Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, April 13, 2024

குரோதி வருடத் தமிழ்ப்புத்தாண்டு பலன்கள் - விருச்சிகம்எப்போதும் தன்னளவில் ஒழுங்கையும் முயற்சியையும் விடாமல் கடைப்பிடிக்கும் விருச்சிக ராசி அன்பர்களே!
இந்தக் குரோதி வருடப் புத்தாண்டு எப்படிப்பட்ட பலன்களை தரப்போகிறது என்பதைக் காண்போம்.

ராசிக்கு 8-ம் வீடான மிதுனத்தில் சந்திரன் நிற்கும்போது இந்தக் குரோதி வருடம் பிறப்பதால் அலைச்சலுடன் ஆதாயமும் உண்டாகும். எப்படிப்பட்ட சவால்களையும் சமாளிக்கும் வல்லமை பிறக்கும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். அதிக வட்டிக்கு வாங்கிய கடனில் ஒருபாதியை பைசல் செய்வீர்கள்.

சூரியனும், சுக்ரனும் சாதகமாக இருக்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எதிர்ப்புகள் அடங்கும். வீரியத்தைவிடக் காரியம் முக்கியம் என்பதை உணர்வீர்கள். பேச்சில் இனிமை பிறக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு செல்வாக்கு கூடும். குடும்பத்தில் பிள்ளைகள் ஆக்கபூர்வமாகச் செயல்படுவார்கள். பூர்வீக சொத்து கைக்கு வரும். புது வேலை கிடைக்கும். அரசு காரியங்கள் சுலபமாக முடியும். வெளிவட்டாரத்தில் பெருமையும் புகழும் அதிகரிக்கும்.

30.4.24 வரை 6-ம் வீட்டில் மறைந்துக் கிடக்கும் குருபகவான் சின்னச் சின்னப் போராட்டங்களைக் கொடுப்பார். தேவையில்லாமல் பேசி நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டாம். குறுக்கு வழிகளுக்கு `நோ' சொல்லுங்கள். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன்பு ஆலோசனை அவசியம். தாணுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கப்பாருங்கள்.

ஆனால் 1.5.24 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் 7-ம் வீடான ரிஷபத்தில் அமர்ந்து உங்கள் ராசியையும் பார்க்க இருப்பதால் உங்களின் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். அழகு, இளமைக் கூடும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியவர்களை இனம் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியம் மேம்படும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். சொந்த பந்தங்களின் அன்புத் தொல்லைகள் குறையும்.

இந்தாண்டு முழுக்க சனிபகவான் 4 -ம் இடத்தில் அமர்ந்து பலன்கொடுப்ப்தால் சின்னச் சின்ன வேலைகளைக்கூட அலைந்து முடிக்க வேண்டி வரும். செலவுகள் அதிகரிக்கும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்குவீர்கள். சொத்து வாங்கும் போது முறையான பட்டா, வில்லங்க சான்றிதழ்களையெல்லாம் வழக்கறிஞரை வைத்து சரி பார்த்து வாங்குவது நல்லது. சொந்த வாகனத்தில் இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. தாயாரின் ஆரோக்கியத்தைக் கண்காணியுங்கள். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். மூன்றாம் நபருடன் குடும்ப அந்தரங்க விஷயங்களை விவாதிக்க வேண்டாம். உணவில் உப்பை குறைத்துக் கொள்ளுங்கள்.

ராசிக்கு 5-ம் வீட்டிலேயே ராகு அமர்வதால் தெளிவாக முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். பிள்ளைகளிடம் கெடுபிடி காட்டவேண்டாம். அவர்களிடம் தேவையின்றிக் கோபப்படாதீர்கள். கர்ப்பிணிகள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. பூர்வீக சொத்தை சரியாகப் பராமரிக்க முடியாமல் போகும்.

ஆனால் கேது இந்தாண்டு முழுக்க 11 -ம் வீட்டில் நிற்பதால் ஷேர் மூலம் பணம் வரும். எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். புதுப் பதவிக்கு உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். சிலர் சொந்தமாகத் தொழில் தொடங்குவீர்கள். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். 26.8.24 முதல் 23.10.24 வரை மற்றும் 18.1.25 முதல் 7.4.25 வரை உங்களின் ராசிநாதனாகிய செவ்வாய் 8 - ல் மறைவதால் மனஇறுக்கமும், எதிர்காலம் பற்றிய பயமும் வந்துபோகும். தொடங்கும் காரியங்கள் தாமதமாக முடியும் போக்கும் உண்டாகும். சகோதரர்களால் அலைச்சல் இருக்கும். முழுமையாக யாரையுமே நம்ப முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள்.

25.4.24 முதல் 20.5.24 வரை சுக்ரன் 6-ல் மறைவதனால் அலைச்சல், செலவினங்கள், கணவன் - மனைவிக்குள் சந்தேகத்தால் சின்ன சின்ன வாக்குவாதங்களும் வரக்கூடும். சிறுசிறு அறுவை சிகிச்சைகளும் வந்து போகும்.

வியாபாரம்: நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொண்டு லாபத்தை இரட்டிப்பாக்குவீர்கள். கடன் வாங்கி முதலீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. உணவு, இரும்பு, கண்சல்டன்சி, ரியல் எஸ்டேட், மர வகைகளால் ஆதாயம் உண்டு. தொழில் ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். சிலர் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள்.

உத்தியோகம் : 1.5.24 முதல் அலுவலகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவீர்கள். வேலைச்சுமை குறையும். சக ஊழியர்களால் இருந்த பிரச்னைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். என்றாலும் சனி 4-ல் நிற்பதால் மூத்த அதிகாரிகளைத் திருப்திபடுத்த முடியாமல் திணறுவீர்கள். உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகமாகும். வேலையை விடுவது தொடர்பாக அவசர முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம். எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு தாமதமாகும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு ஓடி ஓடி உழைக்கச்செய்து சமயோஜித புத்தியால் சாதிக்க வைப்பதோடு உங்களுக்கான அடையாளங்களையும் மீட்டுத் தரும்.

No comments:

Post a Comment