Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, April 12, 2024

குரோதி வருடத் தமிழ்ப்புத்தாண்டு பலன்கள் - மிதுனம்

உழைப்பு ஒன்றுதான் நம்மை வாழ்வில் உயர்த்தும் என்கிற உன்னதத் தத்துவத்தை வாழ்வில் நன்கு உணர்ந்த மிதுன ராசி அன்பர்களே...

சூரியன், புதன், சுக்ரன் ஆகிய கிரகங்கள் சாதகமாக சஞ்சாரம் செய்யும் வேளையில் இந்த குரோதி வருடப் புத்தாண்டு பிறப்பதால் இந்த ஆண்டு உங்கள் எண்ணங்கள் ஈடேறும் ஆண்டாக அமையும் என்று சொல்லலாம்.

உங்களுடைய திறமை பளிச்சிடும். நிர்வாகத்தில் உங்கள் முயற்சிகளைக் கண்டு அனைவரும் வியப்பார்கள். உயர்பதவியில் இருப்பவர்கள் தேடிவந்து நட்புக்கொள்வார்கள். இதுவரை முடிக்க முடியாமல் திணறிய பல விஷயங்களை இந்த ஆண்டு எளிதாக முடித்துக்காட்டுவீர்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மரியாதை உண்டாகும். பிள்ளைகளுக்குத் திருமண முயற்சிகளை மேற்கொள்ள உகந்த காலம் இது. மேலும் அவர்கள் படிப்பு உத்தியோகம் போன்றவற்றில் சிறந்து விளங்கும் ஓர் ஆண்டாக குரோதி வருடம் அமையும் என்று உறுதியாகச் சொல்லலாம். வீடு மனை வாங்கும் முயற்சிகள் பலிதமாகும். வெளிவட்டாரத்தில் கௌரவம் தேடிவரும். பதவிகளும் பொறுப்புகளும் தன்னால் அமையும். புதிய வாகன யோகம் உண்டு. அரசு தொடர்பான காரியங்களில் வெற்றி உண்டாகும்.

என்றாலும் ராசியில் சந்திரன் இருக்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால் ஆரோக்கியத்தில் மட்டும் அக்கறை செலுத்துங்கள். தேவையற்ற கவலைகளைச் சுமந்துகொண்டு திரியவேண்டாம். முன்கோபத்தைக் கட்டுப்படுத்த யோகா, தியானம் ஆகியன பயிலுங்கள். அவ்வப்போது ரத்த சர்க்கரை அளவையும் பரிசோதித்துக்கொள்ளுங்கள்.

குருபகவான் தற்போது உங்களுக்கு லாப வீட்டில் அமர்ந்து பலன் தருகிறார். எனவே 30.4.2024 வரை நீங்கள் நினைத்த காரியங்களை எளிதாக முடிக்கும் வல்லமை பெறுவீர்கள் படித்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பெரிய பெரிய பிரச்னைகளுக்குக் கூட எளிய தீர்வினைக் கண்டுபிடிப்பீர்கள். புதிய டிசைனில் நகை வாங்கி மகிழும் வாய்ப்பும் உண்டாகும். அனைத்து முயற்சிகளும் நல்ல முறையில் முடியும்.

குருபகவான் 1.5.24 முதல் உங்கள் ராசிக்கு விரைய வீடான ரிஷபத்தில் வந்து அமர்வதால் சுபச்செலவுகள் அதிகரிக்கும். வீண் விரையங்களும் ஏற்பட வாய்ப்புண்டு. சிலருக்குத் தூக்கமின்மை உண்டாகும். பணிச்சுமையும் அதிகரித்தவண்ணம் இருக்கும். யாருக்கும் வாக்குக் கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம். பணங்கள் அதிகரிக்கும். சிலருக்கு அதிகரிக்கும் செலவுகளால் கடன் வாங்கவும் நேரலாம். சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. இறைப்பணிகளில் நாட்டம் பிறக்கும். கோயில் பொதுக்காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். வாகனத்தில் செல்லும்போது கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

