெறும்‌ பள்ளிகள்‌ / தனியார்‌ (மெட்ரிக்‌ / ஆங்கிலோ இந்தியன்‌) பள்ளிகள்‌ அனைத்தில் இருந்தும்‌ பத்தாம்‌ வகுப்பு போதிக்கும்‌ தகுதி வாய்ந்த பாட ஆசிரியர்களை தவறாமல்‌ பணியிலிருந்து விடுவித்து தேர்வாளர்களாக நியமனம்‌ செய்து மதிப்பீட்டுப்‌ பணியினை மேற்கொள்ள அறிவுறுத்தி அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்‌. எந்தவொரு பள்ளியிலிருந்தும்‌ ஆசிரியர்கள்‌ விடுபடாது வருவதைக் கண்காணித்தல்‌ வேண்டும்‌.

ஆசிரியர்களின்‌ மொத்த எண்ணிக்கைப்‌ பட்டியலைத் தவறாது சரிபார்த்து ஆசிரியர்கள்‌ விடுபடாமல்‌ வரவழைத்தல்‌ வேண்டும்‌. மேலும்‌ ஒரு கல்வி மாவட்டத்தில்‌ இரு முகாம்கள்‌ அமைக்கப் பெற்றிருப்பின்‌ இரு முகாம்களின்‌ தேவைக்கேற்ப விடைத்தாள்‌ மதிப்பீட்டுப்‌ பணிக்கு எவ்விதக் குந்தகமும்‌ ஏற்படாமல்‌ தகுதி வாய்ந்த ஆசிரியர்களை (CE, AE‌, SO & MVO) சரிவரப் பிரித்து ஒதுக்கீடு செய்திடுமாறு தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.

மதிப்பீட்டுப்‌ பணிக்கு நியமனம்‌ செய்யப்படும்‌ ஆசிரியர்களுக்கு 11.04.2024-க்குள்‌ நியமன ஆணையினை தவறாமல்‌ வழங்க வேண்டும்''. இவ்வாறு அரசுத் தேர்வுகள் இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News