கலைத்துவமான மனமும் கடமையைச் செய்வதில் கலங்காத குணமும் கொண்டவர்கள் கடக ராசிக்காரர்கள்.
அஷ்டம சனியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் கடக ராசிக்காரர்களுக்கு ராசிக்கு 12 ம் இடத்தில் இந்தப் புத்தாண்டு பிறக்கிறது. இந்த நிலையில் குரோதி வருடம் எப்படி அமையும் என்கிற ஆர்வமும் அச்சமும் ஒரு சிலருக்குள் இருக்கிறது. ஆனால் அந்த பயமே தேவையில்லை.
வருடம் பிறக்கும் போது சூரியனும், புதனும் வலுவாக இருப்பதால் குடும்பத்தில், கணவன் -மனைவிக்குள் இருந்த வருத்தங்கள் முற்றிலும் நீங்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் பலிதமாகும். சமூகத்திலிருந்து வந்த அவப்பெயர் நீங்கும். மதிப்பு மிக்க கௌரவப் பதவிகள் தேடிவரும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். அரசுக் காரியங்கள் சாதகமாக முடியும். கொடுத்து வராமல் இருந்த தொகை கைக்கு வரும்.
என்றாலும் மிதுனத்தில் வருடம் பிறப்பதால் அலைச்சல் அதிகரிக்கும். திடீர் பயணங்கள் அமையும். ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் கரையும். ஒருசிலருக்குத் தூக்கம் பிரச்னையாகும். என்றாலும் இறையருளால் மனதை திடப்படுத்தி உழைப்பீர்கள். பிடித்தமான கோயில்களுக்குச் சென்று வருவீர்கள். அனைவரிடமும் சாமர்த்தியமாகப் பேசி சாதிக்க வேண்டும் என்பதை உணர்வீர்கள்.
30.04.2024 வரை குருபகவான் 10- ல் தொடர்வதால் பணிச்சுமை பாடாய்ப்படுத்தும். அலைச்சலும் அதிகரிக்கும். பணவிரையமும் ஏற்படும். வங்கியில் பணம் எடுக்கும்போதும் செலுத்தும்போதும் கவனம் தேவை. புதியவர்களை நம்பிப்பணம் தர வேண்டாம்.
ஆனால் 1.5.24 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் 11 - ல் அமர்வதால் ஆசுவாசமாவீர்கள். போராட்டங்கள் குறையும். தடைகளெல்லாம் நீங்கும். இதுவரை இழுபறியாக இருந்த பல விஷயங்கள் முடிவுக்கு வரும். கடன்கள் அடைபடும். பழைய பிரச்னைகளைத் தீர்க்க வழி பிறக்கும். இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள்.
வீட்டில் சுபநிகழ்ச்சிகள் வரிசைகட்டும். குழந்தை பாக்கியம் எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு அந்த சந்தர்ப்பம் தேடிவரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகன் நல்ல வழியில் திரும்புவார். குடும்பத்தில் பாசம் நிறைந்திருக்கும். தங்க நகைகள் வாங்கும் யோகம் பிறக்கும். அடகில் இருந்த நகைகளை மீட்பீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சைக் கேடு நடப்பார்கள். கண்டும் காணாமலும் இருந்த உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். உறவாடுவார்கள். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.
சனிபகவான் 8 - ல் அமர்ந்து அஷ்டமத்துச் சனியாகப் பலன் தருவதால் தொல்லைகள் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்துப் போங்கள். இரவு நேரப் பயணங்களை தவிர்க்கப்பாருங்கள். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். குருவருள் பரிபூரணமாகக் கிடைக்க சித்தர்களின் ஜீவ சமாதிக்குச் சென்று வழிபட்டு வாருங்கள். பிரச்னைகளில் இருந்து விடுபட வழிகள் பிறக்கும்.
ராகுபகவான் ஆண்டு முழுவதும் 9 - ம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் மனதில் தன்னம்பிக்கை பிறக்கும். எதையும் சாதிக்கும் வலிமை உண்டாகும். தொழில் தொடங்கக் கேட்டிருந்த வங்கிக் கடன் உதவி கிடைக்கும். என்றாலும் தந்தையாரின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. பணம் வந்தாலும் எவ்வளவு எடுத்து வைத்தாலும் சேமிக்க முடியாதபடி செலவுகள் வந்துபோகும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். தந்தைவழி உறவினர்களால் அலைச்சல், செலவுகள் அதிகமாகும். கேது 3 - ம் வீடான கன்னியில் அமர்ந்திருப்பதால் தைரியமாகச் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மனோபலம் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். பங்குச் சந்தை மூலமாக பணம் வரும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள்.
8.11.24 முதல் 3.12.24 வரை சுக்ரன் 6 - ல் மறைவதால் குடும்பத்தில் அவ்வப்போது சலசலப்பு இருக்கும். வீண் சந்தேகம் வேண்டாம். வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வது அவசியம்.
14.4.24 முதல் 22.4.24 வரை உங்கள் ராசிக்கு செவ்வாய் 8 - ல் அமர்வதால் உறவினர்களுடன் மோதல் வந்து விலகும்.
வியாபாரம்: சின்ன சின்ன நஷ்டங்கள் இருந்தாலும் சமாளித்துவிடுவீர்கள். விற்பனை சம்பந்தமான ஆர்டர் தாமதமாகும். வேலையாள்களும் முரண்டு பிடிப்பார்கள். பழைய பாக்கிகளை போராடித் தான் வசூலிக்க வேண்டி வரும். வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்த கடுமையாக உழைக்க வேண்டிவரும். ஏற்றுமதி - இறக்குமதி, லாட்ஜிங், வாகன உதிரி பாகங்கள், ஸ்டேஷ்னரி, கமிஷன் வகைகளால் லாபமடைவீர்கள். கூட்டுத் தொழிலில் விட்டுக் கொடுத்து போங்கள். ஐப்பசி, மாசி, தை மாதங்களில் கடையை விரிவுப்படுத்துவீர்கள்.
உத்தியோகம்: அலுவலகத்தில் உங்களுக்கு சாதகமாக இருந்த அதிகாரி மாற்றப்படுவார். புது அதிகாரிகள் புரிந்துக் கொள்ளாமல் செயல்பட வாய்ப்பிருக்கிறது. சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் சுமார்தான். பணிச்சுமையும் அதிகரிக்கும். எதிர்பாராத இடமாற்றம் உண்டு. என்றாலும் புதிய சலுகைகளும், சம்பள உயர்வும் உண்டு. நம்பிக்கையோடு தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க வேண்டிய நேரம் இது.
No comments:
Post a Comment