Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, April 12, 2024

குரோதி வருடத் தமிழ்ப்புத்தாண்டு பலன்கள் - சிம்மம்

யாருக்கும் தலைவணங்காமல் வாழ வேண்டும் என்று நினைக்கும் சிம்மராசி அன்பர்களுக்கு இந்த குரோதி வருடப்புத்தாண்டு எவ்வாறு அமையும் என்பதைப் பார்ப்போம்.

ராசிக்கு 11 - ம் வீடான மிதுனத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலத்தில் பிறக்கும் இந்தப் புத்தாண்டு உங்களைப் புத்துணர்ச்சி கொள்ளச் செய்யும். சோம்பல் நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். முகத்தில் தெளிவு தேஜஸ் கூடும். பேச்சில் இனி கூடும். இதுவரை எதைப் பேசினாலும் சண்டையாக மாறிய நிலைமை மாறும். குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். சித்திரை, வைகாசி, ஆடி மாதங்களில் உங்களின் அடிப்படை வசதிகள் பெருகும். பிரபலங்களின் நட்பும் கிட்டும். பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். வருங்காலத்திற்காக சேமிக்கத் தொடங்குவீர்கள்.

சூரியனும், சுக்ரனும் உச்சம் பெற்று சஞ்சரிக்கும் காலத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் அரசுத்துறை சார்ந்து எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்குவீர்கள். செலவுகள் கட்டுக்குள் வரும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் வாய்க்கும்.


30.4.24 வரை குருபகவான் 9-ல் நிற்பதால் பிரச்னைகளை எளிதில் வெல்வீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை விரைந்து முடிப்பீர்கள். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும்.

1.5.24 முதல் வருடம் முடியும் வரை குரு 10 -ம் வீட்டில் நுழைவதால் பணியிடத்தில் சின்னச் சின்ன பிரச்னைகள் தலைதூக்கும். சட்டத்திற்கு புறம்பான வகையில் செயல்படுபவர்களிடம் இருந்து விலகி இருங்கள். அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டிய வரிகளை முறையாகச் செலுத்துங்கள். மனம் தேவையின்றி அலைபாயும். மனம் விட்டுப் பேசமுடியாமல் திண்டாடுவீர்கள். முக்கிய கோப்புகளைக் கையாளும் போது அலட்சியம் வேண்டாம். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றப் போராட வேண்டி வரும்.

சனிபகவான் கண்டகச் சனியாக தொடர்வதால் முன்கோபம் அதிகமாகும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. சகிப்புத்தன்மை அவசியம். வங்கி தொடர்பான விஷயங்களில் அதிக கவனம் தேவை. திருமண முயற்சிகள் தாமதமாக முடியும் என்பதால் உரிய வழிபாடுகள் செய்வது நல்லது. முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு முன்பு கவனமாக படித்துப் பார்ப்பது நல்லது. பணிகளை மற்றவர்களை நம்பி விடாமல் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது.

ராகு 8 - லும், கேது 2 லும் நீடிப்பதால் இடம், பொருள், ஏவலறிந்து செயல்படுங்கள். பேச்சில் நிதானம் தேவை. உங்களைப் பற்றிய தவறான புரிதல் ஏற்பட வாய்ப்பிருப்பதால் வார்த்தைகளில் கவனம் தேவை. என்றாலும் திடீர் உதவிகள் புது வகையில் வந்து சேரும். இடமாற்றமும் இருக்கும். அயல்நாடு சென்று வருவீர்கள். பல் வலி, காது வலி வந்துப் போகும். கண் பார்வையை பரிசோதித்துக் கொள்ளுங்கள். வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணிந்துச் செல்லுங்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு உள்விவகாரங்களில் அதிகம் மூக்கை நுழைக்க வேண்டாம். சித்தர் பீடங்கள், புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

3.12.24 முதல் 30.12.24 வரை சுக்ரன் 6 -ல் மறைவதனால் சிறுசிறு விபத்துகள் ஏற்படலாம் என்பதால் பயணங்களின் போது கவனம் தேவை. வாகனத்தை வேகமாக இயக்க வேண்டாம். அக்கம்பக்கம் வீட்டாருடன் இணக்கம் தேவை.

22.4.24 முதல் 31.5.24 வரை செவ்வாய் ராசிக்கு 8 -வது வீட்டில் மறைவதனால் வீடு, மனை வாங்குவது விற்பது எதுவாக இருந்தாலும் கவனமாக இருங்கள் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். சகோதரங்களுடன் சின்ன சின்ன கருத்து மோதல்கள் வர வாய்ப்பிருக்கிறது. பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்திலும் கவனமாக இருங்கள்.

வியாபாரம்: ஏற்ற இறக்கங்கள் இருந்துக் கொண்டேயிருக்கும். பணியாளர்கள் அடிக்கடி விடுப்பு எடுத்துத் தொந்தரவு தருவார்கள். வருடத்தின் மத்தியப் பகுதியிலிருந்து ஓரளவு லாபம் உண்டு. விளம்பர யுக்திகளை கையாண்டு லாபம் ஈட்டுவீர்கள். புது சலுகைத் திட்டங்களை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள். சினிமா, பதிப்புத்துறை, ஹோட்டல், கிரானைட், டைல்ஸ், மர வகைகளால் ஆதாயமடைவீர்கள். பங்குதாரர்களிடம் ஒத்துழைப்பை எதிர்பார்க்க முடியாது.

உத்தியோகம்: வேலைச்சுமை அதிகமாகும். இடமாற்றத்துக்கு வாய்ப்பு உண்டு. சிலர் கட்டாய விடுப்பில் செல்ல வேண்டியிருக்கும். என்றாலும் புரட்டாசி, ஐப்பசி, தை மாதங்களில் அலுவலகத்தில் அமைதி உண்டாகும். முக்கியத்துவம் அதிகமாகும். வேறு சில புது வாய்ப்புகளும் வரும். சம்பளம் உயரும். உங்கள் மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கிலிருந்து விடுபடுவீர்கள்.

No comments:

Post a Comment