ராகு உங்கள் ராசிக்கு சாதகமாக பத்தாம் இடத்தில் அமர்ந்து பலன் தருவதால் கடினமான காரியங்களையும் எளிதாக முடிக்கும் வல்லமை பிறக்கும். குடும்பத்திலிருந்து வந்த சச்சரவுகள் நீங்கும். ஆன்மிகத்தில் மனம் செல்லும். சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறிந்துகொள்வீர்கள். சிலர் புதிய தொழில் தொடங்கவும் வாய்ப்புண்டாகும். உத்தியோகத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். கேது 4 -ம் வீட்டில் அமர்ந்து பலன்கொடுப்பதால் உங்களை வெற்றி பெற வைப்பார். சொத்துப் பிரச்னைகள் வந்தாலும் முடிவு உங்களுக்கு சாதகமாக்வே இருக்கும். இழுபறியாக வழக்குகள் கடும் முயற்சிக்கும்பின் வெற்றியாகும். இரவு நேர பயணங்களில் கவனம் தேவை. வீடு மாற வேண்டிய சூழல் உருவாகும். சிலர் இருக்கும் ஊரிலிருந்து, மாநிலத்திலிருந்து வேறு ஊர், மாநிலம் செல்ல வேண்டிய அமைப்பு உண்டாகும்.

14.10.24 முதல் 8.11.24 வரை 6 - ம் வீட்டிலே சுக்ரன் மறைவதனால் கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. தங்க ஆபரணங்கள், செல்போன் போன்றவைகளை இரவல் வாங்கவோ, தரவோ வேண்டாம்.

இந்தாண்டு முழுவதும் சனி ராசிக்கு 9 - ல் நின்று பலன் கொடுப்பதால் பெரிய காரியங்களைச் செய்து பாராட்டைப் பெறுவீர்கள். உங்கள் மதிப்பும் மரியாதையும் கூடும். சிலர் வாஸ்துபடி வீட்டை மாற்றி, விரிவுப்படுத்துவீர்கள். உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாகவும் செயல்படத் தொடங்குவீர்கள். தாழ்வான எண்ணங்களை தூக்கி எறிவீர்கள். பழைய பிரச்னைகள், சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதைக் கிடைக்கும்.

வியாபாரம்: தொழில் சூடுபிடிக்கும். பணியாளர்களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்குங்கள். தொழிலை விரிவு படுத்த இது ஏற்ற காலம் என்றாலும் புது முதலீடுகள் செய்யும் முன்பு நன்கு ஆலோசனை செய்யுங்கள். இரட்டிப்பு லாபம் உண்டு. பாக்கிகளை கறாராகப் பேசி வசூலியுங்கள். பங்குதாரர்கள் பணிந்து வருவார்கள். அறிவுப்பூர்வமாக சிந்திப்பதுடன் சந்தை நிலவரத்தையும் அறிந்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கட்டுமானப் பொருட்கள், பெட்ரோ&கெமிக்கல், போடிங், லாஜிங் வகைகளால் லாபம் அதிகரிக்கும். சிலர் புதிய கிளைகள் தொடங்குவார்கள்.

உத்தியோகம்: மே மாதம் முதல் உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் ஒதுக்கப்படுகிறோமோ என்ற தேவையற்ற சந்தேகம் உள்ளுக்குள் தோன்றி மறையும். சக ஊழியர்களை நம்ப முடியாது என்கிற உண்மையை உணர்வீர்கள். எனவே யாரையும் நம்பி எந்த ரகசியத்தையும் சொல்ல வேண்டாம். புரட்டாசி, கார்த்திகை, பங்குனி மாதங்களில் பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு.

மொத்தத்தில் இந்தத் தமிழ்ப் புத்தாண்டு உங்களை கடினமாக உழைக்க வைத்து, தன்னம்பிக்கையால் தலை நிமிரச் செய்யும்.

No comments:

Post a Comment