Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, April 12, 2024

குரோதி வருடத் தமிழ்ப்புத்தாண்டு பலன்கள் - கும்பம்

வசதி வாய்ப்புகளைவிட வாழ்வில் நிம்மதியே முக்கியம் என்று நினைத்துத் திட்டமிட்டு வாழும் கும்ப ராசி அன்பர்களே...

உங்களுக்கு இந்தக் குரோதி வருடம் எப்படி அமையப்போகிறது என்பதைப் பார்ப்போம்.

ராசிக்கு தைர்ய ஸ்தானமான மேஷத்தில் சூரியன் பலம் பெற்று அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் மனோபலம் கூடும். விவாதங்களில் வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கையோடு சில முடிவுகள் எடுப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டாகும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவல் ஆகும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். கணவன் மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவடையும்.

5 -ம் வீட்டில் சந்திரன் சஞ்சரிக்கும்போது இந்த வருடம் பிறப்பதால் அடிப்படை வசதிகள் உயரும். பிள்ளைகளால் சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். பிள்ளைகளின் திருமண முயற்சிகள் பலிதமாகும். சிலர் மகன் அல்லது மகளின் உயர் கல்விக்காக அதிக முயற்சிகள் எடுப்பீர்கள். இதுவரை கண்டும் காணாமல் இருந்த தூரத்து சொந்தங்கள் நாடிவந்து உறவு பாராட்டுவார்கள். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

சனிபகவான் ராசிக்குள்ளேயே அமர்ந்து சஞ்சாரம் செய்வதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். நெஞ்சு எரிச்சல், செரிமானக் கோளாறு வந்து போகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். துரித உணவுகள், கொழுப்புச் சத்து அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்த்துவிடுங்கள். சோப்பு, ஷாம்புக்களை அடிக்கடி மாற்றிக் கொண்டிருக்காதீர்கள். தோலில் தடிப்பு, அலர்ஜி வரக்கூடும். சில நேரங்களில் எங்கே நிம்மதி என்று தேட வேண்டி வரும்.

தன்னைச் சுற்றி ஏதோ சதி நடப்பதாக சந்தேகப்படுவீர்கள். கணவன் மனைவிக்குள் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயல்வார்கள். எதுவாக இருந்தாலும் இருவரும் மனம் விட்டுப் பேசி முடிவுகள் எடுக்கப்பாருங்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. முன்கோபத்தைத் தவிர்க்கப்பாருங்கள். யோகா, தியானத்தில் ஈடுபடுத்திக் கொள்வது நல்லது. அந்தரங்க விஷயங்களை வெளியே சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம்.

30.4.24 வரை குருபகவான் உங்களுடைய ராசிக்கு 3-ம் வீட்டில் நிற்பதால் போராடியே அனைத்து வேலைகளையும் முடிக்க வேண்டியிருக்கும். சகோதர வகையில் சின்னச் சின்னக் கருத்து மோதல்கள் வந்துபோகும். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. அக்கம்பக்கம் வீட்டாருடன் அளவாகப் பழகுங்கள். 1.5.24 முதல் குரு ராசிக்கு 4-ல் நுழைவதால் எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். உங்களைப் பற்றிய வதந்திகள் அதிகமாகும். மனஇறுக்கம் உண்டாகும். நம்பும் சிலர் உங்களைப் பற்றித் தவறாகப் பேசுவதை அறிந்து வருந்துவீர்கள். உறவினர், நண்பர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். வழக்கில் வழக்கறிஞரை மாற்ற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். வீடு கட்டுவது, வாங்குவது போன்ற முயற்சிகள் தாமதமாகி முடியும். கொழுப்புச் சத்து அதிகமுள்ள உணவுகளைத் தவிர்க்கப்பாருங்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம்.

ராகு 2-ம் வீட்டிலும் கேது 8-லும் நீடிப்பதால் குடும்பத்தில் அவ்வப்போது சலசலப்புகள் வரும். சிலர் மூக்குக் கண்ணாடி அணிய வாய்ப்பிருக்கிறது. வெளிப்படையாகப் பேசி பிரச்னைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள். நீங்கள் நல்லதே சொன்னாலும் பொல்லாப்பாக போய் முடிய வாய்ப்பிருக்கிறது. காலில் அடிப்படக்கூடும். சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். அரசுக் காரியங்கள் தள்ளிப் போய் முடியும். வழக்கால் நெருக்கடி வந்து நீங்கும்.

அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. தனி நபர் விமர்சனங்களை தவிர்க்கப்பாருங்கள். பழைய விஷயங்களை நினைத்து உங்கள் மன அமைதியைக் கெடுத்துக்கொள்ளாதீர்கள். தூக்கம் குறையும். உரிய உடற்பயிற்சிகள் செய்து ஆரோக்கிய வாழ்வை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.

7.7.24 முதல் 1.8.24 வரை சுக்ரன் 6-ல் மறைவதால் வாகனப் பயணங்களில் கவனம் தேவை. கணவன் மனைவிக்குள் ஈகோ பிரச்னைகளைத் தவிர்ப்பது நல்லது. வீண் சந்தேகத்தாலும் சண்டை, சச்சரவுகள் வரக்கூடும்.

வியாபாரம்: போட்டிகளை சமாளிக்க அதிகம் உழைக்க வேண்டி வரும். திடீர் லாபம் உண்டு. புள்ளி விவரங்களை நம்பிப் பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். வேலையாட்களை நினைத்து வருத்தப்படுவீர்கள். பொறுப்பான, அமைதியான வேலையாள் நமக்கு அமையவில்லையே என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள். யாருக்கும் முன் பணம் தர வேண்டாம். அயல்நாட்டிலிருப்பவர்கள், திடீரென்று அறிமுகமாகுபவர்களை நம்பிப் புது தொழில், புது முயற்சிகளில் இறங்க வேண்டாம். கட்டட உதிரி பாகங்கள், கமிஷன், பூ, மர வகைகளால் ஆதாயமடைவீர்கள். கூட்டுத் தொழிலை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது.

உத்தியோகம்: வேலை செய்யும் இடத்தில் எவ்வளவு உழைத்தாலும் அங்கீகாரமோ, பாராட்டுகளோ கிடைக்காது. சந்தர்ப்ப, சூழ்நிலையறிந்து செயல்படுவது நல்லது. மேலதிகாரிகளிடம் பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை. சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்னைகள் வந்துச் செல்லும். நியாயமான பதவி உயர்வு, சம்பள உயர்வைக்கூடப் போராடி பெற வேண்டி வரும்.

No comments:

Post a Comment